For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அமைச்சரவையின் தமிழ் முகங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இந்த முறை பத்து பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து மத்திய அமைச்சர்களாகியுள்ளனர்.

கேபினட் அமைச்சர்கள்

1. ப.சிதம்பரம்

7 முறை சிவகங்கை தொகுதியிலிருந்து வெற்றி பெற்று மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளார் ப.சிதம்பரம். கடந்த முறையை வகித்த உள்துறை பொறுப்பே மீண்டும் சிதம்பரத்திற்குக் கிடைத்துள்ளது.

காங்கிரஸ் சார்பில் ஐந்து முறையும், தமாகா சார்பில் 2 முறையும் வென்றவர் ப.சிதம்பரம்.

நிதித்துறை, உள்துறை ஆகிய பொறுப்புகளை வகித்த அனுபவம் உடையவர்.

2. தயாநிதி மாறன்

மத்திய சென்னை தொகுதியிலிருந்து 2வதுமுறையாக வென்று, 2வது முறையாக மத்திய கேபினட் அமைச்சராகியுள்ளார்.

2004ல் முதல் முறை வென்ற தயாநிதி மாறன், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் 2வது முறையாக வெற்றி பெற்றார்.

கடந்த அமைச்சரவையில், தொலைத் தொடர்புத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார்.

மிகக் குறுகிய காலத்திலேயே டெல்லியில் தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கிக் கொண்ட திறமைசாலி.

3. ஜி.கே.வாசன்

ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வரும் ஜி.கே.வாசன் இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிட்டு வென்றில்லை.

தந்தை மூப்பனார் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சிறிது காலம் நடத்தி வந்த வாசன் பின்னர் அதைக் கலைத்து விட்டு காங்கிரஸுடன் ஐக்கியமானார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். பின்னர் மத்திய இணை அமைச்சரானார். கடந்த அமைச்சரவையில், புள்ளியியல் துறை இணை அமைச்சராக தனிப் பொறுப்புடன் செயல்பட்டார்.

தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிலேயே வலுவான கோஷ்டி வாசன் கோஷ்டிதான். இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வென்றவர்களில் பெரும்பாலானோர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களே.

கடந்த முறை இணை அமைச்சராக இருந்த வாசன் இந்த முறை பதவி உயர்வு பெற்று கேபினட் அமைச்சராகியுள்ளார்.

4. ராஜா

பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் 1963ம் ஆண்டு ஆண்டிமுத்து - சின்னப் பிள்ளை தம்பதியின் மகனாகப் பிறந்தார் ராஜா.

பரமேஸ்வரி என்ற மனைவியும், மயூரி என்ற ஒரே மகளும் உள்ளனர்.

எம்.ஏ., எம்.எல். படித்துள்ள ராஜா, திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 1996ம் ஆண்டு முதல் முறையாக பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. ஆனார்.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுகவின் தலித் முகம் ராஜா. கடந்த முறை பெரம்பலூர் தொகுதி எம்.பியாக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். இந்த முறை நீலகிரி எம்.பியாக அமைச்சராகியுள்ளார்.

சுற்றுச்சூழல்துறை, தகவல் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

தயாநிதி மாறன் கடந்த அமைச்சரவையிலிருந்து விலகியவுடன் அவர் வகித்து வந்த தொலைத் தொடர்புத்துறை இவர் வசம் வந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெரும் நெருக்கடிக்கு ஆளானபோதிலும் கூட அதில் சிக்காமல் தப்பியவர். மீண்டும் அதே துறையை வகிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

5. மு.க.அழகிரி

எடுத்த எடுப்பிலேயே பெரிய இடத்திற்கு வந்த மதுரை ராஜா மு.க.அழகிரி.

முதல்வர் கருணாநிதி, தயாளு அம்மாள் தம்பதியின் மூத்த மகன் அழகிரி. இளைய மகன் ஸ்டாலின் நீண்ட காலமாகவே முன்னணித் தலைவராக விளங்கி வந்தபோதிலும், சமீப காலமாகத்தான் அடுத்தடுத்து பதவிகள் அழகிரியைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன.

திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், தென் தமிழகத்தில் இவரது ஆசி இல்லாமல் திமுகவில் எந்தத் துரும்பையும் எடுக்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் கூட சமீப காலம் வரை எந்தப் பதவியையும் வகிக்காமல் இருந்தார்.

லோக்சபா தேர்தலுக்கு முன்புதான் தென் மாவட்ட திமுக அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மதுரை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இப்போது கேபினட் அமைச்சராகவும் ஆகி விட்டார்.

சென்னையில் பிறந்தவர் என்றாலும் கூட மதுரை மண்ணின் மைந்தராகி விட்ட அழகிரியிடம் மதுரை மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றனர்.

