முல்லைப் பெரியாறு வழக்கு: அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10, 2009, 13:18 [IST]
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று இன்று திடீரென கேரள அரசின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து கேரள அரசு அவசரம் அவசரமாக ஒரு சட்டத்தைப் போட்டு 136 அடிக்கு மேல் தேக்க விடாமல் தடுத்து விட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதை நீதிபதிகள் டி.கே.ஜெயின், முகுந்தகம் சர்மா, ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் அவசரம் அவசரமாக சட்டம் இயற்றியது ஏன் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை கேரளாவுக்குத் தெரிவித்திருந்தது. மேலும், இதுதொடர்பாக கேரள அரசு ஏன் விளக்கம் அளிக்க மறுக்கிறது என்றும் கண்டித்திருந்தது. இன்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அது கூறியிருந்தது.

இந் நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட பிரச்சனை என்பதாலும் பல அரசியல் சட்ட கேள்விகளும் எழுவதாலும் இதை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்குப் பதிலாக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று திடீரென்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரன் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இருப்பினும் அரசியல் சாசனச் சட்டம் தொடர்பான அம்சங்களும் இதில் இருப்பதை அவர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

ஆனாலும் கேரளாவின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்த நீதிபதிகள், முழு வழக்கையும் மாற்ற வேண்டுமா அல்லது சர்ச்சைக்குரிய அம்சங்களை மட்டும் மாற்றலாமா என்பது குறித்து கேரள அரசு தனது பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  Read:  In English 
அதே நேரத்தில் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை முல்லைப் பெரியாறு அணையை தமிழகமே பராமரிக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இனி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரிக்கப்படும்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets