கருணாநிதியின் 'மெளனத்தின் குதூகலம்'-வைகோ

வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 15:55 [IST]
ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்...

ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரணில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்.

ரணில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவது என்பதை, தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"...எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரணிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. ரணிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியது.

இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003ம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்...".

கருணாவை துரோகியாக்கிய ரணில்...

'தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை" அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரணில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார்.

அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், 'இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்" என்று ரணில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.

ராஜீவ் காந்தியின் துரோகம்:

ராஜீவ் காந்தியைப் பற்றி நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி. இந்திய ராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் தூதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய ராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நூலில் எழுதி இருக்கிறாரே?. டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு?. அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான்.

கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.

பத்துப் பதினைந்து 'நிலைய வித்துவான்கள்':

காலம், நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது. தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து 'நிலைய வித்துவான்'களை வைத்துக் கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைத்திருப்ப படாதபாடுபடுகிறார்.

தமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர் பெற்ற புகழை, இளங்கோ, கம்பன், கரிகாலன், ராஜராஜன்
பெற்ற புகழை, எங்கள் மாவீரன் பிரபாகரன் பெற்று இருக்கிறார். உலகமெலாம் வாழுகின்ற தமிழர்களின் இதயக்கோயிலிலே அவர் வீற்று இருக்கிறார். அவரை கருணாநிதி கொச்சைப்படுத்தி விட முடியாது.

தன்னிகரற்ற தலைவன்:

ஆனால், உண்மைகளைத் தமிழர்கள் அறிவார்கள். ஒரு அரசை நிறுவி, முப்படைகளை உருவாக்கி, அரசுத்துறைகளை அமைத்து இயக்கி, தமிழ் ஈழ அரசை உலகம் ஏற்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திய பிரபாகரன், போர்க்களத்திலும், ராஜ தந்திரத்திலும் தன்னிகரற்ற தலைவராக விளங்குகிறார்.

ஒழுக்கத்தின் சிகரமாக, நேர்மைக்கும் சத்தியத்துக்கும் இலக்கணமாகத் திகழ்பவர்.

புரட்சிகளை நடத்திய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறுகள் உள்ளதை நான் படித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் தவறுகளும் இல்லாத தலைவனான- மாவீரர் திலகமான பிரபாகரனைக் கொச்சைப்படுத்த முயல்கிறார் முதல்வர் கருணாநிதி.

'மௌனத்தின் குதூகலம்' யார் அறிவார்?:

2009 ஈழப் போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த 'மௌனத்தின் குதூகலம்' யார் அறிவார்?.

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம்:

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது...!" என்று கூறியுள்ளார் வைகோ.

<< 1ஆம் பக்கம்

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets