For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூக்கில் போடப்பட்ட தீரன் சின்னமலைக்கு சங்ககிரியில் நினைவுச் சின்னம்: ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

dheeran Chinnamalai
சென்னை: இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தீரன் சின்னமலைக்கு அவர் தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரியில் விரைவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் 110-ன் விதியின் கீழ் ஜெயலலிதா அறிக்கை வாசித்தார். அதன் விவரம்:

விடுதலைப் போராட்ட வீரர்களையும், தன்னலமற்ற மக்கள் சேவை புரிந்தவர்களையும், சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க பாடுபட்டவர்களையும்; மக்களின் உரிமைகளை மீட்க போராட்டங்களை நடத்தியவர்களையும் கெளரவிக்கும் விதத்தில் அவர்களுக்கு மணிமண்டபங்கள் அமைப்பதிலும், திருவுருவச் சிலைகள் அமைப்பதிலும், அரசு கட்டடங்களுக்கு அவர்களது பெயர்களை வைப்பதிலும்; முன்னோடியாக விளங்குவது எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்று சொன்னால் அது மிகையாகாது.

பரம்பரை பரம்பரையாய் அடிமைத்தளையில் சிக்குண்ட நம் இந்திய நாடு, தற்போது, உரிமை பெற்ற நாடாக விளங்குகிறது. இச்சுதந்திரத்தைப் பெற இந்திய விடுதலைப் போரில் எண்ணற்ற தியாகச் சீலர்கள், கிளர்ந்து எழுந்து; தங்கள் வாழ்வை துச்சமென மதித்து, அன்னை பாரதத்தின் அடிமைத் தளையை தகர்த்தெறிய பாடுபட்டனர்.

இத்தகைய விடுதலைப் போரில், தமிழகத்திலும் பல தலைவர்கள் தோன்றி தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இந்த விடுதலைப் போராட்டத்தில், பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆர்ப்பரித்து, ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுக்கும் பெருமலையாக விளங்கியவர் மாவீரர் தீரன் சின்னமலை.

சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்து, தனக்கென ஒருபாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழகம் புரட்சித் தலைவர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. எனது ஆட்சிக் காலத்தில், சென்னை, அண்ணா சாலையில், தீரன் சின்னமலை முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதோடு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணிக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடையையும் நான் அளித்தேன்.

1995ம் ஆண்டு தீரன் சின்னமலைக்கு தமிழக அரசின் சார்பில், காங்கேயத்தில், நினைவு விழா நடத்தப்பட்டு; அவ்விழாவில் அவரது வாரிசுகள், கெளரவிக்கப்பட்டனர். எனது ஆட்சிக் காலத்தில் தான், கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கரூரைத் தலைநகராகக் கொண்டு தீரன் சின்னமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில், அவரது நினைவு நாளான, ஆடி மாதம் 18ம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க 2003ம் ஆண்டு நான் உத்தரவிட்டேன். தியாகி தீரன் சின்னமலை நினைவைப் போற்றும் வகையில், 30 லட்சம் ரூபாய் செலவில், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கிராமம், ஓடா நிலையில் மணிமண்டபம் என்னால் 2006ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

தியாகி தீரன் சின்னமலையை போரின் மூலம் வெல்ல முடியாது என்ற நிலைக்கு வந்த ஆங்கிலேயர், சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து, சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று தூக்கிலிட்டனர். மாவீரர் தீரன் சின்னமலையை தூக்கி லிட்ட இடமான, சங்ககிரியில், அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர், விஜயலட்சுமி பழனிசாமி 30 மார்ச், 2012, அன்று இந்த மாமன்றத்திலே கோரிக்கை வைத்தார்.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக, நன்மைக்காக பாடுபட்ட நல்லோர் அனைவருக்கும் தனது நன்றியறிதலைக் காட்டி வரும் அரசு எங்கள் அரசு. இந்த உணர்வின் அடிப்படையில், உறுப்பினர் விஜயலட்சுமி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு அவர் தூக்கிலிடப்பட்ட இடமான, சங்ககிரியில், நினைவுச் சின்னம் விரைவில் அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எனது தலைமையிலான அரசின் இந்த முடிவை, இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையினைத் தெரிவித்து, இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

English summary
Tamil Nadu government will build a memorial for Dheeran Chinnamalai in Sangagiri, who was a Kongu chieftain and Palayakkarar who rose up in revolt against the British East India Company in the Kongu Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X