For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா: நிறைவுப் பேருரையாற்ற முதல்வர் நாளை தஞ்சை பயணம்

Google Oneindia Tamil News

சென்னை: பெரிய கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நாளை முதல்வர் கருணாநிதி தஞ்சை செல்கிறார்.

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது.

பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா 5 நாட்கள் நடக்கிறது.

இதை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். முதல் நிகழ்ச்சியாகத் தஞ்சை சங்கமம் நடைபெற்றது. இதையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இன்று மாலை 5.30 மணிக்கு அலங்காநல்லூர் ஆறுமுகம் குழுவினரின் பறையாட்டமும், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் கருவி இசையும், 6.45 மணிக்கு அருணா சாய்ராமின் இசை நிகழ்ச்சியும் பெரியகோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.

சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பெரிய கோவில் வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் அவ்வை நடராஜன், குடவாயில் பாலசுப்பிரமணியன், நடன காசிநாதன், சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் பேசுகின்றனர்.

அன்று மாலை 5.30 மணிக்கு திருக்குவளை சகோதரிகளின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து திருமுறை ஓதுதல் மற்றும் 1000 நடனகலைஞர்கள் பங்கேற்கும் பத்மாசுப்பிரமணியத்தின் நாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

இரவு 9 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் ராஜராஜசோழன் வரலாற்று நாடகத்தை புகழேந்தி, கலைவாணன் குழுவினர் நடத்துகின்றனர்.

கொண்டாட்டத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பெரிய கோவில் வளாகத்தில் களிமேடு கிராமத்தினர் வழங்கும் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு விழா மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் முதலமைச்சர் கருணாநிதி நிறைவு விழாப் பேருரை ஆற்றுகிறார்.

நிகழ்ச்சியில் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு 10 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது.

இது தவிர தஞ்சை பெரியகோவில், ராஜராஜசோழன் புகைப்படம் அடங்கிய அஞ்சல் தலையும் வெளியிடப்படுகிறது.

இந்த விழாவையொட்டி தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிறைவு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி நாளை பிற்பகல் தஞ்சைக்குப் புறப்படுகிறார். வரும் 27-ம் தேதி மீண்டும் சென்னைக்குச் செல்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X