For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதிய உணவு திட்டம்: கொண்டு வந்தது காமராஜரா, எம்.ஜி.ஆரா?-சட்டசபையில் கடும் வாக்குவாதம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது காமராஜரா, எம்.ஜி.ஆரா என்று சட்டசபையில் அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.திக.. உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

சட்டமன்றத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாத விவரம்,

தமிழ் அழகன் (தேமுதிக.): பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் இருந்தும் வறுமையின் காரணமாக குழந்தைகள் படிக்க வரவில்லையே என்று எண்ணி, பள்ளிக்கு வாருங்கள் உங்களுக்கு மதிய உணவு அளிக்கிறேன் என்று கூறி மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்

அமைச்சர் வளர்மதி (குறுக்கிட்டு): காமராஜர் ஒரு சில இடங்களில்தான் கொண்டு வந்தார். அரசின் திட்டமாக அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

அமைச்சரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதிய உணவு திட்டத்தை காமராஜர்தான் முதல் முதலில் கொண்டு வந்தார் என்றனர்.

அமைச்சர் வளர்மதி:
காமராஜர் கொண்டு வந்தது தனியார் பங்களிப்போடு நடந்தது. அந்த திட்டத்திற்காக கோதுமை, பால் பவுடர் போன்றவை அமெரிக்காவில் இருந்து வந்தது.

ரங்கராஜன் (காங்கிரஸ்): காமராஜர் கொண்டு வந்ததைத் தான் நீங்கள் சத்துணவு திட்டம் என்று சொல்கிறீர்கள்.

அமைச்சர் வளர்மதி: எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அரசே நடத்தினால் தான் அது அரசு திட்டம். தனியார் பங்களிப்போடு நடந்தால் அது அரசு திட்டமே இல்லை.

அமைச்சர் வைத்திலிங்கம்: அமெரிக்காவில் இருந்த வந்த கோதுமை, பால் பவுடர் ஆகியவற்றைக் கொண்டு ஒரு சில இடங்களில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தமிழ் அழகன் (தேமுதிக): மதிய உணவு திட்டத்தில் உள்ள நன்மையை கருத்தில் கொண்டு, அந்த திட்டத்திற்கு மேலும் மெருகேற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சத்தான உணவு அளிக்கிறேன், வாருங்கள் என்று கூறி சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார்.

அமைச்சர் கே.பி.முனுசாமி (குறுக்கிட்டு): எம்.ஜி.ஆரின் புகழை பரப்புவதுபோல் உறுப்பினர் பேசி, வேறு ஒரு தலைவருக்கு புகழ் சேர்க்கிறார். இந்த திட்டத்தை எம்.ஜி.ஆர். மெருகேற்றினார் என்று உறுப்பினர் சொல்கிறார். திட்டத்தை கொண்டு வந்தவரே எம்.ஜி.ஆர். தான். காமராஜரின் மதிய உணவுத் திட்டத்துக்கும், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

சந்திரகுமார் (தேமுதிக): உறுப்பினர் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுவதுமாக தெரிந்துகொள்ளாமல் அமைச்சர் பதில் சொல்கிறார்.

கோபிநாத் (காங்கிரஸ்): ஒரு சில இடங்கள் என்று சொல்லாதீர்கள். காமராஜர் ஆட்சியிலிருந்து இறங்கும் வரை 28,000 பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. தவறாகப் பேச வேண்டாம். திட்டத்தை தொடங்கியது காமராஜர் தானே இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அமைச்சர் செங்கோட்டையன்: காமராஜர் திட்டம் வேறு, எம்.ஜி.ஆர். திட்டம் வேறு. சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்த போது பள்ளிக் குழந்தைகளை பிச்சையெடுக்க வைக்கும் திட்டம் என்று கிண்டல் செய்தனர். அரசு அதிகாரிகள் திட்டத்தை செயல்படுத்த நிதி இல்லை என்றார்கள். அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். பிச்சையெடுத்தாவது இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று கூறி, திட்டத்தை செயல்படுத்தி காட்டினார்.

அமைச்சர் வளர்மதி: காமராஜர் ஆட்சிக்கு முன்பே நீதிக்கட்சி இருந்த போதே அப்போதைய சென்னை மாகாணத்தில் மதிய உணவு திட்டம் இருந்தது. காமராஜர் கொண்டு வந்தது அதன் தொடர்ச்சி தான்.

சபாநாயகர் ஜெயக்குமார்:
தமிழ் அழகன் வேற விஷயத்திற்கு வாருங்கள்.

தமிழ் அழகன் (தேமுதிக): பள்ளிகளில் சத்துணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த பள்ளிகளிலும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் கே.வி.ராமலிங்கம் (குறுக்கிட்டு): எல்லா பள்ளிகளிலும் வாழைப் பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் வளர்மதி: வாழைப் பழம் வழங்குவது தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நாங்கள் அதற்கு பதில் சுண்டல், உருளை கிழங்கு, கொண்டை கடலை உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகிறோம். உறுப்பினர் எந்த பள்ளியில் வழங்கவில்லை என்று தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதை விட்டு விட்டு வழங்கவில்லை என்று பொதுவாக கூறக்கூடாது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

எம்.ஜி.ஆர். கோவில் தான்..பட்டா போட வரக்கூடாது:

சட்டசபையில் சில நாட்களுக்கு முன் தேமுதிகவினர் எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தலாமா? என்ற பிரச்சனை எழுந்தபோது அக் கட்சியின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். கோவிலைப் போன்றவர். யார் வேண்டுமானாலும் வரலாம் என்று கூறியிருந்தார்.

இதற்கு அமைச்சர் பா.வளர்மதி நேற்று தனது பதிலுரையில், எம்.ஜி.ஆர். கோவில் தான். ஆனால் பக்தியோடு வரவேண்டும். பட்டா போட வரக்கூடாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த ஆட்சியில் செல் அரித்துப் போன செல்லாத வாரியமாக, மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் இருந்தது. அதனால் அந்த வாரியம் கலைக்கப்பட்டுவிட்டது. அதற்குப் பதிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக ஒரு நல வாரியம் அமைக்கப்படும் என்றார்.

English summary
Who introduced mid-day meal in schools? Karamaraj or MGR?, this was the debate took place in TN assembly yesterday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X