மாயாவதி குறித்து அவதூறு-உபி காங் தலைவி கைது!

வியாழக்கிழமை, ஜூலை 16, 2009, 12:28 [IST]
லக்னெள: முதல்வர் மாயாவதியை ஜாதிரீதியாக விமர்சித்து தரக்குறைவாகப் பேசியதாக உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுனா ஜோஷி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு 14 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கண்டித்து இன்று மக்களவையிலும் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் எம்பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மாயாவதி பற்றி அவர் அவதூறான கருத்துக்களைப் பேசியதாக அவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். அவர் மாயாவதியை ஜாதிரீதியாக விமர்சித்ததாகத் தெரிகிறது.

டெல்லிக்கு செல்லும் வழியில் காசியாபாத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்திய தண்டனை சட்டத்தின் கீழும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஏடிஜிபி பிரிஜ்லால் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரீடா 14 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந் நிலையில் லக்னெளவில் உள்ள ஜோஷியின் இல்லத்தை நேற்றிரவு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தாக்கி வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரீடாவின் கைது, வீட்டுக்கு தீ வைப்பு குறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் கேள்வி எழுப்பியபோது பகுஜன் சமாஜ் எம்பிக்களுக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அமளி ஏற்பட்டது.

இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே மாயாவதியை ஜாதிரீதியாக விமர்சித்த ரீடாவின் பேச்சுக்கு காங்கிரசிலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அவர் மீது சோனியாவும் நடவடிக்கை எடு்ப்பார் என்று தெரிகிறது.

சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்-பகுஜன்:

இதற்கிடையே முதல்வர் மாயாவதி குறித்து மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசிய உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணாவின் செயலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கோரியுள்ளது.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திரா நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவரின் அவதூறுப் பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா மூலமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ரீட்டாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
  Read:  In English 
ரீட்டாவின் பேச்சு மிகவும் அவமானகரமானது, ஜாதிய வெறியை வெளிப்படுத்தும் வகையிலான பேச்சு அது. உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் இவ்வளவு பேசியுள்ள நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

இதன் மூலம் ரீட்டாவின் பேச்சுக்கு காங்கிரஸ் மேலிடத்தின் ஆதரவும், ஆசியும் இருப்பதாகவே கருதத் தோன்றுகிறு என்றார் சந்திரா.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets