சீனாவில் அடுத்தடுத்து 9 முறை பூகம்பம்-ஒருவர் பலி

வெள்ளிக்கிழமை, ஜூலை 10, 2009, 13:03 [IST]
பீஜிங்: சீனாவின் தென் மேற்கு பகுதியில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த 9 பூகம்பங்களில் ஒருவர் பலியானார். 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தார்கள். சுமார் 75 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

சீனாவின் தென் மேற்கு பகுதியான யுனான் மாகாணத்தில் இன்று காலை 7.19 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது அப்பகுதியில் உள்ள சுமார் 6 கவுண்டிகளில் உணரப்பட்டது.

சுமார் 10 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. மேலும் 65 ஆயிரம் வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 13 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பூகம்பத்தில் 50 வயதான பெண் ஒருவர் பலியானார். இடிபாடுகளில் சிக்கி கொண்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 325 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பூகம்பம் குன்மிங் நகரில் இருந்து 200 கிமீ., தொலைவில் உள்ள குவான்டுன் நகரில் மையம் கொண்டதாக தெரிகிறது.
  Read:  In English 
இந்த பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் 8 பூகம்பங்கள் ஏற்பட்டது. இவை 3 முதல் 4.1 ரிக்டர் அளவு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கடைசி பூகம்பம் காலை 11.09 மணிக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் வீடுகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதில் சீன அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets