மட்டக்களப்பு: இலங்கையின் கிழக்கு பகுதியான மட்டக்களப்பில் சிங்கள எல்லையோர கிராமங்களில் தமிழர்களின் மாடுகள் விஷம் வைத்து கொல்லப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
கிழக்குப் பகுதியான மட்டக்களப்பில் தமிழர்களே பெரும்பான்மையினராக இருக்கின்றனர். சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் எல்லையோர கிராம தமிழர்களிடமிருந்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. அரியநேத்திரனிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழர்களின் விளை நிலங்களில் இலங்கை படையினரால் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த இடங்களில் கட்டப்படும் மாடுகள் காணாமல் போவது தொடர் கதையாகிவிட்டது. மேலும் சுந்தரராஜா என்பவரின் 6 மாடுகளை விஷம் வைத்துக் கொன்றுள்ளனர். குறிப்பாக மாட்டுப் பண்ணை வைத்திருந்த பாலாத்தப்பிள்ளை என்பவரது 75 மாடுகளுமே காணாமல் போய்விட்டன. இதற்கு குடியேற்றப்பட்ட சிங்களவர்களே காரணம் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
தமிழர்களை லட்சக்கணக்கில் கொத்து கொத்தாகப் படுகொலை செய்த சிங்களவர்களிடம் தமிழரின் மாடுகள் மட்டும் மிச்சம் இருக்குமா என்பதுதான் புகார் கொடுத்தோரின் ஆதங்கமாக இருக்கிறது.





















