For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்வி, அறிவு வளர்ச்சிக்கு எதிரான மன நிலையில் இருக்கிறார் ஜெ.- பெ.மணியரசன்

Google Oneindia Tamil News

Maniyarasan
சென்னை: உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக் கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார் என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மணியரசன் விடுத்துள்ள விரிவான அறிக்கை:

உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதற்கென எழுப்பட்ட கோட்டூர்புரம் கட்டடத்திலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக்கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார். கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான செயலலிதாவின் மன நிலைக்கு நிறைய சான்றுகள் தரலாம்.

முதலில் சமச்சீர் கல்வியை தடை செய்தார்

கடந்த மே மாதம் முதலமைச்சரான உடனேயே கல்வியாளர்களால் பாராட்டப்பெற்ற சமச்சீர்க் கல்வியை தடைசெய்தார். தமிழகத்தில் பெரும்பாலானோர் சமச்சீர்க் கல்வியை மீட்க கருத்துகள் கூறினார்கள், போராடினார்கள். பரவலான மக்கள் கருத்தை செயலலிதா மதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட பிறகு வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சமச்சீர்க் கல்வியை செயல்படுத்தி வருகிறார்.

செம்மொழி ஆய்வு மையத்தை சிறுமைப்படுத்தினார்

இந்தியஅரசின் கீழ் செயல்படும் செம்மொழி மையம் தமிழக அரசுக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சரை குடியேற்றி செம்மொழி மையத்தை ஒரு சிறு பகுதியில் செயல்படும் நிலைக்கு உள்ளாக்கினார்.

தமிழக அரசின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் செம்மொழி ஆய்வகத்தையும் பாலாறு இல்லத்திலிருந்து வெளியேற்றி எழும்பூரில் ஒரு சிறிய இடத்திற்கு மாற்றினார். அத்துடன் பாரதிதாசன் செம்மொழி ஆய்வு மையத்திற்கு உரிய நிதி ஒதுக்காமலும், உரிய ஆய்வுத்திட்டம் வகுக்காமலும் முடக்கிவிட்டார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் விட்டு வைக்கவில்லை

தஞ்சையில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் செயலலிதா விட்டு வைக்கவில்லை. எம்.ஜி.ஆர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய போது அதன் விரிவாக்கத்திற்கென ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கினார். ஏற்கனவே அவ்வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்தார்கள். இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கட்ட அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

தமிழர்களின் அறிவு வளரக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்

இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்த்தால் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் அக்கறையில்லை என்பது மட்டுமல்ல, எதிர்நிலைக் கருத்தை கொண்டுள்ளார் எனபது தெரியவருகிறது. இலவசங்கள் வழங்கி, வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வது என்ற அதிகார அரசியலில் மட்டுமே செயலலிதா குறியாக இருக்கிறார். மக்கள் அறிவு வளர்ச்சிப் பெறுவதும், விழிப்புணர்ச்சி அடைவதும் அவரது வாக்கு வங்கி அரசியலுக்கும் அவரின் எதேச்சாதிகார மனப்போக்கிற்கும் இடையூறு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறார்.

அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான அவரது மன நிலை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான அவரது பழிவாங்கும் அரசியலோடு இணைந்து போகிறது.

அறிவு தாகத்தின் மீதான தாக்குதல்

தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களும், விழிப்புற்ற மக்களும் கல்வி மற்றும் அறிவு தாகத்தின் மீது செயலலிதா நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க வேண்டும். கோட்டூர்புரத்தில் இப்பொழுதுள்ள கட்டடத்திலேயே அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து செயல்படவும், தமிழக முதல்வரின் இடமாற்ற முயற்சியை தடுக்கவும் போராட வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Tamil desam podhuvudamai party leader P.Maniyarasan has slammed Chief Minister Jayalalitha for her decision to shift Anna Centenary library. He said, Jaya is keen to wipe out the knowledge of the people. By doing so, she thinks that she could safeguard her vote bank. TN poeple should realise this, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X