மத்திய அரசின் இந்தித் திணிப்பு- இளந்தமிழர் இயக்கம் கண்டனம்

திங்கள்கிழமை, செப்டம்பர் 7, 2009, 14:06 [IST]
சென்னை: இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் வேற்று இனத்தவரை பணியில் அமர்த்தி தமிழ் இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை, கலப்பினத்தவர்கள் வாழும் மாநிலமாக மாற்றும் செயல்திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இதைக் கண்டித்தும் சென்னை ரயில் நிலையத்தில் தமிழில் விண்ணப்பம் கொடுத்த பெண்ணிடம் இந்தி ஊழியர்கள் முறைகேடாக நடந்து கொண்டதைக் கண்டித்தும் தமிழ் ஆர்வலர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக இளந்தமிழர் இயக்கம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை...

மயிலாப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த 25.08.09 அன்று மயிலாப்பூரைச் சேர்ந்த இலட்சுமி என்பவர் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு நிலையத்தில் தமிழில் முன்பதிவுச் சீட்டு பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்.

அவ்விண்ணப்பத்தை அங்கிருந்த வடநாட்டைச் சேர்ந்த ஊழியர் விண்ணப்பம் தமிழில் இருப்பதைக் கண்டு, விண்ணப்பத்தை தூக்கி விசிறியெறிந்துள்ளார். இதனால் இலட்சுமி அவமானம் அடைந்தார். இலட்சுமி மற்றும் அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் மயிலாப்பூர் தொடர்வண்டி நிலைய முன்பதிவு மேற்பார்வை அலுவலர் இளங்கோவன் என்பவரிடம் முறையிட்டு புகார் செய்ய முயன்றனர்.

அப்போது அங்கிருந்த இந்தி ஊழியர்கள் 4 பேர் சேர்ந்து கொண்டு இனவெறியுடன் இலட்சுமியையும் அவரது கணவரையும் தாக்க முயன்றுள்ளனர். இதனை அங்கிருந்த மேலாளரும் கண்டித்துள்ளார்.

இதையடுத்து 5ம் தேதி பிற்பகல் 12 மணியளவில் இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமையில் இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் மயிலாப்பூர் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்த மேற்பார்வையாளர் அலுவலகத்தைத் திடீர் முற்றுகையிட்டு நடந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இலட்சுமியின் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேட்டனர். ஆனால், நிர்வாகத் தரப்பு இன வெறியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மயிலாப்பூரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாட்டின் தேசிய மொழியான தமிழ் மொழி அறியாத வடமாநிலத்தவர்களும், மலையாளிகளும் பெரும் எண்ணிக்கையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் இவ்வாறு வேற்று இனத்தவரை பணியில் அமர்த்தி தமிழ் இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை, கலப்பினத்தவர்கள் வாழும் மாநிலமாக மாற்றும் செயல்திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

கடந்த வாரம் சென்னையில் நடத்தப்பட்ட நடுவண் அறிவியல் மற்றும் தொழில்துறை தொடர்பான ஆராய்ச்சி(சி.எஸ்.ஆர்.) நிறுவனத்திற்கான தேர்வில் 20 கட்டாய இந்தி வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மாணவர்கள் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதால் பணிக்கும் தேர்வு பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான, இந்திய அரசின் தொடர்ச்சியான இந்தித் திணிப்புப் போக்கை இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

1956-இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களைத் தகர்க்கும் விதமாக வேற்று மாநிலத்தவரை தமிழ்நாட்டில் வேண்டுமென்றேக் குடியேற்றம் செய்கிறது இந்திய அரசு.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் நடுவண் அரசு அலுவலகங்களின் பணியிடங்களை, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்.

இக்கோரிக்கையை முன்வைத்தும், இலட்சுமி அவர்களின் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளையும், தமிழ் உணர்வாளர்களையும் திரட்டி போராட்டங்கள் நடத்துவோம் என்று எச்சரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST