For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்றுவதற்கு 'அறுவை சிகிச்சை' தேவை: கி.வீரமணி பரபரப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Veeramani
சென்னை: திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்றுவதற்கு 'அறுவை சிகிச்சை' தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை காப்பதற்கு இயக்க பாசம், கொள்கை பாசத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மற்ற பாசங்கள் (பிள்ளை பாசம்) குறுக்கிடாமல் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவில் பொருளாளரும், இளைஞரணியின் பொறுப்பாளருமான மு.க.ஸ்டாலினுக்கும், மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க. அழகிரிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந் கி.வீரமணி திமுக தலைமைக்கு "மிக அவசரம் அவசியம்' என்ற தலைப்பில் ஒரு வேண்டுகோள் ஒன்றை அறிக்கை மூலம் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

திராவிடர் இயக்க நூறாவது ஆண்டு நடக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில், திமுகவின் பொறுப்பாளர்களாக உள்ள பலரின் நடவடிக்கைகளைப் பற்றி ஏடுகளில், ஊடகங்களில் வரும் பல்வேறு செய்திகள் நம்மைப் போன்ற தாய்க் கழகத்திற்கும், உண்மையான திராவிடர் இயக்கப் பற்றாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அளவற்ற, வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பத்தையும், மனவேதனையும் தருகிறது.

ஏற்கனவே திமுகவை அழிப்பதே தமது பிறவிப்பயன் என்ற ஊடகங்களுக்கு அவல் பாயாசம் சாப்பிட்டதுபோல சில நிகழ்வுகள் கிடைப்பதோடு விரிசல் என்று ஏகமாக விளம்பரப்படுத்தி, கட்டடத்தையே, கட்டுமானத்தையே காணாமல் போகச் செய்ய இத்தருணத்தை விட்டால் வேறு நல்ல தருணம் வாய்க்காது என்று கருதி, பரபரப்புப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன.

அய்யா அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் கூறிய அறிவுரை கல்லில் செதுக்கியதாகும். ''திமுகவை எதிரிகளால் அழிக்க முடியாது. இவர்களே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டால் தான் முடியும். திமுக கெட்டியான பூட்டு, அதற்குக் கள்ளச்சாவி போட்டுவிட யாரையும் அனுமதிக்கக் கூடாது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் முன்னிரண்டும்கூட முக்கியமில்லை. கட்டுப்பாடுதான் முக்கியம். மிகவும் முக்கியம். எனவே இயக்கத்தை, கட்சியைக் காப்பாற்ற தயவு தாட்சண்யம் காட்டாமல் கட்டுப்பாட்டிற்காக தேவையான நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது'' என்றார்கள்.

இனமானப் பேராசிரியர் அன்பழகன், அப்போது தலைமையை எதிர்த்துக் கூறிய ஒரு கருத்துக்காக அவர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அவரை கண்டித்து அறிக்கைவிடத் தயங்கவில்லை தந்தை பெரியார்.

அப்போது அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள். ''எனக்கு அன்பழகன் மீது கோபமோ, வெறுப்போ இல்லை. கழகக் கட்டுப்பாட்டிற்காகத்தான் இப்படி எழுதிட வேண்டியுள்ளது. தலைமை இடத்தில் அன்பழகன் இருந்து கருணாநிதி இப்படி கூறியிருந்தால் அவர் மீதும் கட்டுப்பாட்டை மீறிக் கருத்துக் கூறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருப்பேன்'' என்று விளக்கமாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள்.

திமுக என்ற இயக்கம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அன்று 1969-ல் தந்தை பெரியார் விளக்கியதை இப்போது அவர் தம் தொண்டன் என்ற முறையில் அதேபோல் திமுக என்ற மகத்தான திராவிடர் இயக்கத்தை அதற்கு சோதனை ஏற்படும் கட்டத்தில் அதனை நினைவூட்டும் கடமையும், பொறுப்பும் உண்டு நமக்கு என்பதால் இதனை எழுத நேரிட்டு விட்டது.

ஆளும் கட்சியின் மீது பலவகைகளிலும் அதிருப்திகள் தலை எடுக்கும் இக்காலகட்டத்தில் அவற்றை மனமாற்றம் செய்யும் வகையில் திமுகவில் உள்கட்சி பிரச்சனை என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதை அரசியலில் அனைத்தும் அறிந்த கலைஞருக்கு தெரியாததல்ல.

