For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதிவாரி கணக்கெடுப்பின்போது எந்தெந்த பிரிவுகளில் பதிவு செய்ய வேண்டும்?

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பின்போது எந்தெந்த பிரிவுகளை பதிவு செய்யவேண்டும் என்று அந்தந்த சமுதாய அமைப்பின் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக தினந்தோறும் பல்வேறு சாதி அமைப்புகளும் பத்திரிக்கைகளில் விளம்பரங்களும் செய்து வருகின்றனர்.

பார்க்கவ குலம்:

இது குறித்து பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டி.ஆர்.பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரையும் ஒன்று சேர்க்க மத்திய அரசால் எடுக்கப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு நல்ல வாய்ப்பு. இவ்வாறு பதிவு செய்தால் நமது சமுதாயத்தின் பலத்தை அரசுக்கு தெரியப்படுத்தலாம். இதுவரை இழந்த அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பெரிதும் பயன்படும்.

எனவே, இந்த கணக்கெடுப்பை நமது சமுதாயத்தினர் அனைவரும் முறையாக பயன்படுத்தி உட்பிரிவுகளை தவிர்த்து கண்டிப்பாக ஒரே மாதிரியாக சமுதாய பொதுச் பெயரான பார்க்கவ குலம் என்றே பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாடார்:

தட்சணமாற நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாண்ட பரம்பரைக்கு சொந்தக்காரர்களான நாடார்கள், கால மாற்றத்தில் ஒடுக்கப்பட்டு மீண்டும் எழுச்சி பெற்று உழைப்புக்கு உதாரணமாக திகழும் நாடார்கள் பல உட்பிரிவுகளில் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க அரசு எடுத்து வரும் சாதி வாரி கணக்கெடுப்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வாய்ப்பை நாம் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாடார்' இனத்தின் உண்மையான நிலையை நிலை நிறுத்தவும், அரசு உரிமைகளை பெற்றிடவும், அங்கீகாரம் பெற்றிடவும், சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக நடைபெறும் சாதி வாரி கணக்கெடுப்பில் உட்பிரிவுகளை மறந்து நாம் அனைவரும் "நாடார்'' என்று பதிய வேண்டும்.

நாடார் இன உட்பிரிவுகளான சாணார், கிராமணியர், சத்திரியர், மூப்பர், முக்கந்தர், நட்டாத்தி, கொடிக்காலர், கருக்குப்பட்டையர், சேர்வை போன்று இன்னும் சில உட்பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

ஆனால் நாம் அனைவரும் கண்டிப்பாக நாடார்' என்றே பதிய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் தான் நமது பலத்தை அரசுக்கு தெரியப்படுத்த முடியும். அரசு துறைகளில் நமக்கு உள்ள உரிமைகளை பெறவும், ஆட்சியில் நமது சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் பெறவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், சாதிவாரி கணக்கெடுப்பில் நாம் அனைவரும் தாமாகவே முன்வந்து நாடார் என்றே பதிவு செய்து ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் நமது சமுதாயத்தவர்கள் அனைவரும் உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பில் நாடார்' என்று பதிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி நாடார் என்று பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அருந்ததியர்:

அருந்ததியர் நல சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருந்ததியர்கள் அனைவரும் நம்மில் பல பிரிவுகள் இருந்தாலும் இந்த கணக்கெடுப்பில் அருந்ததியர் என ஒரே இனமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக எம்.எல்.ஏ பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாதிவாரி கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியான நீதி கிடைக்க இந்த கணக்கெடுப்பு பெரிதும் உதவிடும்.

எனவே ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மிகவும் கவனத்துடன் இந்த கணக்கெடுப்பில் பங்கு கொள்ளவேண்டும். சில மாவட்டங்களில் கணக்கெடுப்பாளர்கள் பட்டியலில் உள்ள 24 கேள்விகளுக்கும் விடைகளை கேட்காமல் வெறும் பெயர் மற்றும் முகவரியை மட்டும் பதிந்துவிட்டுச் செல்வதாக வரும் புகார் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம் மாநில அளவிலும் மத்திய அளவிலும் இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்க வேண்டும் என்று போராடி வரும் இச்சூழலில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை பெரும் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் அணுக வேண்டும்.

முஸ்லிம்களை பொறுத்த வரையில் மதம் என்ற கேள்விக்கு இஸ்லாம் என்று குறிப்பிடுவதே சரியானது. முஸ்லிம் என்று பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.

