For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக கூட்டணியிலிருந்து ராமதாஸ் விலகியபோது பழிவாங்கியது ஜெ.தான்: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து முன்பு ராமதாஸ் விலகியபோது அவரைப் பழிவாங்கியது ஜெயலலிதாதான். திமுக யாரையும் அதுபோல பழிவாங்கியதில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

பொதுவாக எந்த ஒரு பிரச்சினைக்காகவும்-எம்.பி.க்கள் பதவி விலகுவது என்றால் லோக் சபா எம்.பி.க்கள் மட்டுமே பதவி விலகியுள்ளனர். ராஜ்ய சபா எம்.பி.க்கள் அதில் பங்கேற்கவில்லை. ராஜ்யசபா வேறு, லோக் சபா வேறு என்று கருதாமல், லோக்சபா தேர்தல் நடக்கும்போது அதை பார்லிமென்ட் தேர்தல் என்று ஒப்பந்தம் செய்து கொள்வது எந்த வகையில் நியாயம்? ( டாக்டர் ராமதாஸ்- நாளேடுகளில்-1.4.09).

பலே! பலே வந்தாரய்யா வழிக்கு! லோக்சபா தேர்தல் நடக்கும்போது, அதை பார்லிமென்ட் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொள்வது என்று ராமதாஸ் கேட்கிறார். ஆனால், கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது தி.மு.க.விடம் தொகுதி உடன்பாடு செய்து கொண்ட போது- தனது மகன் அன்புமணிக்காக ஒரு ராஜ்ய சபா இடம் ஒதுக்க வேண்டுமென்றும் ஒப்பந்தம் செய்து கொண்டு-இப்போது கூட பார்லிமென்ட் தேர்தலுக்காக அவர் அ.தி.மு.க.வுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில்(7+1) என்று, தன் மகனுக்காக ஒரு ராஜ்ய சபா இடத்துக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதை ஏனோ மறந்துவிட்டு, லோக் சபா தேர்தல் நடக்கும்போது அதை பார்லிமெண்ட் தேர்தல் என்று ஒப்பந்தம் செய்து கொள்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறார். இந்த கேள்வி, அவரையே பார்த்து அவர் கேட்டு கொள்கிற கேள்வியாக இருக்கிறதல்லவா?.

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்ட தீர்மானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. (ராமதாஸ் அறிக்கை-1.4.09)

கருணாநிதி: தீர்மானத்தில் "இந்த தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதை இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது'' என்று உள்ளது.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால்- தமிழகத்திலிருந்து சென்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்றுதான் பொருளே தவிர, பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று பொருள் கிடையாது. ஆனால், டாக்டர் ராமதாஸ் தன் அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் பொதுவாக மக்களவை உறுப்பினர் என்று கருதுவதும், செய்தி வெளியிடுவதும் மரபு என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியென்றால் நாடாளுமன்றம் கூடுகிறது என்று செய்தி வெளியிட்டால் மக்களவை மட்டும் கூடுகிறது என்றா பொருள்? மக்களவையும், மாநிலங்களவையும் கூடுகின்றது என்றுதானே பொருள்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து மனு கொடுப்பார்கள் என்றால், மாநிலங்களவை உறுப்பினர்களும் சேர்ந்து குறிப்பாக பா.ம.க. உறுப்பினர்களும் சேர்ந்து சென்றுதானே மனு கொடுக்கிறார்கள்.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் மக்களவை உறுப்பினர்கள்தான் என்றா பா.ம.க. கூறியது? உண்மையை வெளியே சொன்னால், பா.ம.க. நிறுவனருக்கு அது குதர்க்கமாக தெரிந்தால் நாம் அதிலே எதுவும் செய்வதில்லை.

தி.மு.க. எம்.பி.க்களின் பதவி விலகல் என்பது தமிழக மக்களை ஏமாற்றும் நாடகம் தான்( டாக்டர் ராமதாஸ் அறிக்கையில்)

கருணாநிதி: தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலகல் கடிதங்களை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத் தீர்மானத்திற்கு இணங்க என்னிடம் கொடுத்தது டாக்டர் ராமதாசின் கூற்றுப்படி ஏமாற்று நாடகம்.

தி.மு.க. ஆட்சி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இரண்டு முறை கலைக்கப்பட்டது என்பது நாடகம். இலங்கை தமிழர் பிரச்சினைக்காக நானும், பேராசிரியரும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ததும் நாடகம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 1956-ம் ஆண்டிலேயே பொதுக்குழுவிலே நான் தீர்மானத்தை முன்மொழிந்ததும் நாடகம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக நான் கைது செய்யப்பட்டு, சிறையிலே அடைக்கப்பட்டு என்னை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் 9 பேர் தீக்குளித்து செத்தார்களே, அதுவும் நாடகம்.

மாறாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவருடைய கூட்டணித் தலைவரான ஜெயலலிதாவும் தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பாடுபடுகிறார்கள், போராடுகிறார்கள்(?). அதுதான் நாடகம் இல்லை.

நேற்றைய தினம்( நேற்று முன்தினம்) நடைபெற்ற கூட்டத்தில் ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் பேசும்போது, கலைஞர் எடுத்த முயற்சிகளால்தான் எத்தனையோ நன்மைகள் வந்திருக்கின்றன' என்று சொன்னாரே, அதுகூட நாடகம்தான். தமிழ்நாட்டு மக்களே, உண்மையின் பிரதிபிம்பம்' டாக்டர் ராமதாஸ் சொல்லுகிறார், நம்புங்கள்-நம்புங்கள்-முடிந்தால்.

இயக்குனர் சீமானை பழிவாங்கும் நோக்கத்துடன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது போன்ற பழிவாங்கும் செயலைச் செய்வதற்கு கருணாநிதியை மிஞ்சிய ஆள் இல்லை'. (டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டியில் 1.4.2009)

கருணாநிதி: இயக்குனர் சீமானுக்கும், எனக்கும் எந்தவிதமான பகையும் கிடையாது. அவர் எனக்கு எதிராக எதுவும் செய்து விடவில்லை. அவரை பழிவாங்க வேண்டுமென்பதற்கு எந்தவிதமான காரணமும் கிடையாது என்பதை அவரே அறிவார். திரையுலகில் உள்ளவர்களும் அறிவார்கள். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் எல்லோருக்கும் அக்கறை உள்ளது. அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமே கிடையாது.

ஆனால் இயக்குனர் சீமான் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, கடுமையாக பேசி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதற்குப் பிறகாவது பேசும்போது நாகரீகமாகப் பேச வேண்டாமா?. புதுச்சேரியில் சீமான் என்ன பேசினார்?

இதோ அது:- நம் இன மக்களை அழிக்கும் நாட்டிற்கு துணை போவதும் அல்லாமல், அங்கு கிரிக்கெட் விளையாட தனது அணியை அனுப்பி இருக்கிற ஒரு வேசித் தனத்தை, ஈனத்தனத்தை செய்கிற ஒரு தேசத்தை எப்படி நாங்கள் நேசிப்பது? இங்கு ஈன சாதிக்குப் பிறந்த, 4 பேர், இந்தியா, இலங்கையில் விளையாடும் கிரிக்கெட்டை வேடிக்கை பார்க்கின்றவனாக இருக்கிறான்.

இதை சீமான் கேட்டால், சீமான் இந்திய தேசத்திற்கு எதிரானவன் என்று கைது செய்ய மட்டும் தெரிகிறது. இந்த நாட்டில் இறையாண்மை பேசித் திரிகிற வேசி மக்களுக்கு, காவிரி நதிநீர் வாங்கித் தர வக்கில்லை. இதற்குப் பெயர் பேச்சா?.

எல்லோரும் வேசி மக்களா ..

இறையாண்மை வேண்டுமென்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும்தான் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் வேசி மக்களா? கிரிக்கெட் விளையாட்டை யார்தான் பார்க்கவில்லை? திரை உலகத்திலே உள்ளவர்கள் பார்க்கவில்லையா? சீமானுக்கு வேண்டியவர்களே பார்க்கவில்லையா? அவர்கள் எல்லாம் வேசி மக்களா? அதையெல்லாம் டாக்டர் ராமதாஸ் சரி என்கிறாரா? இதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது பழிவாங்கும் செயலா?

எது பழிவாங்கும் செயல்?

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து டாக்டர் ராமதாஸ் விலகிய போது ஒரு போராட்டத்திலே ஈடுபட்டார் என்பதற்காக அவரை ஜெயலலிதா கைது செய்தாரே? அதுதான் பழிவாங்கும் செயல்.

அவரை விடுதலை செய்யவேண்டுமென்று ஜெயலலிதாவை டாக்டர் ராமதாசின் துணைவியார் சந்தித்தார் என்று அசிங்கமாக, அநாகரிகமாக ஒரு அறிக்கை விடுத்து டாக்டர் ராமதாசை அவமானம் செய்தாரே, அதுதான் பழிவாங்கும் செயல் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X