For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை தோல்வி?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: 1998ம் ஆண்டு போக்ரானி்ல் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனை வெற்றி பெறவில்லை என்று அந்த சோதனையை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்த மூத்த விஞ்ஞானி டாக்டர் கே.சந்தானம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால், இதை முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு குண்டு சோதனை நடத்திய குழுவுக்கு தலைமை வகித்தவருமான அப்துல் கலாம் மறுத்துள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ராஜஸ்தானின் போக்ரான் பாலைவனப் பகுதியி்ல் இந்த அணு குண்டு சோதனையை அப்போதைய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அப்துல் கலாம் தலைமையிலான குழு நடத்தியது.

மே 11, மே 13 என இரு நாட்களில் சக்தி 1, சக்தி 2, சக்தி 3, சக்தி 4, சக்தி 5 என மொத்தம் 5 அணு குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஒன்று 'தெர்மோ நியூக்ளியர் பாம்' எனப்படும் 'ஹைட்ரஜன் குண்டு'. ('nuclear fusion' எனப்படும் அணுக்களை இணைப்பதன் மூலம் வெடிக்கும் குண்டு இது, மற்ற 4 குண்டுகளும் 'nuclear fission' எனப்படும் அணு பிளப்பை அடிப்படையாகக் கொண்டவை).

ஆனால், இதில் இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றி பெறவில்லை என்று சந்தானம் இப்போது தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவான டி.ஆர்.டி.ஓவின் சார்பில் அந்த குண்டு சோதனையின் திட்ட இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சோதனை நடத்தப்பட்ட இடத்தை தேர்வு செய்து அதை தயார் செய்தவரும் இவரே.

அங்கு நடத்தப்பட்ட முதல் அணுகுண்டு சோதனையே ஹைட்ரஜன் பாம் சோதனை தான். இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் 43 முதல் 45 கிலோ டன் சக்தி வெளிப்பட்டிருக்க வேண்டும். அவ்வளவு சக்தி வெளிப்பட்டதாக இந்தியாவும் கூறியது.

ஆனால், இந்த குண்டுவெடிப்பை கணக்கிட்ட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் புவியியல் ஆய்வு மையங்கள் அவ்வளவு சக்தி வெளியாகவில்லை என்று அப்போதே கூறின. ஆனால், அதை அப்போதும் இந்தியா மறுத்தது.

(மே 11ல் நடத்தப்பட்ட 3 அணு குண்டு சோதனைகளையும் சேர்த்து மொத்தமே 10 முதல் 15 கிலோ டன் சக்தி தான் வெளிப்பட்டதாக அமெரிக்கா கூறியது குறிப்பிடத்தக்கது. இதாவது பரவாயில்லை, மே 13ம் தேதி இந்தியா நடத்திய 2 அணு குண்டு சோதனைகள் நடக்கவேயில்லை என்றும் அமெரிக்கா கூறியது. இன்னொரு விஷயம்.. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் அணு குண்டு சோதனை நடத்தியது. 6 குண்டுகளை சோதித்ததாகக் கூறியது. அதில் 2 மட்டும் தான் அணுகுண்டுகளாம்.. மற்ற 4 குண்டுகளும் வெறும் 'டுபாக்கூர்' என்கிறது அமெரிக்கா).

இந் நிலையில் தான் அந்தச் சோதனை தோல்வி அடைந்ததாக சந்தானம் இப்போது அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், சோதனை முடிவுகள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பது சோதனை நடத்திய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தெரியும். இதனால் இந்தியா அவசரப்பட்டு அணு குண்டு பரிசோதனைக்குத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் (Comprehensive Nuclear Test Ban Treaty-'சி.டி.பி.டி) கையெழுத்து போட்டுவிடக் கூடாது என்றார்.

இதன்மூலம் இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்று சந்தானம் கோருவதாகத் தெரிகிறது.

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்ததையடுத்து இந்தியாவுக்கு எரிபொருள் தர பல நாடுகள் முன் வந்தாலும் சி.டி.பி.டியில் கையெழுத்திடுமாறு இந்தியாவுக்கு நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. இதனால் இதில் மத்திய அரசு விரைவிலேயே கையெழுத்திடலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இதனால் தான் சந்தானம் உண்மையைப் போட்டு உடைத்துள்ளதாகத் தெரிகிறது. நாம் இன்னும் முழுமையான ஹைட்ரஜன் அணு குண்டு தயாரிக்கும் திறனைப் பெறாத சூழலில் இதில் கையெழுத்துப் போட்டுவிட்டால் எதிர்காலத்தில் சோதனைகள் நடத்த முடியாமல் போவதோடு நமது அணு சக்தித் திறனை மேம்படுத்தவும் வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பது சந்தானத்தின் வாதம். (அடுத்த வாரம் சிடிபிடி குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது)

அப்துல் கலாம் மறுப்பு:

இது குறித்து டாக்டர் அப்துல் கலாம் கூறுகையில், நாம் நடத்திய சோதனைகள் எதிர்பார்த்த பலனைத் தந்தன. அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம். அந்த சோதனைகள் முழு வெற்றி பெற்றன.

சோதனைகள் நடத்தப்பட்டபோது பதிவான நில அதிர்வுகள் தொடர்பான டேட்டா, குண்டு வெடிப்பு நடத்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட கதிர்வீச்சு அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சொல்கிறேன்.. அந்தச் சோதனைகள் முழு அளவில் வெற்றி பெற்றன. சோதனைகளில் நாங்கள் நினைத்த அளவுக்கு சக்தி உண்டானது என்றார்.

ஆர்.சிதம்பரமும் மறுப்பு:

அந்த சோதனைகள் நடத்தியதில் மிக முக்கிய பங்கு வகித்தவரான இந்திய அணு சக்திக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.சிதம்பரம் கூறுகையில், சந்தானத்தின் கருத்து அறிவியல்பூர்வமாக தவறானது, மோசமானது.

தனது கருத்துக்கு வலு சேர்க்க சந்தானம் ஏதாவது புதிய டேட்டா வைத்திருக்கிறாரா?. அவர் ஒரு விஞ்ஞானி என்ற வகையில் ஆதாரம் இல்லாமல் இல்லாமல், லாஜிக் இல்லாமல் எதையும் கூறக் கூடாது. அவரிடம் இது தொடர்பாக எங்களுக்குத் தெரியாத ஏதாவது விவரங்கள் இருந்தால் அதைத் தரலாம். அதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

ஹைட்ரஜன் பாமை வெடிக்கச் செய்ய 14 MeV அளவுக்கு நியூட்ரான்கள் உருவாக வேண்டும். அப்போது நடந்த சோதனையின் முடிவில் 14 MeV நியூட்ரான்கள் உருவானது உறுதியானது. அப்படியிருக்க சோதனை தோல்வி என்று எதை வைத்துச் சொல்கிறார் சந்தானம்? என்று கேட்டுள்ளார் சிதம்பரம்.

கலாம் ஏவுகணை விஞ்ஞானி தான்- சந்தானம்:

இந் நிலையில் ஒரு இணையத் தளத்துக்கு சந்தானம் இன்று அளித்துள்ள பேட்டியில்,

நான் ஏற்கனவே சொன்னது போல அந்தச் சோதனைகளால் நினைத்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. அந்த குண்டுகள் முழு சக்தியை வெளிப்படுத்தவில்லை. அந்தச் சோதனை 60 சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றது.

இதை அப்போதே பல சர்வதேச நிபுணர்களும் கூறினர். நான் சொல்வது தவறு என்று டாக்டர் அப்துல் கலாம் சொல்கிறார். உண்மையில் அவர் அணு விஞ்ஞானி அல்ல, அவர் ஒரு ஏவுகணை விஞ்ஞானி மட்டும் தான். அவருக்கு முழு விவரம் தெரியாது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X