For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவில்களில் கழிப்பறை, குளியலறை வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வாழ்வில் சுவையும், சுறுசுறுப்பும் தருவதில் சுற்றுலா முதன்மையிடம் வகிக்கிறது. சுற்றுலாவின் மூலம் இயற்கை அழகு மிளிரும் இடங்களையும், வரலாற்று புகழ்மிக்க
இடங்களையும், பாரம்பரியமிக்க திருத்தலங்களையும் பொதுமக்கள் கண்டு களிக்கின்றனர்.

அறிவுப் புரட்சிக்கும், சிந்தனைக் கிளர்ச்சிக்கும் சுற்றுலா வழி வகுக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த சுற்றுலாவின் முக்கியத்துவத்தை
உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க திருத்தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில், முதன்மை திருத்தலமான அரங்கநாதர் திருக்கோவிலுக்கு தினமும் வருகை தரும் பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அம்மா மண்டபத்தின் அருகில் காவேரி ஆற்றில் குளித்து விட்டு, வெயில் மற்றும் மழைக் காலங்களில் அரங்கநாதரை தரிசிக்க, சிரமமின்றி செல்ல வசதியாக, ரூ.1 கோடி மதிப்பில் அம்மா மண்டபத்திலிருந்து அரங்கநாதர் கோவில் வரை சாலை ஓரத்தில் மேற்கூரை அமைக்கப்படும்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஓய்வறை, பொருட்கள் வைப்பறை, குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

முத்துப்பேட்டை ஜாம்பு வானோடை தர்காவுக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, தர்கா அருகில் ரூ.25 லட்சம் செலவில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகள் உள்ளிட்டவை அமைத்து தரப்படும்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீசௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடைப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.56 லட்சம் மதிப்பில் ஓய்வு மண்டபம், குளியலறை, கழிப்பறை உள்ளிட்டவை கட்டித் தரப்படும்.

விருதுநகர் மாவட்டம், பகவான் ரமண மகரிஷி அவதரித்த புண்ணியத் தலமான திருச்சுழியில் உள்ள பகவான் ரமண மகரிஷி இல்லத்தை காண தினமும் வருகைப் புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் ஓய்வு அறை, குளியலறை, குடிநீர் வசதி ஆகியவை கட்டி தரப்படும்.

இதேபோல இந்த மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியிலுள்ள மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருத்தங்கலில் உள்ள நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.40 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் ஓய்வு மண்டபம், கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை கட்டி தரப்படும்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள பிரசித்த பெற்ற சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்கும் பொருட்டு ரூ.43,60,000 செலவில் ஓய்வு அறை, பொருட்கள் வைப்பறை, கழிப்பறை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேவி மாவட்டம், ஆயக்குடியிலுள்ள பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, 25 லட்சம் ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி ஒன்று கட்டப்படும்.

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்ததும் வீரமாமுனிவர் ஆன்மிகப் பணியாற்றிய திருத்தலமான அடைக்கலமாதா திருத்தலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைக்காக ரூ.44 லட்சம் செலவில் ஓய்வறை கட்டுதல், குடிநீர் வசதி, குளியலறை, கான்கீரிட் சாலை மற்றும் மாதா குளத்திற்கு தடுப்புச் சுவர், படிக்கட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் முக்கிய திருத்தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதினால், மேற்கண்ட திருத்தலங்களுக்கு அதிகளவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கழிமுகத்துவாரம் அருகே உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, ரூ.34 லட்சம் மதிப்பில் ஓய்வு அறை கட்டுதல், படகுகள் நிறுத்துமிடம் கட்டுதல், புதிய படகுகள் வாங்குதல், உயிர்காப்பு சாதனங்கள் வாங்குதல் போன்ற பணிகள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu CM Jayalalithaa has ordered the officials to enhance the basic facilities in worship places over the state. For this, she has allotted extra fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X