For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்ப் புத்தாண்டை மாற்றி தமிழறிஞர்களின் மனதைப் புண்படுத்தியவர் கருணாநிதி-ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம் பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அமைத்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழக அரசின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில்,

தாயிற்சிறந்த கோவிலும் இல்லை. தமிழ் மொழியிற் சிறந்த தெய்வமும் இல்லை என்பதற்கு ஏற்ப சித்திரை திருநாளாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வண்ணம் நடைபெறும் இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று காலையில் இருந்து கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய தமிழ் அறிஞர்களுக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்னும் பழமையுடைய இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியை பேசுபவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கான அடிப்படை காரணங்கள் பல உள்ளன.

சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது வாண நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஒரு ஆண்டு ஆகும். சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது.

சூரியன் முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதில் இருந்து அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும். சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் அந்த மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும்.

உதாரணமாக சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதேபோன்று வைகாசி மாதத்தில் பவுர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன.

சித்திரையே வா, நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால் சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என்று தெய்வத்திரு மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழ கால கல்வெட்டுகளிலும் கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளிலும் 60 ஆண்டுகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அகத்தியர் பன்னிராயிரத்தில் பங்குனி மாதம் கடைசி மாதம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நக்கீரரும் இந்த கருத்தை கூறி இருக்கிறார். ராமலிங்கம் பிள்ளையும் சித்திரை மாத தொடக்கத்தை தனது வாழ்த்து பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக் கழகம் 1912-ல் புதுப்பித்த தமிழ் பெயர் அகராதியிலும் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை காலமே முதலாவது பருவம் என ஜீவகசிந்தா மணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லபோனால் தமிழ் புத்தாண்டு தை மாதம் முதல்நாள் என்று திடீரென்று அறிவித்த முன்னாள் முதல்வர் கருணாநிதியே சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டுக்கு பலமுறை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1990-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் காவல் துறை குறித்த ஒரு வினாவுக்கு பதில் அளிக்கும்போது சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல்நாள் அமைய இருக்கின்றன என்றும் கைதிகளின் தண்டனை காலத்தை குறைப்பது குறித்து 110-வது விதியின் கீழ் அறிக்கை அளிக்கும்போது தமிழ் புத்தாண்டு அன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் அறிவித்துள்ளார்.

அதாவது சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டு இருக்கிறார். 1935-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம், கிறிஸ்துவ பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவு என்று மறைமலை அடிகள் கூறியதாக 5-வது உலக தமிழ் மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினாக்கினியன் குறிப்பிட்டுள்ளார்.

மறைமலை அடிகள் தை மாதம் பற்றியோ தமிழ் புத்தாண்டு பற்றியோ குறிப்பிட்டதாக தெரியவில்லை. அந்த கூட்டத்தில் திரு.வி.க. உள்பட மிகப்பெரிய தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் அனைவரும் எடுத்த முடிவு திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் என்பதுதான்.

உண்மை இவ்வாறு இருக்க தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம் பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அமைத்தார் கருணாநிதி.

யார் கேட்டது இந்த சட்டத்தை. இந்த சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன். இந்த சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை. இதிலிருந்தே காரணம் நோக்கமின்றி விளம்பரம் மோகத்தின் அடிப்படையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது தெளி வாகிறது.

எனவேதான் நான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பொதுமக்கள் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் வானியல் அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டும் கருணாநிதி கொண்டு வந்த அந்த சட்டத்தை நீக்கம் செய்தேன் என்றார் ஜெயலலிதா.

English summary
Karunanidhi changed Tamil new year for self publicity, slammed CM Jayalalitha. She attended Tamil new year celebration in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X