For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தானே' பாதித்த கடலூர், விழுப்புரத்தில் ரூ.1,000 கோடியில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள்!

By Chakra
Google Oneindia Tamil News

Tamil Nadu Budget 2012
சென்னை: தானே புயல் பாதிப்புக்குள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நிரந்தர சேதத்திற்கு உள்ளான குடிசைகளுக்கு மாற்றாக, ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர தமிழக பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இன்று சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2012-2013ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடும் சேதத்தையும், பெருந்துயரையும் 'தானே' புயல் ஏற்படுத்தியது. உடனடி நிவாரணத்திற்காக 850 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சேதமடைந்த 5,77,584 குடிசைகளுக்கு இழப்பீடாக 160 கோடி ரூபாயும், 5,58,163 ஏக்கர் பரப்பளவில் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடாக விவசாயிகளுக்கு 250 கோடி ரூபாயும் வழங்கப்பட்டன.

அத்தியாவசியத் தேவைகளான மின்சாரம், சாலை இணைப்புகள், குடிநீர் விநியோகம் ஆகியன மின்னல் வேகத்தில் சீரமைக்கப்பட்டன. இந்த இரண்டு மாவட்டங்களில் நிரந்தர சேதத்திற்கு உள்ளான குடிசைகளுக்கு மாற்றாக, ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, முந்திரி, தென்னை, இதர தோட்டப் பயிர்களை மீண்டும் நடவு செய்து புதுப்பிக்கவும், ஆண்டு பயிர்களை மீண்டும் பயிரிட்டு விவசாயிகளின் வாழ்வில் வளமையை கொண்டு வரும் வகையிலும் 790.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சிறப்பு திட்டத்தையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் இயற்கை இடர் பாடுகளை தமிழகம் அடிக்கடி சந்தித்து வருவதால் பேரிடர் நேரிடும்போது, விரைவாகவும், திறமையாகவும் செயல்படக்கூடிய மாநில பேரிடர் மீட்புப் படை ஒன்று ஏற்படுத்தப்படும். தேசிய பேரிடர் மீட்புப் படை போன்று மீட்பு நடவடிக்கைகளில் விரைந்து செயல்பட சிறப்பு பயிற்சி பெற்ற அமைப்பாக இந்த அமைப்பு செயல்படும்.

மாநில பெருளாதாரத்தை வேகமாக வளர்ச்சி அடையச் செய்யவும், பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவும், 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முக்கிய கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு தேவை.

இந்த கொள்கை இலக்குகளைக் கருத்தில் கொண்டே, இந்த பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ. 1,000 கோடி இந்த 2012-2013 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023 தொலை நோக்குத் திட்டத்தில், நமது மாநிலத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் இரண்டு இலக்க அளவிலும், தேசிய சராசரி வளர்ச்சியை விட இரண்டு சதவீதம் கூடுதலாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து, அத்தகைய வேகமான பொருளாதார வளர்ச்சியின் மூலம் நமது மாநிலத்தின் தனி நபர் வருமானத்தை 2023ம் ஆண்டிற்குள் உயர் நடுத்தர வருவாய் நாடுகளின் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்று நமது முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை அரசு உணர்ந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்காக, சுகாதாரம், கல்வி, தனிநபர் வருமானம், வறுமை, பாலினம் தொடர்பான குறியீடுகள், வேலை வாய்ப்பு ஆகிய வளர்ச்சிக் குறியீடுகளின் அடிப்படையில் 100 பின்தங்கிய வட்டாரங்களும், பின் தங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் கண்டறியப்படும்.

இவ்வாறு கண்டறியப் பட்ட பகுதிகளில், மேற்கூறிய குறைபாடுகளைப் போக்கிட, 'மாநில சரிநிகர் வளர்ச்சி நிதி' என்ற ஒரு சிறப்பு நிதியை உருவாக்கி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் சீரான வளர்ச்சி காண குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்.

இதன் தொடக்கமாக, இத்திட்டத்திற்கு ரூ. 100 கோடி நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பின்தங்கிய பகுதிகளுக்கான உதவி நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதிகளும் இந்த நோக்கத்திற்கென ஒருங்கிணைக்கப்படும்.

2012-2013ம் ஆண்டு பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டாகும். பதினோராம் ஐந்தாண்டுத் திட்ட கால இலக்காக ரூ. 85,344 கோடி என்றிருந்த நிலையில், பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்ட இலக்காக ரூ. 1.85 லட்சம் கோடி என ஏற்கனவே நாங்கள் நிர்ணயித்திருந்தோம். இதை 2 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்காக உயர்த்தி நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனை எய்த, திட்டப் பணிகளுக்கு மிக அதிகமான அளவு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, 2011-2012ம் ஆண்டுத் திட்ட அளவான ரூ. 23,535 கோடி என்ற நிலையிலிருந்து 2012-2013ம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 28,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

English summary
TN government has allotted Rs.1000 crore in the 2012-2013 budget to build one lakh concrete houses in the Thane cyclone hit Villupuram and Cuddalore districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X