For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை பயங்கரவாத செயலில் ராணாவுக்குத் தொடர்பில்லை-அமெரிக்க கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Google Oneindia Tamil News

Rana
சிகாகோ: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தஹவூர் ராணாவுக்குத் தொடர்பில்லை. அதேசமயம், டென்மார்க் தீவிரவாத சதித் திட்டம் மற்றும் அதற்குத் தேவையான உதவிகளை லஷ்கர் இ தொய்பாவுக்கு செய்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது நிரூபிக்கப்படுவதால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்படுவதாக அமெரிக்காவின் சிகாகோ மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ஹூசேன் ராணா, மும்பை பயங்கரவாத வழக்கில் ஒரு குற்றவாளியாக இந்தியாவில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்தஇருவரையும் அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

இதில் ராணா மீ்தான வழக்கின் விசாரணை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 12 நீதிபதிகள் கொண்ட குழு முன்பு நடந்து வந்தது. இறுதியில் கடந்த 2 நாட்களாக நீதிபதிகள் தீர்ப்பை அறிவிக்கும் பணிகளில் இறங்கினர்.

நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க நேரப்படி மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் ராணா மீதான குற்றச்சாட்டுக்களில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர். ஒரு குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

12 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்த மாவட்ட நீதிபதி ஹாரி லெனின்வெபர் தீர்ப்பை வாசித்தார்.

இதுகுறித்து நீதித்துறை செய்தித் தொடர்பாளர் ரான்டல் சம்போர்ன் கூறுகையில், ராணா மீதான 2 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று டென்மார்க் பயங்கரவாத சதித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உதவியது. 2வது, லஷ்கர் இ தொய்பாவுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தது.

அதேசமயம், 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் அவர் எந்தவிதமான உதவிகளையும் செய்யவில்லை என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர் என்றார்.

மும்பை சம்பவத்தில் ராணாவுக்குத் தொடர்பில்லை என்று அமெரிக்க கோர்ட் கூறியிருப்பது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

தற்போது நிரூபிக்கப்பட்டுள்ள 2 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ராணாவுக்கு 30 ஆண்டு கால சிறைத் தண்டனை கிடைக்கும்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள், தண்டனை விவரம் எப்போது அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்டது முதல் ராணா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு இதுவரை ஜாமீன் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பையொட்டி ராணா கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தான். நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்ததும் அவன் அதிர்ச்சி அடைந்தான்.

ராணா வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியமாக மாறி ராணாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருந்தான் ஹெட்லி. மரண தண்டனையிலிருந்து தப்புவதற்காக இப்படி அப்ரூவராக அவன் மாறியிருந்தான். ஹெட்லியின் வாக்குமூலத்தின்போது, இந்தியாவில் தானும், லஷ்கர் இ தொய்பா அமைப்பும் செய்த சதி வேலைகள், உளவு வேலைகளை விவரித்தான். இந்தியாவில் மும்பையில் நடந்த பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐக்கும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் இருந்த மிக நெருங்கிய தொடர்புகளை அவன் அம்பலப்படுத்தினான்.

மும்பை பயங்கரவாத செயல் குறித்த அனைத்து சதி வேலைகளும் ராணாவுக்கும் தெரியும் என்றும் ஹெட்லி கூறியிருந்தான். இந்த நிலையில் ராணாவுக்கு மும்பை சம்பவம் தொடர்பாக எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க கோர்ட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நாளிதழில் நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரம் இடம் பெற்றது. இதையடுத்து அந்த பத்திரிக்கை அலுவலகம் மற்றும் கார்ட்டூனிஸ்ட் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டது. பின்னர் இது கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டது. இந்த சதித் திட்டத்திற்குத் தேவையான தகவல் உள்ளிட்ட ஆவண உதவிகளை ராணா செய்து கொடுத்ததாகத்தான் தற்போது அமெரிக்க கோர்ட் கூறியுள்ளது.

தீர்ப்பு குறித்து ராணாவின் வழக்கறிஞர் பாட்ரிக் ப்ளீகன் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 15 ஆண்டுகள் என மொத்தமாக 30 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ராணா லஷ்கர் இ தொய்பாவுக்கு செய்த உதவியால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு மிகவும் விசித்திரமாக உள்ளது. ராணாவால் மரணம் ஏற்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஒரு பயங்கரவாத செயலுக்கு உதவினார் என்றும், இன்னொரு செயலுக்கு (மும்பை) அவர் உதவவில்லை என்றும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர் என்றார்.

தீர்ப்பை கேட்பதற்காக ராணாவின் மனைவி சம்ராஸ் ராணா, அவரது இரு மகள்கள், சம்ராஸின் தாயார் ஆகியோர் வந்திருந்தனர்.

English summary
Pakistani-Canadian Tahawwur Hussain Rana has been acquitted by a US court on charges of abetting Mumbai terror attacks but was convicted for providing material support to Lashkar-e-Taiba (LeT) and helping a terror plot in Denmark. The 12-member jury announced the verdict at the end of two days of deliberations against 50-year-old Rana, a co-accused in the Mumbai attack with David Coleman Headley. Rana faces a maximum sentence of 30 years in prison on the two counts combined and remains in Federal custody without bond, a US Justice Department statement said. No sentencing date was set.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X