சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் இடைத்தேர்தல் முடியும் வரை தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டு திட்டத்துக்கான புதிய அடையாள அட்டை வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், அவசர சிகிச்சைக்காக வருமானவரி சான்றிதழ் பெற்று சிகிச்சை பெறலாம் என்று தேர்தல் கமிஷன் கூறியதை உயர்நீதிமன்றம் ஏற்று இதுதொடர்பான வழக்கை பைசல் செய்தது.
சென்னை கொளத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழகத்தில், திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளில் வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் முடியும் வரை எந்த நலத் திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது, அமல்படுத்தவும் கூடாது.
தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் இந்த காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேர்தல் நடத்தை விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று தலைமை தேர்தல் கமிஷனிடம், தி.மு.க. எம்.பி.க்கள் கடந்த 2-ந் தேதி மனு கொடுத்துள்ளனர்.
இதுபோன்ற திட்டத்தை தேர்தல் நேரத்தில் அமல்படுத்துவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனவே, இதை நிராகரிக்க வேண்டுமென்று நான் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினேன். ஆனால் தொடர்ந்து கலைஞர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தி வருகிறார்கள். மறைமுகமாக அதிக ஓட்டுக்கள் பெறுவதற்காக தி.மு.க. இதை செய்து வருகிறது.
எனவே, இதை அனுமதித்தால் ஜனநாயக வாக்குப்பதிவு பாதிக்கும். ஆகவே, இந்த காப்பீட்டு திட்டத்துக்கு விதிவிலக்கு அளிக்க கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி என்.பால் வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
தேர்தல் கமிஷன் சார்பில் சீனியர் வக்கீல் ஜி.ராஜகோபால் ஆஜராகி வாதாடுகையில், இடைத்தேர்தல் முடியும் வரை இந்த இரு தொகுதிகளிலும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் புதிதாக அடையாள அட்டை வழங்க கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே கார்டு இல்லாதவர்கள் அவசர சிகிச்சை பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வருமான சான்றிதழ் பெற்று இந்த சலுகையை பெற ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார்.
இடைத்தேர்தல் முடியும் வரை புதிய கார்டு வழங்க மாட்டோம் என்றும், அதேசமயத்தில் அவசர சிகிச்சை பெற ஆட்சேபனை இல்லை என்றும், அரசியல் சட்டப்படி தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கு இத்தோடு பைசல் செய்யப்படுகிறது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.






