சீமானின் ஜாமீன் மனு தள்ளுபடி: ”பேச்சு சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடு உண்டு”-நீதிபதி

வெள்ளிக்கிழமை, ஜூலை 16, 2010, 10:21 [IST]
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சித் தலைவரும் இயக்குனருமான சீமானின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த 15ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், சிங்கள ராணுவத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவரை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதாடுகையில், ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசுகையில் இந்திய ராணுவம் இலங்கைக்கு அமைதிப் படையாக சென்று தமிழ் பெண்களை கொடுமை செய்தது என்றும், நடக்காத ஒன்றை நடந்ததாக சீமான் கூறியுள்ளார் என போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை சாக்காக வைத்து சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என்றும், இதே நிலை நீடித்தால் இந்தியாவிற்கு படிக்க வரும் ஒரு சிங்கள மாணவன் கூட உயிரோடு நாடு திரும்ப மாட்டான் என்றும் சீமான் பேசியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு பேச்சின் மூலம் உடனடியாக வன்முறை தூண்டப்பட்டால் மட்டுமே அது வன்முறையை தூண்டிய பேச்சாக அமையும்.

ஆனால், சீமானின் ஆர்ப்பாட்டமும் அவரது பேச்சும் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது. சீமானின் கட்சியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சேருவதை தாங்கி கொள்ள முடியாமல் அரசியல்ரீதியாக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் தர வேண்டும் என்றார்.

இதையடுத்து அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவில், சீமானின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி வாதாடுகையி்ல்,

சீமான் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளித்தபோது 19 நிபந்தனைகள் விதித்தனர். இந்த நிபந்தனைகளில் ஒன்றைக் கூட நாம் தமிழர் கட்சியினர் கடைபிடிக்கவில்லை. தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தையும், விடுதலைப் புலிகளின் கொடியையும் ஏந்தி வந்தனர்.

கொடுக்கப்பட்ட நேரத்தை மீறி கூடுதலாக 4 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் இனி தமிழக ரத்த உறவுகளை சிங்களன் தொட்டால் சென்னையில் படிக்கும் சிங்கள மாணவன் எவனும் உயிரோடு திரும்பமாட்டான். சென்னையிலும், திருப்பூரிலும் எத்தனை சிங்களர்கள் உள்ளனர்? என்ற கணக்கு எங்களிடம் உள்ளது என்று சீமான் பேசியிருக்கிறார்.

எனவே ஏற்கனவே சிங்களர்களை தாக்கக் கூடிய பணியின் முதற்கட்டத்தை அவர் தொடங்கி இருப்பது தெரிய வந்தது.
எனவே சீமானுக்கு ஜாமீன் தரவே கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவதாஸ்,
பேச்சுரிமைக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அனைத்து சுதந்திரங்களையும் வழங்கியுள்ளது. ஆனாலும் சில கட்டுப்பாடுகளும் அதே சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன. சீமானின் பேச்சு 2 இடங்களில் பிறந்த சமூகத்தினரிடையே (சிங்களர்- தமிழர்) நல்லிணக்கத்தை குலைப்பதாகவும் வன்முறையை தூண்டுவதாகவும் உள்ளது. இதற்கான ஆதாரங்களை போலீஸ் தரப்பில் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் சென்னையில் வெளிநாட்டை சேர்ந்த பல மாணவர்கள் தங்கிப் படிக்கும் நிலையில், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அவரது பேச்சு உள்ளது. எனவே சீமானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

தனிமைச் சிறையை மாற்ற வேண்டும்-சீமான்:

இதற்கிடையே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமான் உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத பாழடைந்த தனி அறையில் என்னை சிறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர். இது சட்டவிரோதமாகும். எனவே எனக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படியும், தனிமைச் சிறையை மாற்றும்படியும் உத்தரவிட வேண்டும்.

இம்மனு நீதிபதிகள் நாகப்பன், மற்றும் கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சீமானை தனிமை சிறையில் வைக்கவில்லை என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் அரசின் பதிலை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.

கைதை கண்டித்த போஸ்டர்களை கிழித்த போலீஸ்:

இந் நிலையில் சீமான் கைதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில், நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களை இரவோடு இரவாக போலீசார் கிழித்து எறிந்தனர்.
Posted by:
User Comments
வேலைவாய்ப்பு 17 Jul 2010 09:57 am
தமிழர்களை கொல்ல, கொல்லபடுவதை வேடிக்கை பார்க்க , தமிழ் உணர்வாளர்களை அடித்து, துன்புறுத்தி கைது செய்ய , மனிதாபிமானம் இல்லாத நல்ல உறவுகளே தமிழ்நாட்டு காவல்துறையில் சேர வாருங்கள் வாருங்கள் வாருங்கள்
இந்தியன் 17 Jul 2010 09:51 am
சீமானை தூககில் இடுங்கள். வைகோ ,நெடுமாறனை நாடு கடத்துங்கள். தமிழர்களை கொல்வது எங்கள் பிறப்புரிமை. என்ன பேசுறாங்க ?? தமிழனை காப்பாத்தனுமாம் , தான தலைவர் ராஜபக்ச்ச்சேக்கு ராஜ மரியாதை குடுக்க கூடாதாம் , தமிழ் மீனவனை காப்பாதனுமாம். செத்தவன் தமிழன், சீக் இல்லியே, நாங்கள் இந்தியர்கள். பாகிஸ்தான் , சீன கையில் சாக பிறந்தவர்கள்.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST