For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்துக்கு ரூ. 1000 கோடி நிதி

Google Oneindia Tamil News

Tamil Nadu Budget 2012
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவால் சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட விஷன் 2023 என்ற தொலைநோக்குத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

பெருளாதாரத்தை வேகமாக வளர்ச்சி அடையச் செய்யவும், பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவும், 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முக்கிய கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு தேவை என இத் தொலை நோக்குத் திட்டம் கணக்கிட்டுள்ளது.

இந்த கொள்கை இலக்குகளைக் கருத்தில் கொண்டு, இந்த வரவு-செலவுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உறுதியளித்தவாறு, இந்த புதிய திட்டங்களைத் தொடங்கி செயல் படுத்துவதற்காக, முதல்-அமைச்சர் தலைமையின் கீழ் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தை விரைவில் அமைப்பதற்கான சட்டம் இயற்றப்படும்.

தொடக்கமாக தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ. 1,000 கோடி இந்த 2012-2013 வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023 தொலை நோக்குத் திட்டத்தில், நமது மாநிலத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் இரண்டு இலக்க அளவிலும், தேசிய சராசரி வளர்ச்சியை விட இரண்டு சதவீதம் கூடுதலாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து, அத்தகைய வேகமான பொருளாதார வளர்ச்சியின் மூலம் நமது மாநிலத்தின் தனி நபர் வருமானத்தை 2023-ம் ஆண்டிற்குள் உயர் நடுத்தர வருவாய் நாடுகளின் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்று நமது முதல்-அமைச்சர் திட்டமிட்டுள்ளார். இந்த இலக்கை அடைய அயராது பாடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை அரசு உணர்ந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்காக, சுகாதாரம், கல்வி, தனிநபர் வருமானம், வறுமை, பாலினம் தொடர்பான குறியீடுகள், வேலை வாய்ப்பு ஆகிய வளர்ச்சிக் குறியீடுகளின் அடிப்படையில் 100 பின்தங்கிய வட்டாரங்களும், பின் தங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் கண்டறியப்படும்.

இவ்வாறு கண்டறியப் பட்ட பகுதிகளில், மேற்கூறிய குறைபாடுகளைப் போக்கிட, 'மாநில சரிநிகர் வளர்ச்சி நிதி' என்ற ஒரு சிறப்பு நிதியை உருவாக்கி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் சீரான வளர்ச்சி காண குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்.

இதன் தொடக்கமாக, இத்திட்டத்திற்கு ரூ. 100 கோடி நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பின்தங்கிய பகுதிகளுக்கான உதவி நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதிகளும் இந்த நோக்கத்திற்கென ஒருங்கிணைக்கப்படும்.

2012-2013-ம் ஆண்டு பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டாகும். பதினோராம் ஐந்தாண்டுத் திட்ட கால இலக்காக ரூ. 85,344 கோடி என்றிருந்த நிலையில், பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்ட இலக்காக ரூ. 1.85 லட்சம் கோடி என ஏற்கனவே நாங்கள் நிர்ணயித்திருந்தோம்.

இதை இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்ற லட்சிய இலக்காக உயர்த்தி நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை எய்த, திட்டப் பணிகளுக்கு மிக அதிகமான அளவு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, 2011-2012-ம் ஆண்டுத் திட்ட அளவான ரூ. 23,535 கோடி என்ற நிலையிலிருந்து 2012-2013-ம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 28,000 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
TN govt has allotted Rs. 1000 cr for Vision 2023 project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X