பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்று பொன்சேகா கைது - ராணுவ கோர்ட்டில் நிறுத்தப்படுகிறார்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 9, 2010, 9:01 [IST]
கொழும்பு: அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ராஜபக்சேவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தவரான முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அவர் மீது ராஜபக்சே அரசை புரட்சி நடத்திக் கவிழ்க்க சதி செய்ததாகவும், ராஜபக்சே மற்றும் குடும்பத்தினரைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை ராணுவ கோர்ட்டில் நிறுத்தி விசாரணை நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

பொன்சேகா கைது செய்யப்பட்ட தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்புதான் இப்பதவிக்கு மீண்டும் ராஜபக்சேவால் கொண்டு வரப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் பொன்சேகா மீது ராணுவப் புரட்சி நடத்தவும், தன்னையும், தனது சகோதரர்களையும் கொல்ல அவர் திட்டமிட்டிருந்தாகவும் கூறினார் ராஜபக்சே. இதையடுதது கைது படலம் உள்ளிட்டவை தொடங்கின.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் இதுவரை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் உள்பட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 ராணுவ அதிகாரிகள் கட்டாய ஓய்வளிக்கப்பட்டுள்ளனர்.

பொன்சேகாவும் கைது செய்யப்பட்டு ராணுவக் கோர்ட்டில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதேபோல தற்போது பொன்சேகாவையும் கைது செய்துள்ளனர்.

அவரை ராணுவ கோர்ட்டில் நிறுத்தி விசாரணை நடத்தி மிகக் கடுமையான தண்டனை தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்சேகா கைது குறித்து கோத்தபயா தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகத்தின், தேசிய பாதுகாப்புக்கான மீடியா மையத்தின் இயக்குநர் லட்சுமண் ஹுலுகலா கூறுகையில், பொன்சேகா ராணுவக் குற்றத்தை இழைத்துள்ளார். எனவே ராணுவச் சட்டப்படி அவர் ராணுவ கோர்ட்டில் வைத்து விசாரிக்கப்படுவார் என்றார்.

பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்றனர்...

பொன்சேகாவை மிகக் கேவலப்படுத்தி இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சரத் பொன்சேகாவை பிடரியில் பிடித்து மிகக் கேவலமான முறையில் இழுத்துச் சென்றனர். நானும், மற்றவர்களும் பார்த்துக் கொண்டிருக்க, அவரை மோசமான முறையில் கைது செய்து கொண்டு சென்றனர் என்றார் அவர்.
  Read:  In English 
நேற்று பிற்பகலில்தான் பொன்சேகா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க நான் தயார் என்று அறிவித்தார்.

இதையடுத்து மின்னல் வேகத்தில் அவரைக் கைது செய்து உள்ளே தள்ளி விட்டனர்.

User Comments
ஈழத்தமிழன் 10 Feb 2010 06:21 pm
Mr.டக்லஸ் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் ஓட்டுப்போட்டது ஆதரிப்பதற்கு அல்ல மகிந்தவை பழிவாங்க...
இள தமிழன் முருகன் 10 Feb 2010 10:56 am
மகிழ்வதற்கோ வருத்த படுவதற்கோ எதுவும் இல்லை அயல் நாடு விடயம் அது .இள தமிழன்
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets