மாணவர் சக்தி மூலம் திமுக ஆட்சியை அகற்றுவோம்: பாஜக

திங்கள்கிழமை, ஜூலை 12, 2010, 10:26 [IST]
கோவை: எந்த மாணவர் சமுதாயத்தை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததோ, அதே மாணவர் சமுதாய சக்தியை வைத்து திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது போல இந்துக்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரி கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்றதும், மீண்டும் ஆட்சியை பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதற்கு கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தினரும் ஒட்டுமொத்த ஓட்டு வங்கிகளாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டு, அந்த ஓட்டுகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என முடிவு செய்தனர்.

அதனால் சிறுபான்மையினரின் முன்னேற்றம் என்று 15 அம்ச திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். சிறுபான்மை என்பதன் கீழ் முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தமதம், பார்சி மதம் என 5 மதங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில் முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதனால் அவர்களுடைய ஒட்டுமொத்த ஓட்டுகளை பெறுவதற்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2007ம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த 2008-09ம் கல்வியாண்டில் 5 லட்சத்து 12 ஆயிரத்து 657 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுவே 2009-2010ம் கல்வியாண்டில் 17 லட்சத்து 29 ஆயிரத்து 76 பேருக்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 364 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஏற்கனவே திட்டமிட்ட இலக்கைவிட அதிகமாக உதவித்தொகை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 57,000 பேருக்கு உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுவிட்டு, இறுதியில் 84,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படுவதில்லை.

மாணவ சக்தியை அடிப்படையாக கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். கிராமங்கள்தோறும் நாங்கள் சென்று மக்கள் பிரச்சனைக்காக போராடுகிறோம். விலைவாசி உயர்வு, அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஓட்டு வாங்குவதற்காக சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சலுகைகளை வாரி வழங்குகின்றன. அதேசமயம் அக் கட்சிகள் இந்து சமுதாயத்தைப் புறக்கணிக்கின்றன.

இந்தி மொழியை அரக்கி எனக் கூறி மாணவர் சமுதாயத்தில் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு, அதன் மூலமாக ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அதே மாணவர் சமுதாயத்திற்கு துரோகம் செய்கிறது. இந்து மாணவர் சமுதாயத்திற்கு செய்யப்படும் இதுபோன்ற துரோகத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது. எந்த மாணவர் சமுதாயத்தை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததோ, அதே மாணவர் சமுதாய சக்தியை வைத்து திமுக ஆட்சியை அகற்றுவோம்.

ஜூலை 25ம் தேதி கன்னியாகுமரியில் ஒரு லட்சம் பேர் திரளும் மிகப் பெரிய போராட்டம் இதற்காக நடைபெற உள்ளது. பாஜக மக்கள் சக்தியாக உருவெடுக்கும் என்றார்.
Posted by:
User Comments
கல்லூரி மாணவன் 12 Jul 2010 08:08 pm
பிஜேபிகு எங்கள் கல்லூரி மாணவர்கள் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
human 12 Jul 2010 08:03 pm
பிஜேபி எல்லாம் ஒரு குப்பை ,இப்போ மாணவர்களையும் பிரிக்க பக்கிரங்க ,ஜாதி வெறிக்கு ஒரு கட்சி பிஜேபி.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST