ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மீண்டும் ஜோகோவிச் சாம்பியன்

திங்கள்கிழமை, ஜனவரி 30, 2012, 10:13 [IST]
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ரபெல் நடேலை வீழ்த்தி ஜோகோவிச் மீண்டும் பட்டத்தை கைப்பற்றினார்.

மெல்போர்னில் இரண்டு வார காலம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீரரும் தற்போதைய சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச்சும், இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடாலும் மோதினர்.

இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆடிய ஆட்டம் ரசிகர்களை கட்டிப்போட்டது.

உலகின் தலைச்சிறந்த வீரர்கள் மோதிய இந்த ஆட்டம் உண்மையிலேயே ரசிகர்களுக்கு தீனி போடுவதாக அமைந்தது. இருவரும் கொஞ்சம் கூட சளைக்காமல் மல்லுக்கட்டினர். மாறி மாறி புள்ளிகளை சேர்த்ததால் ஆட்டமும் அனுமன் வால் போல் நீண்டு கொண்டே போனது. முதல் 4 செட்களில் இருவரும் தலா 2 வீதம் வென்றதால் வெற்றியை நிர்ணயிக்க ஆட்டம் 5-வது செட்டுக்கு சென்றது.

இரண்டு வீரர்களும் போட்டிப் போட்டு ஆடிய ஆட்டத்தால் வெற்றி யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு இழுத்துக் கொண்டே சென்றது.

இறுதியில், கடைசி செட்டில் 7-5 என்ற புள்ளியில் நடாலை ஜோகோவிச் 5-7, 6-4, 6-2, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஆட்ட துளிகள்

- ஆஸ்திரேலிய ஓபனில் நீண்ட நேரம் அதாவது 5 மணி 53 நிமிடம் நீடித்த இறுதிப் போட்டி இது. 2009-ல் நடால்- வெர்டஸ்கோ இடையேயான போட்டி 5 மணி 15 நிமிடம் நடைபெற்றது.

- 24 வயதான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2008 மற்றும் 2011-ம் ஆண்டும் வென்றிருக்கிறார். மேலும் அவரது கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளிலும் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற 5-வது வீரர் என்ற சிறப்பும் ஜோகோவிச்சுக்கு கிடைத்திருக்கிறது.

- ஜோகோவிச்சை சந்தித்த 7 மோதல்களிலும் நடால் தோல்வியையே தழுவியிருக்கிறார். அனைத்துமே இறுதி ஆட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by:
English summary
Defending champion and world number one Novak Djokovic beat second seed Rafael Nadal 5-7, 6-4, 6-2, 6-7, 7-5 to win his third Australian Open title on Sunday.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs