For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்பால் மசோதா பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ஆக. 16ல் அன்னா உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

Anna Hazare
டெல்லி: லோக்பால் மசோதா தொடர்பாக ஆறு முக்கியப் பிரச்சினைகளில் உடன்பாடு ஏற்படாததால் லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து கடும் ஏமாற்றம் தெரிவித்துள்ள சமூ்க சேவகர் அன்னா ஹஸாரே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16ம் தேதி தான் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.

லோக்பாலை ஒரு பொம்மை அமைப்பாக வைத்திருக்கவே அரசு விரும்புவதாகவும் அன்னா ஹஸாரே குழுவினர் குற்றம் சதாட்டியுள்ளனர்.

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தன்னிச்சையான உயர் அதிகாரங்களைக் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை தயாரிப்பதற்காக 5 அமைச்சர்கள், 5 சமூக ஆர்வலர்கள் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை வளையத்திற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று அன்னா ஹஸாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை அரசு கேட்க மறுத்து வருகிறது. இதுதொடர்பாக முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் நிலவி வந்தன. இந்த நிலையில் நேற்று இக்குழுவின் கடைசி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் தாங்கள் தயாரித்து வைத்திருந்த வரைவுத் திட்டத்தை இரு தரப்பும் பரிமாறிக் கொண்டன.

ஒரு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் 6 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் உயர்நிலை நீதிபதிகளை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவது, நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்களுக்கு நடத்தை விதிகளை வகுப்பது, லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது, அவர்களை நீக்கும் நடைமுறையை வகுப்பது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

மேலும் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை தர வேண்டும் என்று ஹஸாரே குழு வலியுறுத்துகிறது. ஆனால் 10 ஆண்டு தண்டனை போதும் என்று அரசுத் தரப்பு கூறுகிறது.

இப்படி அரசுத் தரப்பில் முரண்டு பிடிப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதுகுறித்து ஹஸாரே குழுவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 7 பேர் இருக்கும் வகையில் அரசின் மசோதா உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் உறுப்பினர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண்.

இதற்கு முந்தைய வரைவிலாவது, பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போதைய வரைவில் அதுவும் இல்லை என்று இன்னொரு உறுப்பினரான அரவிந்த் கேஜரிவால் குறைகூறியிருக்கிறார்.

இந்த நிலையில், லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிந்திருப்பதால் திட்டமிட்டபடி, அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில் ஆகஸ்ட் 16-ம் தேதி ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கப் போவதாக ஹஸாரே அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஹஸாரேவும் போராட்டத்தில் குதித்தால் மீண்டும் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்க நேரிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

English summary
Anna Hazare and his team is upset with Govt's stand in Lokpal draft bill. After the final round of talks failed yesterday, Anna announced that, his fast against corruption will begin on Aug 16 as planned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X