நாகப்பட்டனத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம்-ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 13, 2011, 14:24 [IST]
Nagai Will House Fishery University Jaya Aid0091
சென்னை: நாகப்பட்டனத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இதுதொடர்பாக விதி எண் 110ன் கீழ் அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையினைக் கொண்டுள்ளது. 591 கடல் மீனவ கிராமங்களில், சுமார் 9 லட்சம் மீனவ மக்கள் உள்ளனர். 6,200 மீன்பிடி விசைப் படகுகளும், 50,000 பாரம்பரிய கலன்களும் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடல் மீன் உற்பத்தி 4 லட்சம் டன் ஆகும். தமிழ்நாட்டிலிருந்து 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

மீன்வளத் துறையினை நவீனப் படுத்துவதற்கும்; கடல்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக ஆக்கிடவும்; எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மீன்பதன அலகுகள் அமைத்தல்; மீன்பிடி விசைப் படகுகள் வாங்குதல்; ஆழ்கடல் மீன்பிடிப்பினை மேற்கொள்ள ஊக்குவிப்பு உதவிகள் அளித்தல்; உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; மீனவர்களுக்கு தேவையான உதவிகள் அளித்தல் போன்ற பல முன்னோடி நடவடிக்கைகள் எனது அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. குளிரூட்டும் நிலையங்கள் அமைத்தல்; சிப்பம் கட்டுதல்; விற்பனை மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகரித்தல் ஆகியவற்றிற்கான கொள்கைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் துவங்கப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது மீன்வளக் கல்லூரியை தூத்துக்குடியில் நிறுவினார்.

தமிழகத்தில் மீன்வளத்தை மேம்படுத்தவும்; மீன்வளத்தைப் பெருக்குவதில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மீனவர்களின் வருவாய் மேம்பாடு அடையச் செய்வதற்கும்; மீன்வளக் கல்வியை மேலும் ஊக்குவிப்பது அவசியம் ஆகிறது. மீன்வள மேம்பாட்டில் முன்னோடியாக உள்ள நாடுகளில், மீன்வளக் கல்விக்கென பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவிலும், நமது அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன்வளம் மற்றும் பெருங்கடல் அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மீன்வளத்தைப் பெருக்குவதில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், அதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெருக்குவதற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த அடிப்படையில், மீன்வளத்திற்கென, “மீன்வளப் பல்கலைக்கழகம்" ஒன்றை நிறுவ எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகப்பட்டினம் மாவட்டம் 188 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன்பிடித்தல், உலர் மீன் உற்பத்தி மற்றும் இறால் வளர்ப்பு ஆகியவை இம்மாவட்டத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள் ஆகும். இம்மாவட்டத்தில் 9,000 மீன்பிடிக் கலன்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மீன்வளப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு நாகப்பட்டினம் மிகவும் உகந்த இடமாக உள்ளதால், இந்த மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் நிறுவப்படும்.

நாகப்பட்டினம் தாலுகாவில் பனங்குடி மற்றும் நாகூர் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

முதற்கட்டமாக,

தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மீன்வளத் துறையின் ஆராய்ச்சிப் பிரிவு, சென்னையில் உள்ள மீன்வளத் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம், சென்னையில் உள்ள மீன்வளப் பணியாளர் பயிற்சி நிலையம், தமிழ்நாடு கடல்சார் கழகம் ஆகியவை இந்தப் புதிய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில்,

இறால் வளர்ப்பு, கெண்டை மீன் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மீன் மதிப்பு கூட்டியப் பொருட்கள் உற்பத்தி, மீன்பிடி படகு மற்றும் இயந்திர பராமரிப்பு, கடலாள் பயிற்சி மற்றும் நீர்வழிப் பயிற்சி ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படும்.

தொழில் நுட்பப் பரிமாற்றம், விரிவாக்கக் கல்வி, மனித வளப் பயிற்சி மற்றும் மீன்வளப் பயன்பாடு ஆகியவற்றினை மேம்படுத்துவதில் இந்தப் பல்கலைக்கழகம் பெரும் பங்கு வகிக்கும். மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெறும் நபர்கள், உள்நாடு மற்றும் உலக அளவில் வேலை வாய்ப்பு பெறவும் இது வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
Posted by:
English summary
TN govt will set up a Fishery University in Nagapattinam, said CM Jayalalitha. She read out a statement regarding this in the Assembly today.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST