சுகோயில் பறந்த பிரதீபா அடுத்து போர் கப்பலில் பயணிக்கிறார்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 11, 2009, 10:05 [IST]
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அடுத்து ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பலில் பயணிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது இந்த ஆசையும் நிறைவேற்றி வைக்கப்படவுள்ளது.

சமீபத்தில் உலகின் அதி நவீன போர் விமானமான சுகோய் விமானத்தில் பறந்து புதிய சாதனை படைத்தார் பிரதீபா பாட்டீல். இதன் மூலம் சுகோயில் பறந்த இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர், முதல் பெண் மற்றும் 2வது குடியரசுத் தலைவர் ஆகிய சாதனைகளை அவர் படைத்தார்.

இந்த நிலையில் அடுத்து ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பலில் பயணிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் பிரதீபா பாட்டீல்.

இந்தியாவின் ஒரே விமானம் தாங்கி போர்க் கப்பல் விராத் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர்க் கப்பல், நவம்பர் 18ம் தேதியுடன் 50 ஆண்டுகளைக் கடந்தது.

இத்தகு பெருமை கொண்ட விராத் கப்பலில் பயணிக்க குடியரசுத் தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளதால் அவரது விருப்பத்தை டிசம்பர் 28ம் தேதியன்று நிறைவேற்ற கடற்படை நாள் குறித்துள்ளது.

விராத் கப்பலில் பகல் பொழுதை கழிக்கத் திட்டமிட்டுள்ளார் பிரதீபா. இருப்பினும் இரவில் அவர் தங்க வைக்கும் திட்டம் கடற்படையிடம் இல்லை.

விராத் போர்க் கப்பல் முன்பு இங்கிலாந்து கடற்படையின் கப்பலாக இருந்தது. 1959ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இது தனது சேவையை எச்எம்எஸ் ஹெர்ம்ஸ் என்ற பெயரில் தொடங்கியது. பின்னர் 1987ம் ஆண்டு இந்தக் கப்பலை இந்தியா வாங்கி ஐஎன்எஸ் விராத் என்று பெயர் சூட்டியது.
  Read:  In English 
இந்தியக் கடற்படைக்காக விராத் போர்க் கப்பல் 23 ஆண்டு கால சேவையாற்றியுள்ளது. கடந்த ஆண்டு இந்தக் கப்பலில் சில மாற்றங்களைச் செய்து ஆயுள் காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கப்பல் 2015ம் ஆண்டுடன் தனது சேவையை முடித்துக் கொள்ளும் எனத் தெரிகிறது. அதற்குள் ரஷ்யாவிடமிருந்து நாம் வாங்கும் அட்மிரல் கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி கப்பல் இந்தியக் கடற்படையில் சேர்ந்து விடும்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets