
டெல்லி: நட்பு, தொழில் என அனைத்திலும் இரண்டறக் கலந்த நண்பர்களாகத் திகழ்ந்த அமிதாப்பும் அமர்சிங்கும் இப்போது பிரிந்துவிட்டனர். அமர்சிங் நிறுவனத்திலிருந்து அமிதாப்பும், அமிதாப் நிறுவனத்திலிருந்து அமர்சிங்கும் பரஸ்பரம் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி பொது செயலாளராக இருந்தவர் அமர்சிங். பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இவர் கட்சியில் முலாயம்சிங் யாதவுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார். இப்போது கட்சியிலிருந்து விலகி நிற்கிறார்.
நடிகர் அமிதாப்பச்சன் அவரது மனைவி ஜெயாபச்சன், நடிகை ஜெயப்பிரதா உள்பட சினிமா பிரபலங்களை அரசியலுக்கு கொண்டு வந்து கட்சியில் சேர்த்தார். இதனால் அமிதாப்பச்சன்-அமர்சிங் இடையே நெருக்கம் ஏற்பட்டது. ஆனால் அமிதாப்பச்சன் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டார். இருவருக்கும் இடையே தொழில் நிறுவன கூட்டணி நீடித்து வந்தது.
அமிதாப்பச்சனின் ஏ.பி. கார்ப்பரேசன் நிறுவனத்தில் அமர்சிங் பங்குதாரராக சேர்ந்து துணை தலைவர் பொறுப்பு வகித்தார். இதே போல் அமர்சிங்கின் எரிசக்தி வளர்ச்சி கழக நிறுவனத்தில் அமிதாப்பச்சன் முக்கிய நிர்வாகியாக பொறுப்பு வகித்தார்.
தற்போது இருவரும் தொழில் கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டனர். அமிதாப்பச்சனும், அமர்சிங்கும் ஒருவருக்கொருவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டனர்.
இது பற்றி அமர்சிங் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் எரிசக்தி வளர்ச்சி கழக நிறுவன கூட்டத்தில் அமிதாப்பச்சன் 2,3 தடவை மட்டுமே கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் ஆர்வம் காட்டாததால் இருவரும் விலகிக் கொண்டோம்," என்றார்.
சமீபத்தில் அமர்சிங் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளரான ஜெயப்பிரதாவும் கட்சியில் இருந்து விலகி விட்டார். ஆனால் மற்றொரு ஆதரவாளரான ஜெயாபச்சன் கட்சியில் இருந்து விலக மறுத்து விட்டார். தொடர்ந்து கட்சி பொறுப்பில் நீடித்து வருகிறார். இதன் காரணமாகவே அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.










