For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்குக்கு ரூ. 1 கோடி செலவில் மணிமண்டபம்: ஜெயலலிதா

By Siva
Google Oneindia Tamil News

Pennycuick
சென்னை: தனது குடும்ப சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக்குக்கு முல்லைப் பெரியாறு அணை லோயர் கேம்ப் பகுதியில் மணி மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தென் தமிழக மாவட்டங்களான தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர், முல்லை ஆறு மற்றும் பெரியாறு என்ற ஆறுகளாக கேரள மாநிலத்தில் ஓடி வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை மூலம் இந்த மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறுகிறது.

மேலும் இம்மாவட்டங்களின் குடிநீர் தேவையும் இந்த அணை மூலம் பெருமளவு நிறைவு செய்யப்படுகிறது. இந்த முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கியவர் கர்னல் பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் ஆவார். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர்.

நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், சென்னை மாகாணத்தில், வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுயிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.

இதன் தொடர்ச்சியாக கர்னல் பென்னிகுயிக் அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாறு என்ற ஆறாக மேற்குப் புறமாக ஓடி அரபிக் கடலில் வீணாகச் சென்று கலப்பதைப் பார்த்து இதனை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் எனக் கருதி, பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார்.

இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு, அவை கிழக்கு முகமாக திருப்பி விடப்பட்டு, அங்கிருந்து ஒரு குகைப் பாதை வழியாக வைகை ஆற்றிற்குத் திருப்பி விடப்படுகிறது. இதற்காக திட்டம் ஒன்றினை தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற்றார்.

அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா அவர்கள் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர். காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல், மூன்று ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தினால், கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலக்கட்டங்களில் கிடைக்காததால் பென்னிகுயிக் அவர்கள் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு அணையை 1895ம் ஆண்டில் கட்டி முடித்தார்.

இந்த அணை அக்டோபர் 1895ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினை பெற்று வருகின்றன.

அந்தக் காலத்திலேயே பென்னிகுயிக் அவர்கள் இந்த அணையை சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லினால் புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டினார். புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டப்பட்ட அணைகள் நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்வதால் இந்த அணை இன்றும் உறுதியுடன் இருக்கின்றது.

இந்த அணையை கட்டியதன் மூலம்,

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”

என்ற எம்.ஜி.ஆர். அவர்களின் பாடலுக்கு இலக்கணமாக, நூறாண்டு கடந்தும் இன்றும் தமிழக மக்களின் நினைவில் பென்னிகுயிக் நிற்கின்றார்.

இந்த அணை இன்றளவும் நன்முறையில் இயங்கி வருவதாலும், மேலும் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பதாலும், இந்த அணையை உருவாக்கிய பென்னிகுயிக் அவர்களுக்கு நமது நன்றியினை காட்டும் வகையில், அன்னாருக்கு ஒரு நினைவு மணிமண்டபம் நிறுவ வேண்டும் என தேனி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் கோரியுள்ளனர்.

தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே உரிய காலத்தில் முடிப்பதற்காக தனது சொந்த நிதியினையும் செலவு செய்த பென்னிகுயிக் அவர்களது நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் அன்னாருக்கு லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் சுமார் 2500 சதுர அடி பரப்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், அவரது திருஉருவ சிலையுடன் கூடிய ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அதன் திறப்பு விழாவிற்கு பென்னிகுயிக் அவர்களின் பேரன் அழைக்கப்படுவார். முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட பெருமகனின் சேவையை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் இந்த மணிமண்டபம் அமையும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalithaa has announced that TN government will build a memorial at a cost of Rs.1 crore for J. Pennycuick, the british engineer who constructed Mullai Periyar dam. His grandson will be invited to open the memorial, she told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X