மேலும் அந்த அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். ''கலைஞர் தலைமையை நான் ஏற்கமாட்டேன் என்று கூட்டத்திற்கு தலைமை வகித்த க.அன்பழகன் என்று சொல்லியிருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, இதற்கு ஒழுங்கு நடவடிக்கையை திமுக கட்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுத வேண்டும் என்பதுபோல கட்சியின் மரியாதை குறையுமானால் தலைக்கு தலை தன் இஷ்டப்படி பேச நடக்க இடம் கொடுத்து வந்தால் பொதுத் தொண்டுக்கு கண்டிப்பாய் அதில் இடம் இருக்காது. கட்சித் தலைவரின் முதற்கடமை கட்சியின் கவுரவத்தை காப்பதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கட்சி சாதாரண கட்சியானாலும் நான் உப தலைவரை நீக்கினேன். காரியதரிசியை நீக்கினேன். அதனால் எனக்கோ, கட்சிக்கோ ஒரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை.

பொதுமக்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். தி.மு.கழகத்திற்கு உழுது பயிரிட்டவர் அறிஞர் அண்ணாதான். இதற்கு நீர்பாய்ச்சி நல்ல விளைச்சலை உண்டாக்கியவர் கலைஞர்தான். கட்சிக்கு கலைஞர் இல்லாவிட்டால் பதவிக்கு ஏராளமான மெம்பர்கள் கிடைக்கலாமே ஒழிய, கட்சியை கட்டிக் காக்க கட்சி அங்கத்தினர்களில் பத்து பேர் ஆதரவை உடைய அங்கத்தினர் யாருமில்லை என்பதுதான் என் கருத்து.

இதை நான் திமுக அங்கத்தினர்களுக்கே சொல்கிறேன். எனவே இன்று திமுகவிற்கு வேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை நடவடிக்கைதான். திமுகவினால் மக்களுக்கு ஆக வேண்டிய காரியம் ஏராளம் இருப்பதால் இதை நானாக எனது சொந்த முறையில் கடமையை முன்னிட்டு எழுதுகிறேன். அங்கத்தினர்கள் மன்னிப்பார்களாக''.

14.3.1969 அன்றைய விடுதலையில் கையொப்பமிட்டு தந்தை பெரியார் அறிக்கையில் காணப்படும் ஒரு சிறு பகுதி இது. மறுநாளும் இதுகுறித்த நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் பெரியார்.

திமுக என்பது வெறும் கண்ணீரால் மட்டுமே வளர்ந்த இயக்கம் அல்ல. செந்நீர் விட்டும், பல்லாயிரம் தொண்டர்கள், தோழர்கள் தியாகத்தால் வளர்ந்தோங்கிய மகத்தான ஆலமரம் ஆகும். விழுதுகள் அதனை காப்பாற்றிட மட்டுமே பயன்பட வேண்டும். அதன் வேரினை அசைக்க என்றும் வீணர்களுக்கு விழுதுகளே துணை போகக்கூடாது.

தெரிந்தோ, தெரியாமலோ நோயாளியை காப்பாற்றிட அறுவை சிகிச்சை அவசியம். சில நேரங்களில் இயக்க கட்டுப்பாட்டை காப்பாற்றிட, கடும் சிகிச்சை, அது அறுவை சிகிச்சையானாலும் செய்துதானே தீரவேண்டும். நோயாளியை நோயிலிருந்து காப்பாற்றிட.

இயக்கமே எப்போதும் பிரதானமானது என்பதை அறியாதவர் அல்ல அதன் தலைவர் கலைஞர். இயக்கம் இருந்தால்தான் எவருக்கும் மதிப்பும், மரியாதையும் இந்த எண்ணம் எல்லோருக்கும் புரியும். எனவே கட்டுப்பாட்டை காப்பாற்ற இயக்க பாசம்- கொள்கை பாசத்திற்கு மட்டுமே முக்கியத்தவம் கொடுத்து மற்ற பாசங்கள் குறுக்கிட இடந்தராமல் காப்பாற்றிட முன்வரவேண்டும் என உரிமையுடன் உண்மை உணர்வுடன் தந்தை பெரியாரின் சிந்தனை வழிபட்ட நிலையில் கேட்டுக் கொள்கிறோம்.

திமுக வரலாற்றில் அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியின் உழைப்பு பல சோதனைகளை வென்று அவ்வியக்கத்தை காப்பாற்றி இருக்கிறது. இப்போதும் விரைந்த விவேகமான முடியும் நடவடிக்கையும்தான் இன எதிரிகளை வாயடைக்க செய்யும் நிலை ஏற்படும்.

இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

English summary
A political Surgery is required to save DMK, said DK leader Veeramani. He was reacting to the feud between MK Azhagiri and Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X