For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் எதையும் செய்யக் கூடாது- இந்தியா

Google Oneindia Tamil News

UNHRC
டெல்லி: ஐ.நா. மனித உரிமை குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் செய்தியையும், நோக்கத்தையும் இந்தியா ஆதரிக்கிறது. அதே சமயத்தில், ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நல்லிணக்கத்தையும், அமைதியையும் நிலைநாட்டுவதில் ஜனநாயக நாடான இலங்கைக்கு போதிய காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகள், இந்த நோக்கத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடையூறாக இருக்கக் கூடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததால் கோபமடைந்திருக்கும் இலங்கையை சமாதானப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை அரசு நியமித்த கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின்' (எல்.எல்.ஆர்.சி.) சிபாரிசுகளை நாங்கள் ஏற்கனவே வரவேற்றுள்ளோம். இலங்கையின் பல்வேறு மதரீதியான, இனரீதியான குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண இது நல்ல வாய்ப்பு என்று நாங்கள் கருதுகிறோம்.

கடந்த 2009-ம் ஆண்டு இதே குழு கூட்டத்தில் இலங்கை, இதை செய்வதாக உறுதி அளித்தது. தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்தினோம்.

இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை எல்.எல்.ஆர்.சி. ஆணையம் அங்கீகரித்துள்ளது.

போரின்போது காணாமல்போன நபர்கள், சிறை வைக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், உயர் பாதுகாப்பு மண்டலங்களை குறைத்தல், சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகளை தடை செய்தல், தனியார் நிலங்களை திரும்ப ஒப்படைத்தல், ராணுவமயமாக்கலை குறைத்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எல்.எல்.ஆர்.சி. ஆணையம் உறுதியான சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

இந்த சிபாரிசுகளை அமல்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்த குழு கூட்டத்தில் இலங்கை அரசு விளக்கிக் கூறியுள்ளது. இந்த அறிக்கையை அமல்படுத்துவது, உண்மையான நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவும், வடக்கு இலங்கையில் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு கணிசமான உதவிகளை செய்துள்ளது. வீடு கட்டிக் கொடுத்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், கல்வி, பொது சுகாதாரம், தொலைத்தொடர்பு வசதி ஆகியவற்றை நாங்கள் அளித்துள்ளதால், அங்கு இயல்பு நிலைமை திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், இலங்கை அரசு விரிவான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தை அமல்படுத்துதல், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மனித உரிமை மீறல் விஷயத்தில், சம்பந்தப்பட்ட நபர்களை பொறுப்பாளி ஆக்குவதுடன், மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள், இலங்கையின் சிறுபான்மை இனமாகிய தமிழர்கள் உள்பட அனைத்து இன மக்களிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும்.

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய, மேம்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு, நாடுகளுக்கு இருக்கிறது என்று இந்தியா நம்புகிறது. எனவே, இதுதொடர்பான தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் (இலங்கை) இறையாண்மை உரிமையை மதிப்பதாக இருக்க வேண்டும். மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை குழுவில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தின் செய்தியையும், நோக்கத்தையும் இந்தியா ஆதரிக்கிறது. அதே சமயத்தில், ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதெல்லாம், ஐ.நா. மனித உரிமை குழுவில் நாம் ஒப்புக்கொண்ட விதிமுறைகள்.

நல்லிணக்கத்தையும், அமைதியையும் நிலைநாட்டுவதில் ஜனநாயக நாடான இலங்கைக்கு போதிய காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகள், இந்த நோக்கத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடையூறாக இருக்கக் கூடாது.

அண்டை நாடான இலங்கையுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கலாச்சார மற்றும் ஆன்மிக உறவு, இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், இலங்கை நிகழ்வுகளில் இருந்து நாங்கள் ஒதுங்கி இருக்க முடியாது.

இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம், கண்ணியம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றுடன் கூடிய எதிர்காலம் அமைவதற்காக, நல்லிணக்க நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Indian govt has said that Sri Lanka should be consulted before UNHRC taking any decision on the country's issues. It has also said that, Sri Lanka is a democratic country. So we should give them more time to implement the LLRC recommendations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X