For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாமல்லபுரத்தில் முதல்வர் கருணாநிதி 'ஓய்வு'!

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: முதல்வர் கருணாநிதி ஓய்வெடுக்க மாமல்லபுரம் சென்றுள்ளார்.

மாமல்லபுரம் ஹோட்டல் ரேடிசன் டெம்பிள் பே பீச் ரிசார்ட்டுக்கு அமைச்சர் துரைமுருகன், மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் சென்றுள்ளார்.

ஓய்வெடுக்கச் சென்றிருந்தாலும் மத்திய அமைச்சர் பதவியை ராசா ராஜினாமா செய்துள்ள நிலையில் அங்கு அவர் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடலாம் என்று தெரிகிறது.

முதல்வரின் பேரனும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதிக்கு நாளை மறுதினம் மதுரையில் திருமணம் நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்வர் நாளை பிற்பகலில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்வார் என்று தெரிகிறது.

முதல்வர் பக்ரீத் வாழ்த்து:

இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில், தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் நாளை கொண்டாடப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா, இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல, ஒரு சிறந்த மார்க்கம். முகம்மது நபிகள் ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார், அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார் என்று இஸ்லாம் குறித்துக் கூறியுள்ளார்.

அந்த இஸ்லாம் மார்க்கம் வாயிலாக, மனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக் கொடுத்த நபிகள் நாயகம், தாய் தந்தைக்கு நன்றி செய்யுங்கள், அவ்வாறே உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், எப்பொழுதும் உங்களுடனிருக்கும் சிநேகிதர்களுக்கும், பிரயாணிகளுக்கும், உங்களிடமுள்ள பணியாளர்களுக்கும் அன்புடன் நன்றி செய்யுங்கள் என்று கூறி, மனிதர்கள் அனைவரிடமும் மனித நேயத்தை வளர்த்திடப் பாடுபட்டார்.

மக்கள் பகையை உணர்வில்லாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் தண்டித்து வாழாதீர்கள், பிணங்கிக் கொள்ளாதீர்கள், கோபப்படாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.

நபிகள் பெருமானார் வலியுறுத்திய இத்தகைய இயல்பான, அமைதியான மனித சமுதாய மேம்பாட்டிற்குரிய அறநெறிகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கல்வியில், தொழிலில், பொருளாதாரத்தில் மேலும் மேலும் முன்னேற்றம் காண எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X