சென்னை மாகாணக் கல்லூரியில் பி.ஏ. படித்தவர். மதுரைக்கு 1980ம் ஆண்டு வந்து செட்டிலானவர். காந்தி என்ற மனைவியும், ஒரு மகன், இரு மகள்களும் உள்ளனர்.

திமுகவில் அசைக்க முடியாத நிலையில் இருக்கும் அழகிரி, மத்திய அமைச்சராகவும் ஜொலிப்பாரா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.

இணை அமைச்சர்கள்

1. பழனி மாணிக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணி கிராமத்தைச் சேர்ந்தவர். சட்டப் படிப்பு படித்தவர்.

தஞ்சை தொகுதியில் 1984ம் ஆண்டு முதல் மூன்று முறை போட்டியிட்டுத் தோல்வியுற்றார். இருப்பினும் 1996 முதல் இங்கு அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். தற்போது இவர் வென்றிருப்பது 5வது முறையாகும்.


கடந்த அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். இந்த முறையும் மத்திய அமைச்சராகியுள்ளார். இவர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

2. நெப்போலியன்

நடிகராக இருந்து பின்னர் திமுகவில் இணைந்து பிரசார பீரங்கியாக செயல்பட்டவர். இவரது தாய்மாமன் கே.என். நேரு முதல்வர் கருணாநிதியின் விசுவாசிகளில் ஒருவர், மாநில அமைச்சர்.

முன்பு வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். பின்னர் மயிலாப்பூரில் போட்டியிட்டு எஸ்.வி.சேகரிடம் தோல்வி அடைந்தார்.

இந்த முறை வட சென்னை தொகுதியைக் கேட்டிருந்தார். ஆனால் கட்சித் தலைமை அவரை பெரம்பலூரில் நிறுத்தியது. அங்கு வெற்றி பெற்று இப்போது டெல்லி அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நெப்போலியன்.

நடிகராக, அரசியல்வாதியாக இருந்தபோதிலும், ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றையும் சத்தமின்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நெப்போலியன்.

ஜெயசுதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.

3. ஜெகத்ரட்சகன்

விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அனுசுயா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

முன்பு அதிமுகவில் இருந்தவர். இப்போது திமுகவின் அரக்கோணம் தொகுதி எம்.பி.

அரக்கோணம் தொகுதியில் அதிமுகவும், திமுகவும் தலா ஒருமுறை மட்டுமே வென்றுள்ளன. அந்த இரண்டு முறையும் இந்த இரு கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றவர் என்ற தனிப் பெருமை ஜெகத்ரட்சகனுக்கு உண்டு.

1980 முதல் 84வரை அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். 1984 முதல் 89 வரை அரக்கோணம் தொகுதி அதிமுக எம்.பியாக இருந்தார். 1999முதல் 2000 வரை திமுக எம்.பியாகவும் இருந்தார்.

ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஆர்.எம். வீரப்பனோடு சேர்ந்து அதிமுகவிலிருந்து வெளியேறியபோது எம்.ஜி.ஆர். கழகத்தில் செயல்பட்டார். வீர வன்னியர் பேரவை என்ற அமைப்பை நடத்தினார். அதேபோல ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் நடத்தி வந்தார்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தனது கட்சியை திமுகவுடன் இணைத்து அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் மத்திய அமைச்சரான ஆர்.வேலுவை தோற்கடித்தார். இப்போது மத்திய இணை அமைச்சராகியுள்ளார்.

4. காந்தி செல்வன்

நாமக்கல் தொகுதியிலிருந்து திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் காந்தி செல்வன்.

நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
வசந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலை நடத்தி வருகிறார்.

எம்.ஏ., எம்.பில் படித்துள்ள காந்தி செல்வன் முதல் முறையாக எம்.பியானவர். எடுத்த எடுப்பிலேயே அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார். இவர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

புதுச்சேரி நாராயணசாமி

புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ள நாராயணசாமி 2வது முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார்.

கடந்த முறை ராஜ்யசபா எம்.பியாக அமைச்சர் பதவி வகித்தார். இந்த முறை லோக்சபா எம்.பியாக பதவி பெற்றுள்ளார்.

வன்னியர் சமூகப் பிரமுகரான நாராயணசாமி, புதுச்சேரியில் பாமக வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸை, கடும் போட்டிக்கு மத்தியில் வீழ்த்தினார்.

புதுச்சேரி காங்கிரஸ் கோஷ்டிகளில் இப்போதைக்கு நாராயணசாமியின் கையே ஓங்கியுள்ளது. சோனியா காந்தியின் தீவிர விசுவாசிகளில் ஒருவர். சிறந்த பேச்சாளர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X