For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் மாநிலங்கள் நல்லுறவு வலுப்பட வேண்டும்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தென்னக மாநிலங்களிடையே நல்லுறவு வலுப்பட வேண்டும் என்ற விழைவோடு கன்னட மற்றும் தெலுங்கு மக்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

தமிழகத்தில் வாழும் கன்னடம், தெலுங்கு மொழிகள் பேசும் மக்கள் தமது புத்தாண்டு திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடும், உகாதித் திருநாள் மார்ச் திங்கள் 16ம் நாள் எழுச்சியோடு கொண்டாடப்படுவது அறிந்து மகிழ்கிறேன்.

தமிழகம் வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் மனவளம் கொண்ட மாநிலம். இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும், இங்கு எப்போதும், யாதொரு இடர்பாடும் எவராலும் நேர்ந்ததில்லை.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் மனப்பான்மை புற நானூற்றுப் பாடலில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடம் இயல்பாக மிளிர்வதையே இது காட்டுகிறது.

முந்தைய அதிமுக அரசு காலத்தில் மறுக்கப்பட்ட உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை 2006க்குப் பின் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது இந்த அரசு.

தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு, கன்னட மொழிகள் பயில விரும்புவோருக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளதுடன், தனி வல்லுநர் குழுக்களை அமைத்து தரமான பாட நூல்களையும் தயாரித்து வழங்குகிறது என்பதை நினைவுப்படுத்திட விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில் பெங்களூர் மாநகரில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா, அதனைத் தொடர்ந்து சென்னை மாநகரில் நடைபெற்ற கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறப்பு விழா ஆகியவை தமிழக, கர்நாடக மாநில மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதில் பெரிதும் பயன்பட்டுள்ளன.

அதே போல சென்னைக்கு வந்து சேரும் கிருஷ்ணா நீர் தமிழக, ஆந்திர மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்திட உதவுகிறது.

அத்துடன் மாபெரும் திருவிழாவாக நடைபெற்ற சட்டமன்றப் பேரவை- தலைமைச் செயலக வளாகத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக, புதுவை மாநில முதல்வர்கள் வருகை புரிந்து கலந்து கொண்ட நிகழ்வும் இம் மாநிலங்களுக்கிடையே நல்லிணக்க மனப்பான்மை வளர்ப்பதில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

இந்த உறவும், உணர்வும் தென்னக மாநிலங்களிடையே மேலும் மேலும் வளம் பெற வேண்டும் என்பது எனது விழைவாகும்.

இந்த விழைவோடு உகாதித்திருநாள் கொண்டாடும் கன்னட, தெலுங்கு மொழிகள் பேசும் மக்களுக்குத் தமிழக அரசின் சார்பிலும், எனது மனமார்ந்த உகாதித்திரு நாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா..

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிய யுகத்தின் தொடக்கமான உகாதித் திருநாளில், தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்ற மகாகவி பாரதியின் கருத்தை உணர்த்தும் வகையில் தமிழகத்தின் ஓர் அங்கமாக, தமிழக மக்களுடன் பல ஆண்டுகளாக அன்பு உறவு கொண்டு ஒற்றுமையுடன் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த உகாதித் திருநாள், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்தி, அனைத்து தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் உகாதி வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X