For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அட்டாக் பாண்டிகள்''-பிரதமருக்கு ஜெ எச்சரி்க்கை!

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: திமுக பிரமுகர்களின் மகன்களுக்கு தொழில் ரீதியாக உதவி செய்யுமாறு உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதருக்கு அமைச்சர் அழகிரியின் அலுவலகம் சிபாரிசு கடிதம் அனுப்பியது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

மேலும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமர் மன்மோகன் சிங் மீது அனுதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய இயலாது. பொருளாதார மந்தநிலை, வேலையில்லாத் திண்டாட்டம், நிறுவனங்கள் மற்றும் சேவை நிலையங்கள் மூடும் அபாயம், தொழிலாளர் அமைதியின்மை, விண்ணை முட்டும் விலைவாசி, சீன ஊடுருவல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டகாசம், பாகிஸ்தான் என பல்வேறு பிரச்சனைகளை பிரதமர் கையாள வேண்டியிருக்கிறது.

அமைச்சரவை சகாக்களிடமிருந்து எந்தவிதப் பிரச்சனைகளும் இல்லாமல் அவர் ஆட்சி செய்யலாம். ஆனால், அதற்கு திமுகவினர் இடம்பெறாத அமைச்சரவையை அவர் நடத்த வேண்டும்.

திமுக அரசின் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி ஒருவழியாக டெல்லியில் அமர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் என்ற பொறுப்பை திடீர் என்று ஏற்ற பிறகு, தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கே அவருக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.

டெல்லி ரயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்த தமிழர்களுக்கு பிரயாணச் சீட்டுகளை வாங்கிக் கொடுத்தும், கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு ஓடிபோய் உதவி செய்தும், தான் இத்தனை நாட்களாக கட்டிக் காத்து வந்த தெருச் சண்டைக்காரர் என்ற தோற்றத்தை மாற்றும் முயற்சியில் மனப்பூர்வமாக ஈடுபட்டு வருவதுபோல் தெரிகிறது.

"முதலீடு வாய்ப்புகள்'' குறித்து கண்டறிய உஸ்பெகிஸ்தான் வரவிருக்கும் இரண்டு திமுக தலைவர்களின் மகன்களுக்கு உதவி செய்யுமாறு, அங்குள்ள இந்தியத் தூதர் பேராசிரியர் சையது மனல்ஷா அல்குவாத்ரிக்கு, அழகிரி அறிவுரை வழங்கிய சர்ச்சை தான் தற்போது ஊடகங்களில் மையமான விவாதப் பொருளாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 11ம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் இந்திய தூதருக்கு நேரிடையாகவே அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அழகிரியின் தனிச் செயலாளர் பிரதீப் யாதவ் கையொப்பமிட்ட அந்தக் கடித்தில், இந்தக் கடிதம் அமைச்சரின் அறிவுரைப்படி எழுதப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.கே.பி. சுந்தரம் மற்றும் முகுந்த் விஜயன் ஆகியோரின் வியாபார நோக்கங்கள் குறித்து அந்தக் கடிதத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் மதுரை மாவட்ட திமுக செயலாளரின் மகன். மற்றொருவர் மூன்று முறை திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே.சி.பழனிசாமியின் மகன்.

உஸ்பெகிஸ்தான் "முதலீடு செய்வதற்குரிய நல்வாய்ப்புகளை'' கண்டறியவும், 2009 செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அங்குள்ள முக்கிய தொழிலதிபர்களை சந்திக்கவும் வர இருக்கும் இவர்கள் இருவரும் "புகழ்பெற்ற முதலீட்டு ஆலோசகர்கள்'' என்று அவர்களைப் பற்றி புகழந்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யுமாறு தாங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்'' என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள், அமைச்சரவை செயலகங்கள், அமைச்சர்கள் ஆகியோர் பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்கள் அடங்கிய குறிப்பு மத்திய அமைச்சரவை செயலாளரால் ஆகஸ்ட் 10ம் தேதி அன்று சுற்றனுப்பப்பட்டது.

"இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரங்களுக்கும் அல்லது வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரங்களுக்கும்'' கடிதம் எழுத வேண்டாம் என சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சலுகைகள் அல்லது உதவிகள் கேட்டு கடிதம் எழுத வேண்டாம் என தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வழிமுறைகளை முற்றிலும் மீறும் வகையில் அழகிரியின் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதம் அமைந்துள்ளது.

மேற்படி கடிதத்தில் அழகிரி கையொப்பம் இடவில்லை என்பதும், இரண்டு திமுக "வணிகர்களும்'' உஸ்பெகிஸ்தான் செல்லவில்லை என்பதும் சர்ச்சைக்குரியவை. பிரச்சனை என்னவென்றால், அழகிரி தனது பாதங்களை டெல்லியில் பதித்துவிட்டார். இனி "அட்டாக் பாண்டிகளும்'' "பாம் ரங்கநாதன்களும்'' அழகிரியின் அமைச்சர் மாளிகையிலிருந்தே தங்களுடைய நடவடிக்கைகளை துவங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

தவறு செய்யும் தன்னுடைய சக அமைச்சரை உடனடியாக கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த பிரதமருக்கு ஒரு ஜோடி கைகளுக்கு மேல் தேவைப்படும்.

மத்திய அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அ.ராசா என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தவறான கொள்கை கடைபிடிக்கப்பட்டதன் விளைவாக ரூ. 60,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இந்திய நாட்டிற்கு இவர் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்திய நாட்டிற்கு இழப்பு என்றால், யாரோ ஒருவர் சட்டவிரோதமான முறையில் ஆதாயம் அடைந்திருக்கிறார் என்பது தான் அதன் பொருள். சட்டத்திற்கு புறம்பாக ஆதாயம் அடைந்த அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் இருக்கிறது.

கறைபடிந்த அமைச்சர் ராசாவை மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள பிரதமர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படினும், கருணாநிதியால் வலுக்கட்டாயமாக ராசா மத்திய அமைச்சரவையில் புகுத்தப்பட்டார்.

தற்போது, ஊடகங்களில் வரும் செய்திகளின்படி பார்த்தால், ராசாவின் கடந்த கால தீய நடவடிக்கைகளுக்கு தற்போது தகுந்த தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. ராசா செய்த தவறுகள் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு மத்திய கண்காணிப்பு ஆணையத்தால் அனுப்பப்பட்டு இருக்கிறது.

நியாயமான, நேர்மையான புலன் விசாரணை நடைபெற வேண்டுமென்றால், ராசா மத்திய அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் தான் பிரதமர் மன்மோகன் சிங் சரியான, நியாயமான நடவடிக்கையை எடுத்து இருக்கிறார் என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார் ஜெயலலதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X