
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ரோஜர் பெடரர், ஸ்டேடியத்தில் ஒரு குழந்தை வீறிட்டு அழுததால் தனது குழந்தையின் ஞாபகம் வந்து, வேகமாக ஆடி எதிர் வீரரை வீழ்த்தியதாக கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பெடரரும், டோமி ரோட்ரிடோவும் நான்காவது சுற்று ஆட்டத்தி்ல் மோதினர். இந்தப் போட்டியில், பெடரர் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டியின்போது சுவாரஸியமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, முதல் செட்டில் 5-5 என்ற கணக்கில் இரு வீரர்களும் சம நிலையில் இருந்தனர். ரோட்ரிடோ கடும் போட்டியைக் கொடுப்பதாக உணர்ந்தார் பெடரர். போட்டி இழுத்துக் கொண்டு போகப் போவதாகவும் உணர்ந்துள்ளார்.
அந்த சமயத்தில் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ஒரு தம்பதியின் குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. நிசப்தமான அந்த ஸ்டேடியதத்தில் திடீரென குழந்தை அழுததும், பெடரருக்கு தனது இரட்டைக் குழந்தைகள் ஞாபகம் வந்து விட்டதாம்.
அதன் பின்னர் ஆட்டத்தில் வேகத்தைக் கூட்டினாராம். ரோட்ரிடோவை எழுந்திருக்கவே விடாமல் தொடர்ந்து வேகமாக ஆடிய பெடரர், வெற்றி பெற்ற பின்னர்தான் ஓய்ந்தாராம்.
ரோட்ரிடோவை 2002ம் ஆண்டு முதல் இதுவரை எட்டு முறை வீழ்த்தியுள்ளார் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியை முடித்ததும் வேகமாக தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தார் பெடரர். அங்கு 46 நாட்களுக்கு முன்பு பிறந்த தனது குழந்தைகள் சார்லீன் மற்றும் மைலாவைப் பார்த்ததும்தான் அவருக்கு நிம்மதி வந்ததாம்.
ரோட்ரிடோவை வீழ்த்தியதில் பெடரர் ஒரு சாதனையும் செய்துள்ளார். அதாவது தொடர்ந்து 22வது முறையாக முக்கியப் போட்டி ஒன்றின் காலிறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.
இது பெடரர் கதை, 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜான் மெக்கன்ரோ கதை ரொம்ப வித்தியாசமானது....
20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நியூயார்க் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில், நடந்த அமெரிக்க ஓபன் போட்டியின்போதும், ஒரு குழந்தை அழுதது. அப்போது ஆடிக் கொண்டிருந்தவர் டென்ஷன் சிகாமணி ஜான் மெக்கன்ரோ.
குழந்தை ஒன்று திடீரென அழுததும் டென்ஷன் ஆகி விட்டார் மெக்கன்ரோ. ஆடுவதை நிறுத்திய அவர், ஸ்டேடிய ஊழியர்களை அழைத்து உடனே குழந்தையை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள், என்னால் ஆட முடியவில்லை என்றார் கோபத்துடன்.
பிறகென்ன, குழந்தையுடன் வந்திருந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றிக் கூட்டிச் சென்றனர் ஊழியர்கள். அதன் பிறகுதான் மெக்கன்ரோ ஆட்டத்தைத் தொடர்ந்தார்.


















