For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமங்களில் வீடுகளில் கழிவறை கட்ட உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு: ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: கிராமங்களில் முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் வீடுகளில் கழிவறை கட்ட மாநில அரசு வழங்கி வரும் உதவித்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சுகாதார புரட்சியின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாட்டை உள்ளடக்கிய தூய்மையான கிராம இயக்கம் என்ற ஒரு திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2003ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுத்தல், மழை நீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, மனிதக்கழிவு டன் இணைந்த எரிவாயு கலன் அமைத்தல், தனி நபர் இல்லங்கள் மற்றும் பள்ளிகளில் சுகாதார வசதி ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

திறந்தவெளி மலம் கழித்தலை அகற்றுதல், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் மூலம் நூறு விழுக்காடு சுகாதாரத்தை எய்துகின்ற ஊராட்சிகளுக்கு அரசின் சார்பில் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, இந்தத் திட்டம் 2006-2007ம் ஆண்டு முதல் திமுக அரசால் செயல்படுத்தப்படவில்லை.

நான் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், சுகாதார கிராமங்களை உருவாக்குகின்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு நான் உத்தரவிட்டேன். மேலும், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மகளிர் பொது சுகாதார வளாகங்கள், 2006ம் ஆண்டுக்கு பின்னர் சரிவர பராமரிக்கப்படாததால் அவை பயன்படுத்தப்படாமல் இருந்ததை கருத்தில் கொண்டு, நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 170 கோடி ரூபாய் செலவில், 12,793 மகளிர் சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்பட்டன. தற்போது இந்த மகளிர் வளாகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சுகாதார கிராமங்களை உருவாக்கும் வண்ணம், முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. தற்போது ஒரு இல்லத்திற்கான தனி நபர் கழிவறை கட்டும் பொருட்டு, மத்திய அரசின் சார்பில் 2,200 ரூபாயும், மாநில அரசின் சார்பில் 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதில் பயனாளியின் பங்குத் தொகை 300 ரூபாய் ஆகும். ஆக மொத்தம் 3,500 ரூபாய் செலவில் தனி நபர் இல்லக் கழிவறை கட்டப்படுகிறது.

தற்போது, தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள 3,500 ரூபாய் என்பது போதுமானதாக இல்லையென்றும், இந்தத் தொகையை வைத்து, தனி நபர் இல்லக் கழிப்பறையை முழுமையாக அமைத்திட இயலாது என்றும், இந்தத் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன.

இந்தக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும், சுகாதார கிராமங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தினை பூர்த்தி செய்யும் வகையிலும், ஒவ்வொரு தனி நபர் இல்லக் கழிப்பறை அமைப்பதற்காக, மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் தொகையினை 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்படி, மாநில அரசின் பங்கு 2,500 ரூபாய் எனவும், மத்திய அரசின் பங்கு 2,200 ரூபாய் எனவும், பயனாளியின் பங்கு 300 ரூபாய் எனவும் இருக்கும். இதன்படி, தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தொகை 5,000 ரூபாய் என உயர்த்தப்படுகிறது. எனது அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு முழுவதும் சுகாதார கிராமங்கள் உருவாகும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் என்றார் ஜெயலலிதா.

English summary
The state government has embarked on a concerted drive to tackle the problem of open defecation. Under the Total Sanitation Campaign (TSC), the government has raised the subsidy for individual household toilets from Rs 1,000 to Rs. 2,500
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X