For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரிவருவாய் இழப்பீட்டுத் தொகையை நிறுத்தக் கூடாது: மன்மோகனுக்கு ஜெ. கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சரக்கு, சேவை வரியை அமல்படுத்தும் வரை வரி வருவாய் இழப்பீட்டு தொகையை நிறுத்த கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

வருவாய் இழப்பீட்டுத் தொகை

மத்திய விற்பனை வரி விகிதத்தை குறைத்திருப்பதால் 2010-2011-ம் ஆண்டு மற்றும் அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்வது தொடர்பாக நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இதுகுறித்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் ஆட்சேபங்கள், மாநில நிதியமைச்சர்களின் உயர் அதிகார குழுத் தலைவர் மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைப்பாட்டிலேயே மத்திய அரசு நீடிப்பது துரதிருஷ்டவசமானது. 2010-2011-ம் ஆண்டிற்கும் வருவாய் இழப்பீட்டுத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதிலும் மதிப்புக் கூட்டு வரி விகிதத்தை 4 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக உயர்த்தியதன் மூலம் கிடைத்த கூடுதல் வருவாயை கழிப்பதன் மூலம் அந்த நிதியாண்டிற்கான உரிய இழப்பீட்டுத் தொகை திட்டமிட்டே கட்டப்படுத்தப்பட்டது.

மத்திய விற்பனை வரி இழப்பீட்டை, மதிப்புக் கூட்டு வரி விகிதத்தை திருத்தி அமைத்ததன் மூலம் கிடைத்த கூடுதல் வருவாயுடன் இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை ஒரு தலைபட்சமானது. ஏற்றுக் கொள்ள இயலாதது. மத்திய விற்பனை வரி விகிதத்தை குறைப்பதற்கும், மதிப்புக் கூட்டு வரி விகிதத்தை உயர்த்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மத்திய விற்பனை வரி இழப்பீட்டுத் தொகைக்கான நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இது இடம் பெறவில்லை.

விற்பனை வரி ஈட்டுத் தொகையை நிறுத்தக் கூடாது

இரண்டாவதாக, மத்திய விற்பனை வரி ஈட்டுத் தொகையை 2011-2012 முதல் நிறுத்தி வைக்கும் முடிவும் கடும் ஆட்சேபத்திற்குரியது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுக முன்னோடியாகவே மத்திய விற்பனை வரி விகிதம் குறைக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி குறித்து ஒரு மித்த கருத்தை உருவாக்குவதோடு, உரிய நடைமுறைகள் கொண்டு வருவதும் மத்திய அரசின் பொறுப்பாகும். இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகம் செய்ய தவறியதால் ஏற்பட்ட இழப்பை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்படும் வரை மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய விற்பனை வரி விகித குறைப்பினால் கடுமையான வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளது. மத்திய அரசின் இழப்பீட்டை கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னரும் 2007-08 மற்றும் 2010-11 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ. 2,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வரி இழப்பால் வருவாய் ஆதாரம் சரிந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இது ஆண்டுக்கு ரூ. 1,500 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் ஒருதலை பட்சமான நியாயமற்ற நடவடிக்கைகள் கூட்டாட்சித் தத்துவ முறைக்கு ஏதிரானவை. எனவே 1.4.2010 முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அமல்படுத்தாமல் இருப்பதை மத்திய விற்பனை வரி இழப்பீட்டுத் தொகையை நிறுத்துவதற்கான காரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மாநிலங்களுக்கு கணிச மான வருவாய் இழப்பு ஏற் படுவதால், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்படும் வரை மத்திய அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண் டும். 2010-2011-ம் ஆண்டிற் கான மத்திய விற்பனை வரி இழப்பீட்டுத் தொகையுடன் மதிப்புக்கூட்டு வரியை 4 விழுக்காடாக இருந்து 5 சதவீதமாக விழுக்காடாக உயர்த்தி இருப்பதை தொடர்புபடுத்தக் கூடாது. மேலும் சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்த மேலும் தாமதமாகும் பட்சத்தில் மத்திய விற்பனை வரி விகிதத்தை ஏற்கனவே இருந்தது போலவே 4 சதவீதம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்தி உடனடியாக தீர்வு காண்பார் என நான் நம்புகிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government on Saturday said that the non-implementation of the Goods and Service Tax (GST) from April 1, 2010 should not be the ground for stopping Central Sales Tax compensation to states, whose revenue loss is "substantial and permanent
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X