For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடநாடு: 2.5 கி.மீ. நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு

Google Oneindia Tamil News

Jayalalitha
டெல்லி: ஜெயலலிதா அடிக்கடி தங்கி ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 2.5 கி.மீ நீளத்துக்கு நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அவசரப் பிரிவைப் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அடிக்கடி தங்கி ஓய்வெடுப்பது வழக்கம்.

இந் நிலையில் எஸ்டேட்டை ஒட்டியுள்ள காமராஜ் நகர், அண்ணா நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை எஸ்டேட் நிர்வாகம் மூடிவிட்டதாகவும், இதைப் பொது பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்றத்தில் கொடநாடு ஊராட்சித் தலைவரால் வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், எஸ்டேட் வழியே செல்லும் பாதை, பொதுப் பாதையல்ல என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கொடநாடு எஸ்டேட் பாதை வழியே செல்லும் வாகனங்களுக்கு வரி வசூலிக்கப்படுவதாகவும், இரவில் பாதை மூடப்படுவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் முகந்தகன் சர்மா, அனில் தவே ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து:

இரவு நேரத்தில் இந்தப் பாதையை எஸ்டேட் நிர்வாகம் மூடிவிடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக கொடநாடு எஸ்டேட்டில் 2.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவது அவசியமாகிறது.

எஸ்டேடே நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று கொடநாடு கிராம ஊராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அவசரப் பிரிவைப் பயன்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டார். இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த தரப்பினருக்கு ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டது. மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் அது வழங்கப்பட்டது. இப்போதும் ஒரு வார அவகாசம் கேட்பது சரியல்ல என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

இருப்பினும் இந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசத்தை நீதிபதிகள் வழங்கினர்.

எஸ்டேட் ஆய்வு கோரிய வழக்கு-தீர்ப்பு ஒத்திவைப்பு:

இந் நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய அனுமதி கோரும் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கொடநாடு கிராம ஊராட்சி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், கொடநாடு எஸ்டேட்டில் 500 சதுர மீட்டருக்கும் அதிகமாக ஒரே கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு வனத்துறை, வேளாண் பொறியியல் துறை, புவி தொழில்நுட்பப் பிரிவு, மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம் போன்றவற்றிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறவில்லை.

கட்டுமானங்களை ஆய்வு செய்வதற்காக ஊராட்சி நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி எஸ்டேட்டுக்கு சென்றது. அப்போது, எஸ்டேட் நிர்வாகம் அதிமுகவினரை ஆயிரக்கணக்கில் எஸ்டேட் நுழைவு வாயிலில் குவித்து அதிகாரிகளை எஸ்டேட்டுக்குள் விட மறுத்துவிட்டது.

எனவே, அந்த எஸ்டேட்டுக்குள் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்யவும், அங்கு மேலும் கட்டுமானங்கள் எதுவும் எழுப்பப்படாமல் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எலீப் தர்மராவ், நீதிபதி சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், கொடநாடு எஸ்டேட் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அது தமிழகத்தின் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அது ஒன்றும் வெளிநாட்டு தூதரகம் அல்ல. அங்கு நடைபெறும் கட்டடப் பணிகளை ஊராட்சி நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்யலாம்.

அவ்வாறு சோதனை செய்ய வரும் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எஸ்டேட் நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை. எஸ்டேட்டில் சோதனை செய்ய எஸ்டேட் நிர்வாகமே தேதியைச் சொல்லட்டும். அந்த தேதியில் சோதனை செய்யத் தயார் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X