For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டவர், தமிழே தெரியாதவர் எப்படி சமச்சீர் கல்வி நூல்களைப் படித்தார்?'

Google Oneindia Tamil News

Chennai HC
சென்னை: டிஏவி பள்ளிகளின் தலைவரான ஜெயதேவ் தமிழே படிக்கத் தெரியாதவர். 82 வயதான இவர் 78 வயது வரை ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். இப்படிப்பட்டவர் எப்படி சமச்சீர் கல்வி குறித்த புத்தகங்களைப் படித்து ஆய்வு செய்தார் என்பது பெரும் வியப்பாக உள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பான ஆய்வுக் குழுவின் முடிவுகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதிடப்பட்டது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு தனது முடிவை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில் சமச்சீர் கல்வி நூல்கள் தரமற்றவையாக உள்ளன, மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக அவை இல்லை, இவற்றைப் பயன்படுத்த முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாளை முதல் தினசரி விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்துள்ள மனோன்மணி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 10,000 பக்கங்களைக் கொண்டதாக சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்கள் உள்ளன. இதை 4 முறை மட்டுமே கூடிய ஆய்வுக் குழுவினர் படித்து முடித்தது எப்படி?

இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள திருமதி ஒய்ஜிபி, ஜெயதேவ் ஆகியோர் கல்வியாளர்களே அல்ல.

அதிலும் 82 வயதான ஜெயதேவ், 78 வயது வரை ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். அவருக்குத் தமிழே படிக்கத் தெரியாது. அப்படிப்பட்டவர் எப்படி சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களைப் படித்தார் என்பது பெரும் வியப்பாக உள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து கருத்துக் கூற மட்டுமே இந்தக் குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது. மாறாக தீர்ப்பு கூற இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

இந்தக் குழு தெரிவித்துள்ள கருத்துக்களை அப்படியே நிராகரிக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மனோன்மணி தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி குழு அறிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும்-ராமதாஸ்:

இந் நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பரிந்துரை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு, சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படிதான் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்ற போதிலும், இதிலுள்ள உறுப்பினர்களை தேர்வு செய்தது தமிழக அரசுதான். எனவே தமிழக அரசு நினைத்ததை இக்குழு செய்து முடித்திருக்கிறது.

இந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரான தனியார் பள்ளிகளின் முதலாளிகளை உறுப்பினர்களாக நியமித்தபோதே, சமச்சீர் கல்வி முறைக்கு இக்குழு சமாதி கட்டிவிடும் என்று அச்சம் தெரிவித்திருந்தேன். அதன்படியே இப்போது நடந்திருக்கிறது.

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்காக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவில்லை. மாறாக ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஆணையிட உச்ச நீதிமன்றம், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும்படிதான் 9 பேர் குழுவுக்கு அறிவுறுத்தியிருந்தது.

சமச்சீர் கல்விமுறை செல்லும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கனவே உறுதி செய்திருப்பதால், சமச்சீர் கல்வி முறையை மாற்றுவது குறித்து இக்குழு ஆராயக் கூடாது- மாறாக சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மட்டுமே இக்குழு ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவோ, உச்ச நீதிமன்றம் சொன்ன பணிகளை செய்யாமல், சொல்லாத விசயங்களை செய்து விட்டு சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும், அறிக்கை களையும் ஆராய்ந்துதான் இந்த முடிவுக்கு வந்ததாக வல்லுநர் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

ஆனால், அக்குழு ஆராய்ந்ததாக கூறப்படும் அறிக்கைகளின் பட்டியலில், சமச்சீர் கல்வி தொடர்பான முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தாக்கல் செய்த அறிக்கை இடம் பெறவில்லை. சமச்சீர் கல்வி முறைக்கு அடிப்படையான முத்துக்குமரன் குழுவின் அறிக்கையையே படிக்காமல் வல்லுநர் குழு எப்படி இந்த முடிவுக்கு வந்தது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

வல்லுநர் குழு அறிக்கையை படிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. சமச்சீர் கல்வி வரக்கூடாது என்று தமிழக அரசு காலால் இட்ட பணியை வல்லுநர் குழு தலையால் செய்து முடித்திருக்கிறது.

வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவே இருப்பதால், அவற்றை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய் துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

English summary
Petitioner Manonmani who is seeking to implement Uniform Syllabus education, has questioned the qualification DAV Schools chairman Jayadev as educationist. She filed her reply in the Madras HC today. She said, 82 year old Jayadev is not an educationist. He was running an automobile business till his 78th year. He doesn't know Tamil. In this background how could he can read the Samacheer Kalvi books?. She also argued, How could the panel could read all 10,000 pages of the books in their 4 sittings?. The hearing will come up tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X