For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ராயலசீமா, கடலோர ஆந்திராவில் வன்முறை-பந்த்: அரசு திணறல்!

By Staff
Google Oneindia Tamil News

Telangana
திருப்பதி: மாநில பிரிப்புக்கு ஆந்திராவின் பிற முக்கிய பகுதிகளான கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பல பகுதிகளிலும் பந்த் நடத்தப்பட்டு வருவதோடு பெரும் வன்முறை வெடித்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் 'ஜெய் ஆந்திரா' என்ற கோஷம் எழுப்பப்பட்டு போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஆந்திராவில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள், 42 எம்பி தொகுதிகள் உள்ளன. இதில் தெலுங்கானா பகுதியில் 119 சட்டசபை தொகுதிகள், 17 எம்பி தொகுதிகள் உள்ளன.

கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் 175 சட்டசபை தொகுதிகளும் 25 எம்பி தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகளின் எம்.பி, எம்எல்ஏக்கள் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந் நிலையில் ராயலசீமா பகுதிகளான சித்தூர், கடப்பா, ஆனந்தபூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் உள்ள திருப்பதியிலும் பந்த் நடத்த வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளதால் நேற்று மாலை முதலே இப் பகுதியில் பல இடங்களிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் ஓடவில்லை.. கடைகள் அடைப்பு!:

ராயலசீமாவின் பல மாவட்டங்களிலும், கடலோர ஆந்திர மாவட்டங்களிலும் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வழியில் எதிர்ப்பட்ட வாகனங்களை தாக்கி வருகின்றனர் கலவரக்காரர்கள்.

கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளும் முன்னறிவிப்பு ஏதுமின்றி மூடப்பட்டுள்ளன.

நிலைமை தீவிரமடைந்துள்ளதையடுத்து, மத்திய அரசுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார் ஆந்திர முதல்வர் ரோஸைய்யா.

சிரஞ்சீவியை நுழைய விட மாட்டோம்:

இந் நிலையில் தனி தெலுங்கானா கோரிக்கையை ஆதரித்த பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவியை திருப்பதிக்குள் நுழைய விட மாட்டோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனி தெலுங்கானா கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் உண்ணாவிரம் இருந்தபோது சிரஞ்சீவி அவரை மருத்துவமனையில் சந்தித்து தனி தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதனால் சிரஞ்சீவிக்கு ராயலசீமா பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ராயசீமா பகுதியில் உள்ள திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தர் பல்டி நாயுடு:

முதலில் தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்புத் தெரிவி்த்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பின்னர் மக்களிடையே அங்கு ஏற்பட்ட எழுச்சியைப் பார்த்துவிட்டு தனி தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இப்போது தனி தெலுங்கானா உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து அந்தர் பல்டி அடித்துவிட்டார்.

தனி தெலுங்கானாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாகவும், இதனால் இது தொடர்பாக ஆந்திர சட்டசபையில் கொண்டு வரப்படும் தனி தெலுங்கானா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

அதே போல சிரஞ்சீவியும் தனது தனி தெலுங்கானா நிலையில் மாறி மாறி பேச ஆரம்பித்துள்ளார்.

தனி தெலுங்கானா அமைத்தால் ராயசீமா, கடலோர ஆந்திர மக்களின் ஆதரவை இழக்க வேண்டி வரும் என்பதால் மத்திய அரசும் இப்போது யோசிக்க ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து அனைத்துத் தரப்பினரையும் திருப்திபடுத்தும் முயற்சிகளில் மூத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதி எம்.பிக்களை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

மேலும் இன்று ஆந்திர எம்.பிக்கள் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

எதிர்ப்பு கடுமையாக இருப்பதால் தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆந்திர சட்டசபையில் இதற்கான தீர்மானம் உடனடியாக கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.

அவையில் கடும் மோதல:

இந் நிலையில் இன்று காலை ஆந்திர சட்டசபை கூடியதும் சபாநாயகர் கிரண்குமார், மொத்தமுள்ள 284 எம்எல்ஏக்களில் 117 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார்.

அப்போது சில உறுப்பினர்கள் எழுந்து 117 பேர் ராஜினாமா செய்துவிட்டதால் மாநில அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. எனவே சட்டசபையை நடத்த கூடாது என்றனர்.

அவர்களுக்கு பதிலளித்த சபாநாயகர், எம்எல்ஏக்களின் ராஜினாமாவை நான் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அரசு பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. சபையை நடத்துவதில் தவறு இல்லை என்றார்.

இந் நிலையில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள பல எம்எல்ஏக்களும் சபைக்குள் வந்து ஆந்திராவை பிரிப்பதை எதிர்த்து கோஷமிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கானா எம்எல்ஏக்கள் ஜெய் தெலுங்கானா என்று குரல் எழுப்பினர். இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் அபாயகரமான சூழ்நிலை உருவானதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியதும் மீண்டும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட முயன்றதால் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X