For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலை கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இன்றைய மழை நிலவரம்...

இதுகுறித்து இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது.

தமிழகத்தின் வட பகுதியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

குன்னூரில் அதிகபட்சமாக 6 செமீ மழை பெய்தது. ஆர்.எஸ்.மங்கலம், கன்னியாகுமரி, குழித்துரை, நாகர்கோவில் தலா 5, ராமநாதபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், பூதப்பாண்டி, போடிநாயக்கனூர், கோவிலாங்குளம் தலா 4, அறந்தாங்கி, பாளையங்கோட்டை, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, பவானிசாகர் தலா 3 செமீ, அதிராம்பட்டனம், தொண்டி, ராதாபுரம், மணியாச்சி, மயிலாடி, தக்கலை, திருச்செங்கோடு, சங்கரிதுர்க்கம் தலா 2 செமீ, பண்ருட்டி, வல்லம், மணல்மேல்குடி, முதுகுளத்தூர், பரமக்குடி, பாம்பன், நாங்குநேரி, தென்காசி, சூரங்குடி, பேச்சிப்பாறை, மேட்டூர் அணை, ஓமலூர், சேலம், கேத்தி, கோத்தகிரி, அரவக்குறிச்சி, மாயனூர், முசிறி, திருப்பத்தூர் தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

24ம் தேதி காலை வரையிலான வானிலை முன்னறிவிப்பு..

தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் மழை காணப்படும்.

தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புண்டு.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புண்டு. பிற மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

குமரி மாவட்டத்தில்...

மார்த்தாண்டம், கொட்டாரம், பூதப்பாண்டி, கன்னிமார், ஆரல்வாய்மொழி உள்பட மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை கொட்டியது. அந்த மழை நேற்று காலையும் நீடித்தது.

இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இந்த மழையின் காரணமாக அணைகள், கால்வாய்கள் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் அதிகபட்சமாக 69 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

நாகர்கோவிலில் மழையின் காரணமாக வைத்தியநாதபுரம் விவேகானந்தா தெருவில் வசிக்கும் லாசர் என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.

ராஜாக்கமங்கலம் நீண்டகரை பி.பகுதியில் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியதில் 12 தென்னை மரங்கள் கருகின. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வயல்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது.

கன்னியாகுமரியில் நேற்று காலை திடீரென கடல் உள் வாங்கியது. கடல் உள்வாங்கியதாலும், கொந்தளிப்பாக காணப்பட்டதாலும் காலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து பிற்பகலில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. இருப்பினும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

வள்ளியூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய பலத்த மழை நேற்று காலை வரை நீடித்தது. அருகில் உள்ள ஓடையில் உடைப்பெடுத்ததால் வள்ளியூர் பஸ் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது.

திருச்செந்தூர் பகுதியில் 5 வீடுகள் சேதம் அடைந்தன. மாவட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான சேர்வலாறு அணை நிரம்பியது. அணையில் தற்போது 150 அடி தண்ணீர் உள்ளது. பாபநாசம் அணை 140 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105 அடியை எட்டியது.

மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. சபரி மலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் நீராடினார்கள். நெல்லையில் பெய்த மழையால் பாளை. தொழிலாளர் நல அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்து நின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று காலையில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கும்பகோணத்தில் லேசான மழை பெய்தது. தஞ்சை நகரிலும், சுற்றுப் பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்தது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. அவ்வப்போது லேசாக வெயில் அடித்தது.

புதுக்கோட்டை நகரில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரையில் நல்ல மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

கரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் 2 மணி முதல் தொடர்ந்து அரை மணி நேரம் மழை பெய்தது.

மதுரையில் மாலையில் மழை பெய்தது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழை பெய்தது.

திண்டுக்கல்லில் நேற்று பகல் 1 மணிக்கு பிறகு சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது.

சேலத்தில் பிற்பகல் 2.30 மணி அளவில் லேசாக தூறியது. நாமக்கல் உள்பட இந்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலையில் லேசா தூறியது. வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.

வேலூரில் பிற்பகல் 2.30 மணிக்கு லேசாக தூறல் மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி அளவில் கன மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இந்த மழையினால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றப்புற பகுதிகளில் நேற்று அதிகாலை நேரத்தில் மழை பெய்தது.

ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று காலை முதல் ஊட்டியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X