For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக ஜல்லிக்கட்டு-271 காளை மாடுகள் பங்கேற்க அனுமதி

Google Oneindia Tamil News

Jallikattu
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இதுவரை 271 காளை மாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகவலை விலங்குகள் பாதுகாப்பு ஆணைய துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க இதுவரை 271 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று, காளைகளின் நான்கு புகைப்படம் மற்றும் 500 ரூபாய்க்கான வங்கி வரைவோலை ஆகிறவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

மாடுகளை துன்புறுத்தக் கூடாது

இதற்கிடையே, இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் கார்ப் கூறுகையில்,

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனும் இயற்கை சுற்றுச்சூழல், காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க 1960ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 1962ஆம் ஆண்டு இந்திய விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டது. அது இப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

விலங்குகளின் நலம் பேணவும், அவை தேவையில்லாமல் மனிதர்களால் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கரடி, குரங்கு, புலி, சிங்கம், சிறுத்தை ஆகியவற்றை கொண்டு கண்காட்சி நடத்துவதை அரசு தடைசெய்துள்ளது. ஆனால் நாட்டில் பல இடங்களில் வண்டி மாடு ரேஸ், குதிரை ரேஸ், நாய் சண்டை, காளைமாடு சண்டை, ஜல்லிக்கட்டு முதலிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அப்போது விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. காளையின்மீது பணத்தை கட்டி, அதை அடக்குபவர்களுக்கு அந்த பரிசு கிடைக்கும். இது ஒருவகையில் பார்த்தால் வர்த்தக ரீதியில் நடத்தப்படுவதாக தெரிகிறது. ஜல்லிக்கட்டினால் காளைகள் பல துன்புறுத்தப்படுகின்றன.

மாட்டின் வாலை பிடித்து பலர் தொங்குகிறார்கள். உடம்பை பிடித்து பலர் தொங்குகிறார்கள். காளைமாட்டுக்கு சாராயம் கொடுக்கப்படுகிறது. கண்ணில் மிளகாய் தூள் தூவப்படுகிறது. இதெல்லாம் அவை தாறுமாறாக ஓடுவதற்கு பயன்படுத்தப்படும் யுக்தியாகும்.

இது மட்டுமல்ல பல காளைகள் இறந்துவிடுகின்றன. விலைமதிக்க முடியாத மனிதர்களும் இறக்கிறார்கள். கடந்த 2009 ஆம் ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டில் 12 பேர் இறந்தனர். நிறையபேர் காயம் அடைந்தனர்.

எனவே ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இன்னும் முடியவில்லை. ஜல்லிக்கட்டை நடத்த பல வழிகாட்டுதல்களை கோர்ட்டு சுட்டிக்காட்டி உள்ளது. ஜல்லிக்கட்டில் மாடுகளை விடுபவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே பதிவு செய்யவேண்டும். கலெக்டர் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்றும் கோர்ட் கூறியது.

இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த இதுவரை முதல் கட்டமாக 122 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 275 மாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 வது கட்டமாக 205 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 375 மாடுகள் பதிவு செய்ய வந்துள்ளன. அவை விரைவில் பதிவு செய்யப்படும். கடந்த ஆண்டு 48 இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த வருடம் அலங்காநல்லூர், அவன்யாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வீடியோ படம் மற்றும் புகைப்படங்கள் எடுக்க உள்ளோம். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் அதிகாரிகள் பார்வையிடுவார்கள். தொண்டு நிறுவனத்தினரும் பார்வையிடுவார்கள். மொத்தத்தில் காளைகள் துன்புறுத்தப்படாமல் ஜல்லிகட்டு நடத்தப்படவேண்டும்.

சினிமா படங்களில் விலங்குகள் பயன்படுத்த விரும்பினால் முன் அனுமதி பெறவேண்டும். எந்த இடத்தில் எப்போது விலங்குகளை கொண்டு சூட்டிங் நடத்தப்படுகிறது என்பதை தெரிவிக்கவேண்டும்.

விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்று நாங்கள் சான்றிதழ் வழங்கவேண்டும். அவ்வாறு வழங்காவிடில் சென்சார் போர்டு அதுபற்றி விசாரிக்கும் என்றார் அவர்.

English summary
Animal welfare commission has granted permission to 271 bulls to take part in Jallikattu in Tamil Nadu. All the bulls were verified whether they fulfilled the SC guidlines. In Tamil Nadu, Alanganallur, Avaniyapuram and Balamedu were permitted to conduct Jallikattu this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X