For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மான பெயர்கள் நீக்கம்!

Google Oneindia Tamil News

Prabhakaran
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. பொட்டு அம்மான பெயரும் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதை இதுவரை உறுதிப்படுத்தாமல் இருந்த இந்தியா, முதல் முறையாக இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1991-ம் ஆண்டு, மே 21-ல் ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதன்மைக் குற்றவாளியாகவும், புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் அடுத்த முக்கிய குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் நடந்த இறுதி யுத்தத்தில் பிரபாகரனும் பொட்டம்மானும் கொல்லப்பட்டதாக இலங்கை அறிவித்தது. பிரபாகரன் 'உடலை'யும் காட்டியது. ஆனால் இதனை புலிகளின் ஆதரவாளர்கள் நம்ப மறுத்ததோடு, அவரும் பொட்டு அம்மானும் உயிருடன் இருப்பதாகவும் கூறி வந்தனர்.

இந்தியாவும் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. ராஜீவ் கொலை வழக்கை முடிக்க ஏதுவாக பிரபாகரன், பொட்டம்மான் இறப்புச் சான்றிதழை அனுப்புமாறு இலங்கையிடம் தொடர்ந்து கோரி வந்தது.

ஆனால் இலங்கை அரசு இதுவரை இறப்புச் சான்றிதழ் எதையும் அனுப்பவில்லை. மாறாக, பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற கடிதத்தை நீதிபதி ஒருவரின் அத்தாட்சியுடன் அனுப்பி வைத்தது. இதனை ஏற்றதாகவோ, மறுப்பதாகவோ எதையும் தெரிவிக்காமலிருந்தது இந்திய அரசு.

சிபிஐயின் இணையதளங்களில், ராஜீவ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் பெயர்கள் நீக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், இப்போது இந்த இருவரது பெயரையும் ராஜீவ் கொலை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாகவும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப்பில், "முதன்மைக் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகிறது ("The case against the absconding accused A1 Prabhakaran, A2 Pottu Amman alias Shanmuganathan Sivasankaran is hereby dropped and the charges against them ordered abated"), என்று கூறியுள்ளார்.

குற்றவாளியின் மரணத்துக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகளும் தானாகவே காலாவதியாகிவிடும் என்ற இந்திய குற்றவியல் சட்ட அடிப்படையில் இந்த முடிவை மேற்கொள்ள சிபிஐ அனுப்பிய குறிப்புகளின் பேரிலேயே நீதிபதி தட்சிணாமூர்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த அமிர்தலிங்கம் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டம்மான் பெயர்கள் நீக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதையும் சிபிஐ தனது குறிப்பில் தெரிவித்திருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X