இலங்கையை அபாரமாக வீழ்த்தியது இந்தியா - டெஸ்ட் ரேங்கிங்கில் நம்பர் 1

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 6, 2009, 11:06 [IST]
மும்பை: மும்பையில் நடந்த 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 24 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தையும் அது பிடித்து சாதனை படைத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 393 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா ஷேவாக்கின் தீப்பொறி விளையாட்டால் 726 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து ஆடத் தொடங்கிய இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸில் 309 ரன்களில் வீழ்ந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. மேலும், ஐசிசி டெஸ்ட் தரிவரிசைப் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது

இந்தியாவின் ஜாகிர்கான் 5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை நிலைகுலைய காரணமாக இருந்தார். ஓஜாவுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன.

ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் வீரேந்திர ஷேவாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையுடனான நடப்பு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துவங்கிய சமயத்தில் சர்வதேச தர​வ​ரி​சைப் பட்​டிய​லில் இந்தியா 119 புள்​ளி​க​ளு​டன் 3ம் இடத்​தில் இருந்தது. 122 புள்ளிகளுடன் தென்​னாப்​பி​ரிக்கா முத​லி​டத்​தில் இருந்தது. இலங்கை 120 புள்​ளி​க​ளு​டன் 2ம் இடத்​தில் இருந்தது.

3 டெஸ்ட் போட்​டி​கள் கொண்ட இந்​தத் தொட​ரில் இந்​தியா 1-0 என்ற கணக்​கில் முன்​னி​லை​யில் இருந்தது. அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா​வில் முடி​ந்​தது. இதை​ய​டுத்து கான்​பூ​ரில் நடந்த 2வது டெஸ்​டில் இந்​தியா ஒரு இன்​னிங்ஸ் மற்​றும் 144 ரன்​கள் வித்​தி​யா​சத்​தில் வெற்றி பெற்றது.

தற்போது 3வது டெஸ்ட்டையும் வென்று இலங்கையையும் வீழ்த்தி, ரேங்கிங்கில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

வரலாற்றிலேயே முதல் முறையாக...

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடிப்பது 77 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இது முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 124 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 122 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. முரளிதரனுக்குப் பரிசு...

டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கு சிறந்த பந்து வீச்சாளர் விருது கிடைத்தது.

அதேபோல குறைந்த பந்துகளில் அதிக ரன்களைக் குவித்த ஜோடியாக இந்தியாவின் ஷேவாக் - டிராவிட் ஜோடி தேர்வானது.

பிரதீபா பாட்டீல் வாழ்த்து...

இலங்கையை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாட்டீல் தெரிவித்துள்ள செய்தியில், முதலிடம் பெற தகுதி வாய்ந்த அணியாக இந்தியா திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

டோணி தலைமையில் எப்பவுமே வெற்றிதான் .. சச்சின்

நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த வெற்றி குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டோணி தலைமையிலான இந்திய அணிதான் இதுவரை இருந்த இந்திய அணிகளிலேயே மிகச் சிறந்தது. இந்த அணிக்கு எப்போதுமே வெற்றிதான். அணி வீரர்கள் அனைவரின் கடுமையான உழைப்பும், திறமையும்தான் இந்த சாதனைக்கு முக்கிய காரணம்.

அத்தோடு பந்து வீச்சுப் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத், பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் ஆகியோரின் உழைப்பும் இதில் கலந்துள்ளது என்றார் சச்சின்.

இதேபோல பல முன்னாள் வீரர்களும் இந்திய அணிக்குப் பாராட்டுக்களை குவித்துள்ளனர்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets