For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமுளியில்திரண்டு 50,000 தமிழர்கள் போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்-தடியடி

Google Oneindia Tamil News

கம்பம்: வரலாறு காணாத வகையில் கேரளாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் உள்ள தேனி மாவட்ட மக்கள் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் பேரணியாக கேரளாவை நோக்கி படையெடுத்த நிலையில், இன்று மீண்டும் அதே அளவிலான மக்கள் பெரும் பேரணியாக கேரளாவை நோக்கி சென்று குமுளியில், தமிழகப் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குமுளிக்கு வந்தபோது அவரது காரை மறித்து கூட்டத்தினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் கல்வீசியவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் மக்கள் வரலாறு காணாத கோபத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். இந்த கோபமும், கொந்தளிப்பும், தேனி மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளது.

முல்லைப் பெரியாறு பாசன மாவட்டம் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தனை காலமாக தங்களிடமிருந்து பால், காய்கறி, அரிசி, பருப்பு என அத்தனையையும் பெற்று விட்டு நமது பெண்கள் மீதே கை வைத்து விட்டார்களே என்ற கொந்தளிப்புதான் அது.

இதனால்தான் தமிழகத்தின் பிற பகுதிகளை விட தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேறரளாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை இப்பகுதி மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஒரு வாரமாக கடும் போராட்டம்

குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுயாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் அலைகடலென திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. இந்தப் பேரணிக்கு யாரும் ஏற்பாடு செய்யவலில்லை. மக்களே திரண்டு பேரணியாக உருமாறி கேரளாவை நோக்கி படையெடுத்து விட்டனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் கடும் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றனர். இருப்பினும் குமுளி வரை மக்கள் முன்னேறிப் போய் விட்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது. பின்னர் கலெக்டரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.

2வது நாளாக மக்கள் எழுச்சிப் பேரணி

இந்த நிலையில், இன்றும் மக்கள் பேரணியாக கிளம்பினர். ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், கே.கே.பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மக்கள் பெரும் ஊர்வலமாக கிளம்பினர்.

விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 15,000 பேர் மோட்டார்சைக்கிள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பியுள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் நடந்தே சென்றனர்.

அத்தனை பேரும் குமுளியை நோக்கிச் சென்றனர்.ஆனால் அவர்கள் கேரள எல்லைக்குள் நுழையக் கூடாது என்று போலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து குமுளிக்கு முன்பு உள்ள தமிழக அரசின் போக்குவரத்துக்க கழக டிப்போ முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தால் எல்லைப் பகுதியில் பெரும் பதட்டமான நிலை காணப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்

இந்த நிலையில் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து சமரசம் பேசுவதற்காக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கார் மூலம் குமுளி புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரது காரைப் பார்த்த போராட்டக்காரர்கள், இத்தனை நாட்களாக வராமல் இப்போது வருகிறாரா என்று கூறி கார் மீது கல்வீசித் தாக்கினர்.

இதையடுத்து கல்வீச்சில் இறங்கியவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்து விரட்டினர். பின்னர் பன்னீர்செல்வத்தை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றது போலீஸ்.

சுடத் தயார் நிலையில் இருந்த கேரள போலீஸ்

முன்னதாக, கேரள எல்லைக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால் சுடுமாறு இடுக்கி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழக எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

மக்களின் இந்த எழுச்சிமிக்க போராட்டத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து இன்றும் பெரும் பரபரப்பு நிலவியது.

English summary
Thousands of villagers holding a massive rally toward Kerala for the 2nd day today. People from 5 villages are moving towards Kerala border town, Kumuli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X