
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கு இன்னும் 9 நாட்கள் தான் இருக்கின்றது. இந்நிலையில் அனைத்துச் சேனல்களிலும், பத்திரிக்கைகளிலும் காமன்வெல்த் குளறுபடிகள் தான் தலைப்புச் செய்தியாக இருக்கின்றது. இதுகுறித்து வீரர், வீராங்கனைகள் கவலைப்பட்டு கவனத்தை சிதற விட வேண்டாம் என இந்திய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் லியாண்டர் பயஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அடுத்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களுக்குக் குறி வைத்துள்ளார் பயஸ். இவர் காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மாறாக இந்தப் போட்டியில் நன்றாக விளையாடி, அனைவரையும் கவர விரும்புகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்தப் போட்டிகள் பற்றிய குளறுபடிகள் குறித்து கருத்து தெரிவிக்கும் நிலையில் நான் இல்லை. நாட்டின் பிரநிதியாக இருப்பது தான் என் வேலை. இதில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குளறுபடிகளால் கவனத்தைச் சிதறவிடாதீர்கள். நான் நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறினார்.





















