3வது அணியின் துணையுடன், காங். ஆதரவுடன் பிரதமராவாரா பவார்?

வெள்ளிக்கிழமை, மே 15, 2009, 12:15 [IST]
டெல்லி: பிரதமர் பதவி மீது எப்போதுமே கண் வைத்துள்ள சரத் பவாருக்கு அது இப்போது கை கூடுவது போன்ற சாதக நிலை உருவாகி வருகிறது.

நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ளன. ஆனால் ஆட்சியமைக்கத் தேவையான ஆதரவைத் திரட்டும் முயற்சியி்ல காங்கிரஸும், பாஜகவும் அதற்குள் மும்முரமாகி விட்டன.

யார் யார் நமக்கு சாதகமாக இருப்பார்கள் என்று கணக்கெடுத்து வைத்து்க கொண்டு அவர்களுக்கு தூதுகள் விடும் படலம் தொடங்கியுள்ளது.

அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் குறிப்பாக ஐக்கிய ஜனதாதளம், அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.

அதேபோல பிஜூ ஜனதாதளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜக வலை வீசி வருகிறது.

தற்போது தம் வசம் உள்ள எந்தக் கட்சியும் வேறு எங்கேயும் போய் விடாமல் தடுக்கும் முயற்சியில் இடதுசாரிகள் கவலை கலந்த பயத்தில் உள்ளனர்.

இப்படி ஆளாளுக்கு ஆதரவுக்கு ஆட்களைத் திரட்டி வரும் நிலையில், பிரதமர் பதவிக்கு யார் என்ற போட்டியும் மறுபக்கம் சத்தம் போடாமல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரமதர் பதவிக்கான தீவிரப் போட்டியில் குதித்துள்ளாராம்.

பிரதமர் பதவியை தனக்குத் தருமாறு இதுவரை காங்கிரஸை அவர் கேட்கவில்லை. இருப்பினும், தனக்கு இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால் பிரதமர் பதவிக்கு போட்டியிட அவர் தீர்மானித்து விட்டாராம்.

இதுகுறித்து பிஜூ ஜனதாதள தலைவரும், ஒரிசா முதல்வருமான நவீன் பட்நாயக் கூறுகையில், சரத் பவார் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர். அவர் பிரதமரானால் நாங்கள் ஆதரிப்போம் என்று கூறியுள்ளார்.

அதேபோல தேர்தல் பிரசாரத்தின்போதே சரத்பவார் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்பட்டால் ஆதரிப்பேன் என ஜெயலலிதாவும் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல இடதுசாரி கட்சிகளில் நிறையப் பேர் பவாருக்கு நண்பர்கள்தான். எனவே தன்னை பிரதமராக நிறுத்தினால் ஒட்டுமொத்த மதச்சார்பற்ற கட்சிகளையும் ஆட்சியமைக்க இழுக்க முடியும் என நம்புகிறார் பவார்.

இதைச் சொல்லியே காங்கிரஸிடம் பிரதமர் பதவியை தனக்கு கேட்கப் போகிறாராம் பவார்.

ஏற்கனவே சோனியா காந்தி, பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேறு கூட்டணிக்குப் போய் விடக் கூடாது என்று கேட்டுக் கொள்வதற்காக நடந்த சந்திப்பு இது என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தனது விருப்பத்தை பவார் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தனக்கு ஆதரவு கேட்பதற்காக சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா மாயாவதி, நிதீஷ் குமார், நவீன் பட்நாயக் ஆகியோருடன் பேசியுள்ளாராம் பவார். இவர்களில் நிதீஷ்குமார் பாஜக கூட்டணியில் இருக்கிறார். மற்றவர்கள் 3து அணித் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர நான்காவது அணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரின் ஆதரவையும் கோரியுள்ளாராம் பவார்.

பவார் தொடர்பு கொண்டுள்ள அனைவருமே காங்கிரஸுடன் சமீப காலமாக லடாயில் இருப்பவர்கள் என்பதும் முக்கியமானது.
  Read:  In English 
மகாராஷ்டிர மாநிலத்தவர் என்ற அடிப்படையில் பவார் பிரதமர் பதவிக்கு வந்தால் அவரை ஆதரிப்போம் என ஏற்கனவே சிவசேனாவும் உறுதியளித்துள்ளது.

இப்படி பல வகைகளிலும் தனக்கு ஆதரவு இருப்பதால் நிச்சயம் இம்முறை பிரதமராகி விட முடியும் என பவார் தரப்பு நம்புகிறதாம்.


1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets