For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் தேதிக்கு பின் வரிகளை உயர்த்தியது சட்டசபை உரிமையை பாதிக்கும் செயல்- கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதியை அறிவித்த பின்னர், வரிகளை உயர்த்தி அரசு உத்தரவிட்டிருப்பது சட்டசபையின் உரிமையை மீறும் செயல் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி தானே கேள்வி கேட்டு தானே பதிலளித்துள்ள அறிக்கை:

கேள்வி: ரூ.3,900 கோடி வருவாய் கிடைக்கும் வகையில் ஜெயலலிதா அரசு திடீரென வரி விதிப்பில் மாற்றத்தைச் செய்துள்ளதே?

பதில்: ஜெயலலிதா அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 4-ம் நாள் காலை 10.40 மணிக்கு பேரவையிலே வைக்கப்படுமென்று ஆளுநரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அது ஏடுகளின் வாயிலாக தெரிவிக்கப்பட்டும் விட்டது. வழிவழியாக பின்பற்றப்பட்டு வரும் சட்டப்பேரவை மரபுகளின்படி சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், அதற்குப்பிறகு அரசின் முக்கிய அறிவிப்புகளோ - நிதித்துறையில் வரிகள் தொடர்பான மாற்றங்களோ செய்வதில்லை. அப்படி செய்யப்படுமானால் அது அவையின் உரிமையை பாதிக்கக்கூடியதாகும்.

ஆனால் இன்றைய நாளேடுகளில் ரூ.3,900 கோடி வருவாய் கிடைக்கும் வகையில் வரி விதிப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு அது இன்று முதல் (12-7-2011) அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ரூ.1200 கோடி அளவிற்கு மதுபானங்களின் மீதான வருவாய் கூடுதலாக கிடைக்குமளவிற்கு அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. புதிய மருத்துவ திட்டம் ஒன்றும் தொடங்கப்படவுள்ளதாக முதலமைச்சராலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பேரவையின் உரிமையை பாதிக்கின்ற செயல்களாகும். தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக இந்த அளவிற்கு வரி உயர்வே செய்யாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குள் ரூ.3,900 கோடிக்கு வரி விதிப்பு. மக்களே தேடிக்கொண்ட கொடுமை இது.

கேள்வி: "தவறான செய்திக்கு தா.பாண்டியன் மறுப்பு'' என்ற தலைப்பில் அ.தி.மு.க. ஆட்சியைப்பற்றி அவர் செய்த விமர்சனத்தை மாற்றி சொல்லியிருக்கிறாரே?

பதில்: தா.பாண்டியன் தனது அறிக்கையில், "ஜுலை 6-ந்தேதியன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இரு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் பேசும்போது, தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டிப் பேசியதாக சில தின, வார ஏடுகளில் வந்துள்ள செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே அதை மறுத்தும், விளக்கியும் எங்கள் கட்சியின் கருத்தையும், நிலையையும் தெளிவுபடுத்துகிறேன்'' என்று குறிப்பிட்டதோடு, அந்த அறிக்கையில் தொடர்ந்து அ.தி.மு.க. அரசுக்கு தனது பாராட்டுதல்களையெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

நான் கூட அவரது பேச்சினை மாற்றுக்கட்சி ஏடுகள்தான் தவறாக திரித்து வெளியிட்டு விட்டனவோ என்று எண்ணி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வமான நாளேடான "ஜனசக்தி''யை எடுத்துப் பார்த்தேன். அந்த இதழின் ஜுலை 8-ம் தேதிய நாளேட்டில் முதல் பக்கத்திலேயே அவரது பேச்சு வெளியாகியுள்ளது. அதில் 3-ம் பத்தியில் 2-வது பாராவில், "தேர்தல் கூட்டணி வெற்றி பெற்றதற்கு பிறகு அமைய பெற்றுள்ள தமிழக ஆட்சியில் எந்த ஒரு மாற்றமும் இன்னமும் ஏற்படவில்லை. தமிழக அமைச்சரவையில் அங்கும் இங்குமாக நிகழ்த்தப்பட்டுள்ள மாற்றங்களை தவிர'' என்று தா.பாண்டியன் பேசியதாக வந்துள்ளது.

இது மாத்திரமல்ல, ஆங்கில நாளேடான "டெக்கான் கிரானிகல்'' இதழில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். எதை நினைத்து ஆச்சரியப்பட்டு தெரியுமா? முதல்வரும், கூட்டணிக்கட்சி தலைவருமான ஜெயலலிதா பாண்டியன் வீட்டு திருமணத்தை புறக்கணித்து விட்டு நடிகர் கார்த்தி திருமணத்திற்காக அவர் இல்லத்திற்கே சென்று ஜெயலலிதா வாழ்த்தியதற்கு காரணம்-பாண்டியன் ஜெயலலிதா அரசின் செயல்பாடுகளையும், அமைச்சரவை மாற்றத்தைத்தவிர உருப்படியாக எதையும் செய்யாததையும் விமர்சித்து பேசியதுதான்'' என்று எழுதியதையும் நினைக்கும் போது, பாண்டியன் அவசர அவசரமாக அறிக்கை விட நேர்ந்தது ஏன் என்பது புரிகிறது.

அதிர்ஷ்டக்கார பிள்ளையார்

கேள்வி: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலை திருப்பணி செய்யப்போவதாக அறிவித்து ரூ.18.5 லட்சம் அதற்காக செலவிட ஜெயலலிதா ஆணை பிறப்பித்திருக்கிறாரே?

