For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி வழக்கில் தயாநிதி மீது புகார் சொன்ன என்ஜிஓ திடீர் 'பல்டி'.. சிவசங்கரன் தான் குற்றவாளி என்கிறது!

By Chakra
Google Oneindia Tamil News

Dayanidhi Maran
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனுக்கு எதிராகப் புகார் கூறிவிட்டு, இப்போது 'பல்டி' அடிப்பது ஏன் என்று "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற என்ஜிஓ அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமாக இருந்த ஏர்செல் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தது.

ஆனால் லைசென்ஸ் தராமல் தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும், ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் சிவசங்கரன் குற்றம் சாட்டினார். அதன்படி, மேக்சிஸ் குழுமத்துக்கு ஏர்செல் கைமாறிய பிறகே, 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சை தயாநிதி மாறன் வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அதே போல இந்த விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறனுக்கு எதிராக டெலிகாம் வாட்ச் டாக்' என்ற என்ஜிஓ அமைப்பும், பொதுநல வழக்கு மையம் என்ற அமைப்பும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுக்களை தாக்ககல் செய்தன.

இந்த வழக்கில் "டெலிகாம் வாட்ச் டாக்', பொதுநல வழக்கு மையம் மற்றும் பத்திரிகையாளர் பரஞ்சாய் குஹா தாகூர்த்தா ஆகியோர் சார்பில் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வருகிறார்,

இந் நிலையில் டெலிகாம் வாட்ச்டாக்' அமைப்பின் செயலாளர் அனில் குமார் சமீபத்தில் Telecom Live என்ற பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில், இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் மீது தவறு இல்லை என்று எழுதியிருந்தார்.

அதே போல சிவசங்கரனுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 5ம் சிபிஐக்கு ஒரு கடிதமும் எழுதினார்.

இந் நிலையில் 2ஜி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். பணிக்கர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் ஆஜராகியுள்ள டெலிகாம் வாட்ச் டாக் அமைப்பின் செயலாளர் அனில் குமார் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு தயாநிதி நெருக்கடி கொடுத்தார் என்று அனில்குமார் தனது மனுவில் கூறியுள்ளார்.

ஆனால், அவரே சி.பி.ஐ. அலுவலகத்துக்கு பிப்ரவரி 5ம் தேதி அனுப்பிய கடிதத்தில், அதற்கு முரணான கருத்தைத் தெரிவித்துள்ளார். தயாநிதி மாறனுக்கு எதிராக ஒரு வார இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் புகார் அளித்ததாகவும், உள்நோக்கத்துடன் மாறனுக்கு எதிராக சிவசங்கரன் புகார் கூறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தயாநிதிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ள அனில் குமார், இந்த வழக்கில் சிவசங்கரனையே எதிரியாகச் சேர்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், புகார் கொடுத்த நபர் திடீரென்று அதற்கு மாறான கருத்தை எப்படிக் கூறலாம்? இதனால், அனில் குமாரின் நம்பகத்தன்மை மீது சிபிஐக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிய பிறகு, அவர் நிரபராதி என்று காண்பிக்க அனில் குமார் முயற்சிக்கிறார். அவர் நடந்து கொள்ளும் முறையை பார்த்தால், அவர் பொதுநலன் மனு தாக்கல் செய்ததன் நோக்கம் சந்தேகமாக உள்ளது. அவரது செயல், விசாரணையில் குறுக்கிடுவதாக அமைந்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் ஆஜராகும் பிரசாந்த் பூஷண் மேலும் இரு மனு தாரர்களுக்காக வாதாடுகிறார். அவர்கள் கூறும் புகார்களின் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகம் எழுகிறது என்றார் வேணுகோபால்.

இதைக் கேட்ட நீதிபதிகள், டெலிகாம் வாட்ச்டாக்' அமைப்பின் செயலாளர் அனில் குமாருக்கு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினர். தயாநிதி மாறன் நிரபராதி என்றும், சிவசங்கரன் குற்றவாளி என்றும் எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? என்று கேட்டனர்.

இந்த செயலுக்கான காரணம் குறித்து 7 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறும் அனில் குமாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில் அனில் குமார் எந்தச் சூழலில் சிபிஐக்குக் கடிதம் எழுதினார் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு முரணாகக் கடிதம் எழுத வேண்டிய நிர்பந்தம் என்ன என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

English summary
Taking serious note of an article that appeared in Telecom Live magazine and a letter written by NGO Telecom Watchdog to the CBI, giving clean chit to the former Telecom Minister, Dayanidhi Maran, in the 2G case, the Supreme Court on Wednesday sought an explanation from the Secretary of the NGO, Anil Kumar, to spell out the reason for writing such a letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X