இஸ்லாத்தில் சாதிய பிரிவுகள் இல்லையென்றாலும் முஸ்லிம்களின் பல்வேறு பிரிவினரின் சமூக நிலையை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் லெப்பை, (தமிழ்-உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர் உள்பட) தக்னி, தூதே குலா, மாப்பிள்ளா, அன்சர், ஷேக், சையத் என ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில், முதல் நான்கும் தேசிய அளவில் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனவே, தமிழகத்தில் கணக்கெடுப்பாளர்களிடம் சாதி என்ற கேள்விக்கு லெப்பை, தக்னி, தூதேகுலா, மாப்பிள்ளா ஆகிய நான்கில் ஒன்றை இடம்பெறச் செய்தால் மட்டுமே மத்திய-மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டுச் சலுகையை பெறமுடியும்.

ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோர் லெப்பை என்ற பிரிவின் கீழ் வருவதால் லெப்பை என்றே குறிப்பிடவும்.

முஸ்லிம்கள் அனைவரும் கண்காணிப்புடன் செயல்பட்டு எந்தவொரு முஸ்லிம் பெயரும் விடுபடாமல் பதிவு செய்வதில் முழுக்கவனம் செலுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாத கடமையாகும் என்று கூறியுள்ளார்.

தேவர்:

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு பதிவின் போது ‘தேவர்’ என்று பொதுமக்கள் சொன்னாலும் அதை அலுவலர்கள் பதிவு செய்ய மறுத்து அப்படி ஒரு ஜாதியே இல்லை என்று சொல்லி பதிவு செய்ய மறுப்பதாக பல இடங்களில் இருந்து புகார் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.

‘தேவர் இனம்’ என 1994ம் ஆண்டே முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டும் இன்னும் அதை கணக்கெடுப்பு அதிகாரிகள் நடைமுறைபடுத்தாதது வியப்பாக உள்ளது.

கணக்கெடுப்பு ஊழியர்கள் பலரும் தேவர் இனத்தில் உள்ள உட்பிரிவுகளை மட்டும் பதிவு செய்வதால் எதிர்கால சந்ததிகளின் கல்வி, வேலை வாய்ப்பு, போன்ற சலுகைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே தமிழகத்தில் வாழும் முக்குலத்தோர் இன மக்கள் மறவர் தேவர், கள்ளர், தேவர், அகமுடையார் தேவர் இன மக்களை தேவர் சமுதாயம் என்று பதிவு செய்திருக்கிறார்களா, என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து கையெழுத்திடவேண்டும்.

சென்னை போன்ற புறநகர்களில் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுகளுக்கு மே முதல் தேதி முதல் சென்று பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கோடை மாத பள்ளி விடுமுறைக்காக பலரும் தங்கள் சொந்த ஊருக்கு விடுமுறையில் சுற்றுலா சென்றுள்ளனர். எனவே பல வீடுகளில் ஆள் இல்லாமல் இருப்பார்கள். அவர்களும் இதில் முழுமையாக சேர மாற்று ஏற்பாடு திட்டத்தை வகுத்து, பட்டியலில் தேவர் சமுதாயத்தை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பழங்குடியினர்:

பழங்குடி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குறிஞ்சி கேசவபாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், பழங்குடியின மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடோடிகளாக 36 வகை பட்டியல் பழங்குடியினரும், 6 வகை பட்டியலில்லா பழங்குடியினரும் உள்ளனர். பழங்குடியினர் அனைவரும் அவரவர் உட்பிரிவுகளை சொல்லி பதிவு செய்ய வேண்டும். பழங்குடியினரை ஒரே சாதியினராக கருதும் வகையில் குறவன் என சொல்லி பதிவு செய்து தொண்மை பழங்குடியினர் என கூறவேண்டும் என்று கூறியுள்ளார்.

வன்னிய குலம் சத்திரியா:

வன்னியர் குல சத்திரியா கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியகுல சத்திரியா சமூகத்தினர் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். இவை பல சமூகத்தினருக்கு சாதி பெயராகவே உள்ளது. இதை கண்துடைப்பு வேலையாக செய்யக்கூடாது. உடனடியாக சாதி மற்றும் மதத்தலைவர்களை அழைத்து பல்வேறு கட்டங்களாக அனைத்து சாதி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உரிய முறையில் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தேவேந்திர குலம்:

மள்ளர் நாடு சமூக நல நிறுவன தலைவர் சுப. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தேவேந்திரர்கள் தங்களின் உட்பிரிவுகளான காலாடி, குடும்பன், மூப்பன், பண்ணாடி, வாய்காரர், கடையர், வாதியார் என்பதற்கு பதிலாக ஒரே இனமாக தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்டங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் தேவேந்திர குலத்தான் என அதிகாரிகள் பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், எனவே தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டுமே தவிர ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் எஸ்.சி. என பதிவு செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

English summary
The socio-economic caste census began in Tamil Nadu. About 30,000 staff will be involved in the drive and pose 32 questions to ascertain the socio-economic condition of the people, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X