For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத் தேர்தலும் அதிமுகவின் டெல்லி ஆர்ப்பாட்டமும்!

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், மீனவ மக்களுக்கு முற்றிலும் எதிரான கடல் மீன் தொழில் (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) வரைவு சட்ட முன்வடிவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த சட்ட முன்வடிவை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று 23.11.2009 அன்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

எனது அறிக்கையை பார்த்தவுடன் கருணாநிதியும் வழக்கம் போல, தான் பெயரளவுக்கு 19.11.2009 அன்று மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை 23.11.2009 அன்று வெளியிட்டு, தன்னுடைய எதிர்ப்பு நாடகத்தை முடித்துக் கொண்டார்.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட உள்ள கடல்மீன் தொழில் (முறைப்படுத்துதல் மற்றும் மேலாண்மை) சட்டம் தான் பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைலுக்குள் மட்டும் மீன் பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்து, நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பறிக்கப் பார்க்கிறது.

இந்தியாவின் செழிப்பான பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வருமாறு ஆழ்கடலில் மீன்பிடிக்கும் சக்தி வாய்ந்த அயல் நாட்டவர்களையும், உள் நாட்டில் உள்ள பெரிய தொழிலதிபர்களையும் வரவேற்கும் அதே சமயத்தில், நமது பாரம்பரிய இந்திய மீனவர்களை மேற்படி சட்டம் வெளிப்படையாக நசுக்க முயற்சிக்கிறது.

கடலையே தங்களுடைய இல்லங்களாக கருதும் நமது பாரம்பரிய மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க வேண்டுமென்றால், அனுமதிச் சீட்டு, அடையாள அட்டை, உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளூர் மீனவ சமுதாயத்தை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் இந்த சட்டம், வெளிநாட்டுக் கப்பல்களை நிறுத்தி செப்பனிடுவதற்கான வசதிகளைக் கூட செய்து கொள்ள அனுமதிக்கிறது.

இந்தச் சட்ட முன்வடிவுக்கு எதிராக கிளம்பியுள்ள பரவலான எதிர்ப்பு குறித்து, இது நாள் வரை மத்திய காங்கிரஸ் அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கருணாநிதியும் கடிதம் எழுதியதுடன் தன்னுடைய கடமை முடிந்தது என்று இருந்துவிடுவார் போலத் தெரிகிறது.

இருப்பினும், தமிழ்நாட்டில் மீனவர்களின் பிரம்மாண்டமான பேரணியை கண்டும், நடைபெறவுள்ள இரண்டு இடைத் தேர்தல்களில் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதையும் உணர்ந்த கருணாநிதி, அவசர அவசரமாக தயாநிதி மாறனை அனுப்பி மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சரத் பவாரை சந்திக்கச் சொல்லி இருக்கிறார்.

அதன்படி, நேற்று இந்தச் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பிற்கு பிறகு ஊடகங்களை சந்தித்த தயாநிதி மாறன், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட மாட்டாது என்று சரத் பவார் உறுதி அளித்ததாக தெரிவித்து இருக்கிறார்.

இவையெல்லாம் மீனவ மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். இந்த மசோதா ஒரு போதும் தாக்கல் செய்யப்படக் கூடாது என்பது தான் அதிமுக உறுதியான நிலைப்பாடு. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மட்டுமல்ல, பிற்காலத்திலும், எக்காலத்திலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படக் கூடாது என்பதே அதிமுக தெளிவான நிலைப்பாடு.

எனவே இந்த வரைவு சட்ட முன் வடிவை பின்னர் கொண்டு வரவிருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு மறைமுக ஆதரவு தரும் திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் வரும் 18.12.2009 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் டெல்லியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

(மறுநாள் 19ம் தேதி திருச்செந்தூர், வந்தவாசியில் இடைத்தேர்தல் நடக்கிறகது. இதில் திருச்செந்தூரில் மீனவர் சமூகத்தினரின் வாக்குகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது)

இந்த ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு அரசின் முன்னாள் சட்டம் மற்றும் மீனவளத் துறை அமைச்சரும், அனைத்துலக எம்ஜிஆர் மனறச் செயலாளருமான டி.ஜெயக்குமார் எம்எல்ஏ தலைமையிலும், தமிழ்நாடு அரசின் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், அதிமுக மீனவர் பிரிவு செயலாளருமான கே.கலைமணி மற்றும் அதிமுக நாடாளுமன்ற குழுத்துணைத் தலைவரும், அதிமுக மருத்துவ அணி தலைவருமான டாக்டர் வா.மைத்ரேயன் எம்பி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X