பதில்: ஓமந்தூரார் வளாகத்திற்குள் தி.மு.க. அரசு புதிய தலைமைச்செயலகம் கட்டியது என்பதற்காக -அந்த இடத்தை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதுபற்றி நீதியரசர் தங்கராஜை கொண்டு விசாரணை ஆணையமும் அறிவித்திருக்கிறார். அது மாத்திரமல்லாமல், அந்த இடத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டுமென்பதற்காக, ஆலமர பிள்ளையாருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆலமர பிள்ளையார்கள் மழையிலும் வெயிலிலும் வாடிக்கொண்டிருக்கும்போது கருணாநிதி புதிய தலைமைச்செயலகத்தைக் கட்டிய காரணத்தால், அங்கேயுள்ள ஆலமர பிள்ளையாருக்கு திருப்பணி செய்ய அம்மையார் ஆணை பிறப்பித்திருக்கிறார் போலும்.

கேள்வி: ஜெயலலிதா அறிவித்துள்ள அ.தி.மு.க. அரசின் புதிய மருத்துவக்காப்பீடு திட்டம் பற்றி?

பதில்: அ.தி.மு.க. அரசின் புதிய திட்டம் அல்ல அது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற திட்டம்தான் அது. அ.தி.மு.க. அரசு புதிதாக எதையும் செய்யாவிட்டாலும், ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, அதிலே ஒருசில சிறிய மாற்றங்களை செய்து புதிய திட்டங்களை போல அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கழக ஆட்சியில் 642 வகையான சிகிச்சைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதிலே வேறு சில நோய்களின் பெயர்களை தற்போது சேர்த்து 950 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அது தவிர தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. தற்போதைய திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒரே குடும்பத்தில் நான்கு லட்சம் ரூபாயை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது. எனவே அந்த அறிவிப்பிலும் புதிதாக எதுவும் இல்லை. இவைகளைத்தவிர வேறு எதுவும் புதிதாக இல்லை. பரிசோதனை செலவுத்தொகை என்றெல்லாம் சொல்லியிருப்பது ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்லப்பட்டுள்ள அறிவிப்பாகும்.

கழக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் பற்றி இதே ஜெயலலிதாதான் அந்த திட்டத்தினால் தனியார் காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளும்தான் பயன்பெற்றன என்றும், அவை உருப்படியாக நடைபெறவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். இப்போது அவர் கொண்டு வருகின்ற திட்டத்திற்காக தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம்தான் டெண்டர் கோரியிருக்கிறார். தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

முன்னதாக நேற்று செய்தியாளர்கள் கருணாநிதியை சந்தித்தபோது அவர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் அதற்கு கருணாநிதி கூறிய பதில்கள்:

கேள்வி: நில அபகரிப்பு குறித்து தி.மு.க.வினர் மீது வரும் புகார்கள் பற்றி விசாரிக்க காவல்துறை சிறப்பு பிரிவை தொடங்கவிருப்பதாக அரசு அறிவித்ததையொட்டி, நீங்கள் அண்ணா அறிவாலயத்தில் கட்சியினரின் கோரிக்கைகளை கேட்பேன் என்று சொல்லியிருந்தீர்களே அதற்கு ஏதாவது பலன் உள்ளதா?

பதில்: கழக தோழர்கள் அதுபற்றி என்னிடத்தில் முறையிடுகிறார்கள். வழக்கறிஞர்கள் மூலமாகவும் அவற்றை விசாரித்து அறிந்து கொள்கிறேன். உண்மையிலேயே நில அபகரிப்பு நடைபெற்றிருந்தால் அவர்கள் நடவடிக்கைக்கு உரியவர்களே ஆவார்கள்.

கேள்வி: விஜயகாந்த் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்து அரசை தட்டிக்கேட்குமா? போராட்டம் நடத்துமா?

பதில்: தி.மு.க. எதிர்க்கட்சியா இல்லையா என்பதைவிட திராவிடர்களின் நலன்களுக்காக பாடுபடுகின்ற ஒரு இயக்கம் என்பது தான் நிதர்சன உண்மை.

கேள்வி: சமச்சீர் கல்வி பிரச்சினை காரணமாக பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் ஆகியும் மாணவர்கள் பாடங்களை படிக்க தொடங்காத நிலை உள்ளதே?

பதில்: மாணவர்கள் படிக்காமல் இருக்கிறார்கள். அவர்களை பெற்றவர்களும், இந்த அரசுக்கு வாக்களித்தவர்களும் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார் கருணாநிதி.

வரி உயர்வை ரத்து செய்க-ராமதாஸ்

இதற்கிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

முதல்வர் ஜெயலலிதா, பொறுப்பேற்ற 2-வது மாதத்திலேயே ரூ.4,200 கோடி அளவுக்கு புதிய வரிச் சுமைகளை மக்களின் தலையில் சுமத்தியிருக்கிறார். வேளாண் பயன்பாட்டிற்கான உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த மதிப்புக் கூட்டுவரி ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

அதேபோல் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு அவற்றுக்கு 20 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் வரவேற்கத்தக்கது. ஆனால் துணி வகைகள், சமையல் எண்ணெய் உட்பட பொதுமக்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டிருப்பது ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும்.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. இந்த நிலையில் மாநில அரசும் வரிகளை உயர்த்தினால் ஏழை எளிய மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. 3 வாரங்களில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். எனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மக்களை பாதிக்கும் வரி உயர்வை ரத்து செய்யவேண்டும்.

இன்னொருபுறம் மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழக அரசோ மது விற்பனையை இன்னும் பணம் காய்க்கும் மரமாகக் கருதிக் கொண்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has slammed TN govt for the tax hike. He said in a statement that, after announcing the date of Budge, hiking the Tax is a violation of Assembly's privilege, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X